பாஜக தலைவர் அமித் ஷாவை 8 மத்திய அமைச்சர்கள் சந்தித்துபேசியுள்ள நிலையில், விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக தலைவர் அமித்ஷாவை டெல்லியில் அவரது இல்லத்தில் அருண்ஜேட்லி, நிர்மலாசீதாராமன், நரேந்திரசிங் தோமர் உள்ளிட்ட 8 மத்திய அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர். இது, குஜராத் சட்டமன்றத்தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனை என்றபோதிலும், மத்திய அமைச்சரவை மாற்றம் தொடர்பாகவும் விவாதிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. பாதுகாப்புத் துறையை தற்போது கூடுதல்பொறுப்பாக வகித்து வந்தாலும், நீண்டகாலத்திற்கு அந்த நிலை நீடிக்காது என தாம் நம்புவதாக பின்னர் அருண் ஜேட்லி பின்னர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில் விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என ஊகத்தகவல்கள் வெளியாகியுள்ளன. அனில் மாதவ் தவே மறைவைத் தொடர்ந்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். வெங்கய்யா நாயுடு வகித்து வந்த தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தை கூடுதல்பொறுப்பாக ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கவனித்துவருகிறார்.

வெங்கய்யா நாயுடு வசமிருந்த நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித்துறை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையை மாற்றியமைப்பதுடன், அதிமுக மற்றும் ஐக்கிய ஜனதா தளத்திற்கு மத்திய அமைச்சரவையில் இடம்வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. 7 ஆளுநர் பதவியிடங்கள் காலியாக இருப்பதால் சிலமூத்த அமைச்சர்கள் ஆளுநர் பொறுப்புகளுக்கு நியமிக்கப் படலாம் எனவும் கூறப்படுகிறது.

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி சீனா புறப்பட்டுச்செல்லும் முன் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்றும், நாளை அல்லது நாளை மறுநாள் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply