முரசொலி பவளவிழாவில் பேசிய ஸ்டாலின் தான் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் என்பதனை மறந்து தன் உரை முழுவதும் பாஜகவையே தாக்கி பேசியுள்ளதன் மூலம் தமிழகத்தில் பாஜக வின் வளர்ச்சி தாக்கம் அவரை அப்படி பேச வைக்கிறது.

 

மோடி அரசு மோசடி அரசாம். சொன்னது யார்? அன்று சர்க்காரியா கமிஷனால் விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர்கள் என்றும், ஆகாயத்தில் பறந்து பறந்து பூச்சி மருந்து அடித்ததாக கொள்ளையடித்ததாக நிரூபணம். ஆனால் திமுகவின் வாரிசுத்தலைவர் நம்மை மோசடி ஆட்சி என்கிறார், 2G நாயகர்கள் நம்மை விமர்சிப்பது விந்தையே. திராவிட இயக்க வாரிசுகள் "திகார்" ஜெயிலுக்கு போன வரலாறு மறக்குமா?

 

தமிழ் தமிழ் என்று சொல்லி அரியணை ஏறியவர்கள் ஆறுமுறை ஆண்டபோதும் தமிழை அரியணை ஏற்றினார்களா? தமிழ் இன காவலர்கள் என்று கூறிக்கொண்டு இலங்கையில் தமிழினம் அழிந்த போதும் பதவிசுகத்தால் அதற்க்கு துணை போனவர்கள், தமிழ் மக்கள் வாழ்வதற்கு என்று சொல்லி வந்தவர்கள் தன் மக்களை வாழவைத்துக் கொண்டார்கள். 

 

மோடி கருப்புப்பணத்தை ஒழிக்கவில்லையாம். சுவிஸ் வாங்கி பணத்தை கொண்டு வரவில்லையாம். ஒவ்வொரு குடிமகன் கணக்கிலும் 15 லட்சம் டெபாசிட் செய்யவில்லையாம்.

மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப்பணத்தை ஒவ்வொரு இந்தியன் கணக்கிலும் 15 லட்சம் போடும் அளவுக்கு பதுக்கப்பட்டு இருக்கிறது. அதை வெளிக்கொண்டு வருவேன் என்று சொன்னதை வழக்கம்போல் திரித்து பேசிவருகிறார்கள். வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப்பணம் உங்கள் தோழமை கட்சி காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் மகம் கார்த்திக், காங்கிரஸ் ஆட்சியில் கடன் பெற்ற விஜய் மல்லய்யா போன்றவர்களுக்கு தானே தெரியும். கறுப்புப்பணம் ஒழிக்கதானே மோடி ரூ 500, 1000 செல்லாது என்ற திட்டத்தை கொண்டு வந்தார். நதிநீர் இணைப்பிற்கு பிள்ளையார் சுழி போட்டது பாஜக ஆட்சியில் தான், தற்சமயம் மோடி ஆட்சியில் நதிநீர் இணைப்பிற்கு முதற்கட்டமாக ரூ.5.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

அதிமுக பிளவை பயன்படுத்தி காலூன்ற பாஜக முயற்சிக்கிறதாம். எட்டாத கனிக்கு கொட்டாவி விடாதே என்கிறார்.அதிமுக தலைவர் மறைவை பயன்படுத்தி தன் சட்டையை தானே கிழித்துக்கொண்டு பதவி சுகம் தேடி கோட்டைக்கனவுடன் இலவு காத்த கிளியாக, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க காத்திருப்பது யார்?

கடந்த காலங்களில் நடந்த போராட்டங்களில் தீக்குளித்தோர் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானோர்.என உயிர் பலி  ஆனவர்களின் பட்டியலை காட்டி போராட்டம் வெற்றிபெற்றதாக பெருமிதம் கொள்ளும் திமுக. பிறர் மீது கொலை பழி சுமத்துவது திமுக விற்கு புதிதல்லவே. கொள்கை கோட்பாட்ட்டை அடுத்தவர் மீது திணிக்க உயிர் பலி கொடுப்பதும், கேட்பதும் தானே திமுக வின் சமூக நீதி? உங்கள் சவாலை எதிர்கொண்டு ஜனயாக முறையில் பாஜக வெற்றிகொள்ளும்.
 
ஊழலற்ற ஆட்சி நடத்தும் மோடி ஆட்சியை, மோசடி ஆட்சி என்று விமர்சிக்க திமுக வுக்கு எந்த தகுதியும் இல்லை.

Dr. தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக பாஜக தலைவர்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.