சர்வதேச அளவில் கல்வி அறிவுபெறுவதற்கு இந்தியாவில் பள்ளிக் கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

51-வது சர்வதேச கல்வி அறிவுதினத்தை கொண்டாடும் உலக நாடுகளுடன் இந்தியாவும் இணைந்துள்ள நிலையில், ஒருநாட்டின் மேம்பாட்டுக்கும் துரித வளர்ச்சிக்கும் கல்வி அறிவுமுக்கிய பங்காற்றுகிறது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். பெரும்பாலானோர் கல்வியறிவு இல்லாமல் இருப்பதுபாவம், வெட்கம் என்றும் அதை களையவேண்டும் என்றும் மகாத்மா காந்தி குறிப்பிட்டார்.

சுதந்திரம் அடைந்த தினத்தின் நள்ளிரவில் பேசிய பண்டிட் நேரு, “சுதந்திரமும் வாய்ப்பும் ஒவ்வொரு சாதாரண குடிமகனுக்கும் கிடைக்கவேண்டும். ஒவ்வொரு ஆண், பெண்ணுக்கும் நீதி, முழு வாழ்க்கை கிடைக்கும் வகையில் சமூக, பொருளாதார, அரசியல் அமைப்புகள் உருவாக்கப்படவேண்டும்” என்றார்.

1947-ம் ஆண்டில் 18 சதவீத மக்களுக்கே எழுதப் படிக்கத் தெரிந்திருந்தது. தற்போது அடிப்படை கல்வி அறிவை 74 சதவீத மக்கள் பெற்றுள்ளனர். 95 சதவீத குழந்தைகள் பள்ளிகளில் கல்விகற்கின்றனர். 86 சதவீத இளைஞர்கள் கல்வி அறிவுபெற்று பணியாற்றி வருகின்றனர். இது ஒருசாதாரண சாதனை அல்ல.

கடந்த காலங்களில் பெற்ற வெற்றிகளில் இருந்து கிடைக்கும் ஊக்கத்தை வைத்து எதிர் காலத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இன்னும் நாம் போகவேண்டியதூரம் அதிகம். ஆனால், ஒரு உண்மையை நாம் மறுத்துவிட முடியாது. அதாவது, 35 கோடி இளைஞர்கள் மற்றும் வயதுவந்தோர் இன்னும் கல்வி அறிவு இல்லாத நிலையில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் பங்கெடுக்க முடியாதபடி உள்ளனர். மேலும், தொடக்கக் கல்வியை முடித்த பிறகும் கூட 40 சதவீத பள்ளிக் குழந்தைகள், தேவையான அளவில் அடிப்படை கல்வித்திறனை பெறவில்லை. இது கவனிக்கப்பட வேண்டிய மிகப்பெரிய சவாலாக உள்ளது.

நம் ஒட்டுமொத்த சாதனையை கொண்டாடும் வாய்ப்பை இந்தநாள் நமக்கு தந்துள்ளது. இதில் தேசியளவில் எடுக்கப்பட்ட முயற்சிக்கு தனிப்பட்ட நபர்பலரும், நிறுவனங்களும் பங்களித்துள்ளனர். திருவாங்கூர், பரோடா ஆட்சியாளர்கள், கல்விக்கான வாய்ப்புகளை விரிவாக்கிக் கொடுத்தனர். அது போல் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளால் இன்று இந்தியாவில் நான்கில் மூன்று பங்கு மக்களுக்கு எழுதப் படிக்கத் தெரிகிறது.

ஆனாலும் உலக அளாவிய சவால்கள் நமக்கு இன்னும் உள்ளன. நாட்டு வளர்ச்சியின் அஸ்திவாரம், ‘கூட்டு முயற்சி, உள்ளடங்கிய வளர்ச்சி’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான பாதையில் நாடு சென்றுகொண்டிருக்கிறது.

உலக அளவில் 2030-ம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் செயல் திட்டமான நிலைத்த வளர்ச்சி என்ற செயல் திட்டத்தில் இந்தியா பங்கெடுத்துள்ளது. அந்த செயல்திட்டம், சர்வதேச கல்வி அறிவுடனான உலகம் என்ற நிலைக்கு வழிகாட்டுகிறது. அதில், வயது வந்தோர் மற்றும் இளைஞர் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

2030-ம் ஆண்டில் அனைத்து இளைஞர்களும், கணிசமான அளவில் வயது வந்தோரும் கல்வி அறிவு மற்றும் எண்ணியல் அறிவை பெற்றிருக்க வேண்டும் என்பது உறுதிசெய்யப்பட்டாக வேண்டும். இதை அடைவதில் எதில் நாம் பின்தங்கி இருக்கிறோம் என்பதை ஆராய்வது அவசியமாகும்.

புதிய இந்தியாவை உருவாக்குவதில் கல்வி அறிவு முக்கிய இடம்பிடிக்கிறது. நாட்டின் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு நமது அர்ப்பணிப்பு அவசியமாகிறது. ஏழைகளில் ஏழையைக்கூட அணுகும் அளவுக்கு முழு மனதுடன் திட்டங்களை அமல்படுத்துகிறோம். ஒருவர் கூட விட்டுப்போகாத அளவுக்கான திட்டங்களை வடிவமைக்கிறோம்.

பங்களிப்புடனும், துடிப்பாகவும் ஜனநாயகத்தை கட்டி எழுப்புவதற்கு கல்வி அறிவுதான் முதல் தேவையாக உள்ளது. அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைகளைப் பெறுவதற்கும் கல்வி அறிவு அவசியம். வறுமை, குழந்தைகள் இறப்பு, ஜனத்தொகை பெருக்கம், பாலின பாகுபாடு போன்றவையெல்லாம் கல்வி அறிவு வளர்ச்சி பெற்ற சமுதாயத்தில் இருக்காது.

பொருளாதாரம், அரசியல், சமுதாய நன்மைகளை பெறுவதற்கு கல்வி அறிவு அவசியமாக உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில், குறிப்பாக பெண்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிகாரம் பெறுதல், நிலை உயர்வு அடைதல், தரத்தை மேம்படுத்திக்கொள்ளுதல் ஆகியவற்றுக்கு பெரும்பாலும் கல்விதான் பெரும்பங்கு ஆற்றுகிறது.

சர்வதேச அளவில் கல்வி அறிவு பெறுவதற்கு இரண்டு அம்சங்கள் முக்கியமானதாக உள்ளன. ஒன்று, தொடக்கக் கல்விக்கு முந்தைய கல்வி மற்றும் பள்ளிக்கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும். பள்ளிக்கல்வியை முடிக்கும்போது மாணவர்கள் தேவையான திறமையை வளர்த்திருக்க வேண்டும்.

இரண்டாவது, படிக்க வாய்ப்பு கிடைக்காத அல்லது இடைநிற்றலால் படிக்க முடியாமல் போன இளைஞர்கள், வயது வந்தோருக்கு அடிப்படைக் கல்வி வாய்ப்பளித்து, அவர்களின் வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகளை மேலும் விரிவாக்கம் செய்யவேண்டும்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கல்வியின் அவசியத்தை உணர்ந்து சாக்சார் பாரத் போன்ற பல்வேறு கல்வித் திட்டங்களை நாடு முழுவதும் அரசு அமல்படுத்தி வருகிறது. கல்வி அறிவில் பெண்கள் பின்தங்கியுள்ள ஊரகப் பகுதிகளை இந்தத் திட்டங்கள் குறிவைத்து செயல்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர், ஆண்டுக்கு இருமுறை கற்போர் மதிப்பீட்டுத் தேர்வில் பங்கு பெறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் இந்த தேர்வில் 6.66 கோடி பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 70 சதவீதம் பேர் பெண்கள். எனவே இவர்கள் எல்லாரும் கல்வித் திட்டங்களின் தூதர்களாக இருப்பார்கள்.

குழந்தைகள் மத்தியில் கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், வயது வந்தோரின் கல்வியின்மை நிலையை குறைத்துவிடும். தற்போதுள்ள சூழ்நிலையில், இன்னும் கவனத்துக்குள் வராத கல்வி தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஒருங்கிணைந்து ஆய்வு செய்வது அவசியமாக உள்ளது.

2022-ம் ஆண்டுக்குள் குழந்தைகள், இளைஞர்கள், வயது வந்தோர் ஆகியோர் கல்வி அறிவு மற்றும் எண்ணறிவை பெறுவதற்கு ஏற்ற வகையில் கல்வித்திட்டத்தை புதிதாக மறுவடிவமைப்பு செய்ய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதன்படி, பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களின் படிக்காத பெற்றோர், தாத்தா பாட்டிகளுக்கும், அருகில் வசிப்போருக்கும் கல்வி கற்றுத்தருவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.