நாடாளுமன்ற எம்.பி.க்கள் அனைவரும் தாங்கள் தத்தெடுத்த கிராமங்களில் அடுத்தமாதம் தொடங்கும் தூய்மை விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.


இது தொடர்பாக, நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப் பட்டுள்ளதாவது: கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன், வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் 15-ஆம் தேதிவரை, தூய்மை விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய அரசு நடத்துகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தாங்கள் தத்தெடுத்த கிராமங்களில் ஊராட்சி அளவில், இந்தப்பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
இந்தப் பிரசாரத்தின்போது, கிராமவாசிகளுக்கு தூய்மை,சுகாதாரம் குறித்து சுய உதவிக்குழுக்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் ஆகியவற்றின் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

.
மேலும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் நோய்வாய்ப் படுவதைத் தடுக்கவும், பெண் பிள்ளைகள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்கவும் எம்.பி.க்கள் சிறப்புகவனம் செலுத்தவேண்டும். ஊரகப் பகுதியில் வாழும் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில், வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். கிராமங்களைத் தூய்மைப் படுத்தும்பணியையும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியையும் எம்.பி.க்கள் தொடங்கிவைக்க வேண்டும்.


கிராமத்தின் வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும், அவற்றை அமல்படுத்துவது குறித்தும், கிராம சபைக்கூட்டங்களில் விவாதிக்கப்பட வேண்டும். உணவு பதப்படுத்துதல், இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை குறித்து கிராம வாசிகளுக்குப் பயிற்சி அளிக்கவேண்டும். இதுதவிர, அரசின் திட்டங்கள் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக மக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் நரேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.