இத்தாலி தயாரிப்பு கண்ணாடிகளை நீக்கி விட்டு பார்த்தால், குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியால் காண முடியும் என்று பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.


குஜராத்தில் பாஜக அரசுகளின் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகளை மக்களிடையே விளக்கும் வகையில், பாஜக சார்பில் குஜராத் கௌரவ்யாத்ரா எனும் பெயரில் யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் முதல்கட்ட யாத்திரையை, நாட்டின் முதலாவது உள்துறை அமைச்சரான மறைந்த சர்தார் வல்லபபாய் படேலின் சொந்த ஊரான கரம்சத்தில் அமித்ஷா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். இதையடுத்து, 2ஆவது கட்ட யாத்திரையை, மகாத்மாகாந்தி பிறந்த ஊரான போர்பந்தரில் அமித்ஷா திங்கள்கிழமை தொடங்கிவைத்தார். அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:


மத்தியில் ஆட்சியிலிருக்கும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு, கடந்த 3 ஆண்டுகளில், குஜராத்துக்கு என்ன நல்ல காரியங்களை செய்துள்ளது என்று பாஜக.,விடம் காங்கிரஸ் கேள்விகேட்கிறது. குஜராத்துக்கு மத்திய அரசு எய்ம்ஸ் நிறுவனத்தை அளித்துள்ளது. ராஜ் கோட்டில் சர்வதேச விமான நிலையத்தை ஏற்படுத்திதந்துள்ளது. நர்மதை அணையின் நீர்மட்ட உயரத்தை உயர்த்திக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. 6 லட்சம் நகர்ப்புற ஏழைகளுக்கு வீடுகளை ஒதுக்கியுள்ளது.


இவை எதுவும், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு தெரியவில்லை. 3 ஆண்டுகளில் குஜராத்துக்கு என்ன செய்தோம் என்று பாஜக.,விடம் அவர் தொடர்ந்துகேட்கிறார். ராகுல்காந்தி தற்போது இத்தாலி தயாரிப்பு கண்ணாடிகளை அணிந்து கொண்டுள்ளார். குஜராத்தின் வளர்ச்சியை காணும்திறன் தனக்கு வேண்டும் என்று கருதினால், ராகுல்காந்தி தாம் அணிந்துள்ள இத்தாலி தயாரிப்பு கண்ணாடிகளை கழட்டிவிடவேண்டும். பிறகு குஜராத்தயாரிப்பு கண்ணாடிகளை அணிந்து பார்த்தால், இங்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சியை அவரால் காணமுடியும்.
தேர்தல்களில் வெற்றிகிடைக்கும் என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கனவுகள் கண்டுகொண்டிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் கனவு காண்பதற்கு உரிமை உள்ளது. ஆனால், தேர்தல்களில் வெற்றிபெறுவது தொடர்பான கனவுகளை காணும் பட்சத்தில், அமெரிக்காவுக்கு சுற்றுலாவுக்கு செல்லக்கூடாது (ராகுல் காந்தியின் அமெரிக்க பயணத்தை கிண்டல்செய்தார்).


தேர்தல்களில் வெற்றிபெற வேண்டும் எனில், அதற்கு கடினமாக பணியாற்ற வேண்டும். குஜராத் வளர்ச்சிக்காக மாநில மக்களுடன் இணைந்து செயல்படவேண்டும். குஜராத் மாநிலத்துக்கு 3 தலை முறைகளாகவே காங்கிரஸ் கட்சி அநீதி இழைத்துள்ளது. குஜராத்மாநில மக்கள், புத்திசாலிகள் ஆவர். அவர்கள் எப்போதும் தங்களுக்கு அநீதி இழைத்த காங்கிரஸ்கட்சிக்கு தேர்தல்களில் வாக்களிக்க மாட்டார்கள் என்றார் அமித்ஷா.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.