இந்தியாவின் பொருளாதாரம் மிகஉறுதியான பாதையில் பயணம்செய்து கொண்டிருப்பதாக உலகப் பணநிதியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள அந்த அமைப்பின் தலைவர் கிறிஸ்டின் லகார்டே, பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. ஆகிய இரு சீர்திருத்தங்களும் மிகச் சிறப்பு வாய்ந்தவை என்று கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், ” பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி ஆகிய இந்த இருசீர்திருத்தங்களால் இந்திய பொருளாதாரத்தில் தற்போது சிறிது மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக பணவீக்கம் மற்றும் பணப் பற்றாக்குறை கணிசமான அளவு குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த இரு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களால் வரும் ஆண்டுகளில் இந்தியப்பொருளாதாரம் அதிக உறுதித்தன்மை பெற்று, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகஅளவில் பெற்றுத்தரும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டெல்லியில் உள்ள நிர்வாக செயலாளர்கள் இன்ஸ்டிடியூட்டின் கோல்டன் ஜூப்ளி ஆண்டின் திறப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, “ஏப்ரல் – ஜூன் மாத காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் சரிவடைந்து உள்ளது. அதை சரிசெய்யும் பொறுப்புடன் அரசாங்கம் செயல்பட்டுவருகிறது. கடந்த மூன்று வருடங்களில் 7.5 சதவிகித வளர்ச்சியை அடைந்த பொருளாதாரம், ஏப்ரல்-ஜூன் மாத காலாண்டில் சரிவடைந்துவிட்டது. 2016ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதிக்கு முன்னால், 12 சதவிகிதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் 9 சதவிகிதமாக குறைந்துள்ளது.

இரட்டை இலக்க பணவீக்கம் தற்போது மூன்று சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. கணக்கு பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை ஆகியவை 2.5 மற்றும் 3.5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதார அடிப்படையானது வலுவாகவும், சீர்திருத்த செயல்முறை மற்றும் நிதி நிலைத்தன்மையை மனதில் வைத்தும் அரசு தொடர்ந்து செயல்படும். ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு முடிவுகள் போன்ற அரசாங்கத்தின் முடிவுகள் நாட்டின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுசெல்லும்” என்று கூறியிருந்தார்.

முன்னதாக, அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிதியமைச்சர் அருண்ஜெட்லி, அங்கு செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், ‘ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்றவற்றை நடைமுறைப்படுத்த மிகுந்த தைரியம்வேண்டும். இதைப் போன்ற நடவடிக்கைகளுக்கு இந்தியா உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது. உலகமே கடந்த மூன்று ஆண்டுகளாக பொருளாதார மந்த நிலையில் இருக்கிறது. ஆனாலும் இந்தியா தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்கிறது” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், உலகப் பண நிதியம் அமைப்பின் தலைவரும், கடந்த இரு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களால் வரும் ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் அதிக உறுதித் தன்மை பெற்று, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிக அளவில் பெற்றுத் தரும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.