இன்றைய மற்றும் எதிர்கால பிரச்னைகளுக்கு அறிவியல்வளர்ச்சி மூலம் தான் தீர்வுகாண முடியும்
இந்தியாவின் கலாசாரம், பாரம் பரியத்தின் ஒரு பகுதியாக அறிவியல் தொழில்நுட்பம் விளங்கியது. முந்தைய காலகட்டத்தில் உலக நாடுகளிலேயே அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியாதான் சிறந்து விளங்கியது.


பூஜ்யத்தின் பயன்பாடு, அல்ஜீப்ரா, அணு கோட்பாடுகளையும் இந்தியர்கள்தான் உலகுக்கு அறிமுகம் செய்தனர். வானிலை ஆராய்ச்சி, யோகா, ஆயுர் வேதம் என பல்வேறு துறைகளில் பண்டைய இந்தியா தலை சிறந்து விளங்கியது.


ஆனால், மொகலாயர் படையெடுப்பு, காலனி ஆதிக்கம் போன்ற வற்றால் இந்தியா தனது அனைத்து திறன்களையும் இழக்கநேரிட்டது. அவ்வாறு இழந்த இந்தியாவின் பண்டைய பெருமைகளை மீட்க ஒவ்வொரு இந்தியரும் பாடுபட்டு, அறிவியல் தொழில் நுட்பத்தில் இந்தியாவை முன்னணி நாடாக மாற்றிக்காட்ட வேண்டும்.


அதற்கு, மாநில அரசுகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பல்கலைக் கழகங்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்துத் துறையினரும் உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். பல்வேறு துறைகள்ல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். மிகப்பெரிய அளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவில்லை எனில், அறிவியல் தொழில் நுட்பத்தில் புதிய இலக்கை இந்திய அடையவே முடியாது.


அதிக முதலீடுகள் அவசியம்: வறுமை, வேலை யில்லாத் திண்டாட்டம், சுற்றுச்சூழல் மாசு, நோய்கள், நகர்ப்புற-கிராமப்புற ஏற்றத் தாழ்வு, சுகாதாரமான குடிநீர் போன்ற நிகழ்கால மற்றும் எதிர்காலப் பிரச்னைகளுக்கு அறிவியல் மூலம் மட்டுமே நாம் தீர்வுகாண முடியும். எனவே, அறிவியல் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு அதிகமுதலீடுகள் செய்ய வேண்டியது அவசியம்.
சிறப்பு நிதித்தொகுப்பு தேவை:

கல்வி நிறுவனங்களில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் தொழில் நிறுவனங்கள் சிறப்பு நிதித் தொகுப்பை உருவாக்கித் தர முன்வரவேண்டும். இளம் ஆராய்ச்சியாளர்கள் எந்தவிதத் தங்கு தடையும் இன்றி சிந்திக்கவும், புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடும் வகையிலும், அவர்களுக்கான உகந்த சூழலை இந்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சிக்கழகமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலும் உருவாக்கித் தரவேண்டும்.


மாணவர்களிடையே…: பள்ளி மாணவர்களிடைய அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் அறிவியல் தொழில் நுட்பத் துறை இணைந்து பணியாற்றுவது அவசியம். இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட வாய்ப்பு ஏற்படும்

என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.


இந்திய சர்வதேச அறிவியல் விழா சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி, மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழக வளாகங்களில் கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை (அக்.16) வரை நடைபெற்றது. இதன் நிறைவு விழா அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற வெங்கய்ய நாயுடு பேசியது:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.