பல்வேறு சமஸ்தா னங்களாக பிரிந்துகிடந்த இந்தியாவை ஒரே நாடாக மாற்றிய பெருமை வல்லபாய் படேலை சேரும். இவரது பிறந்த தினம், தேசிய ஒற்றுமை தினமாக (அக்., 31) கொண்டாடப்படுகிறது.


குஜராத் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கரம்சாத் என்ற கிராமத்தில் 1875, அக், 31ல் படேல் பிறந்தார். பள்ளிப் படிப்பை நிறைவு செய்த இவர், வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பதற்காக, வேலை பார்த்து பணம் சேர்த்தார். "பாரிஸ்டர்' பட்டம் பெறுவதற்காக இங்கிலாந்து சென்றார். வறுமை காரணமாக கல்லுாரியில் உடன் படித்த மாணவர்களின் புத்தகங்களை கடன் வாங்கி படித்து, இரண்டே ஆண்டுகளில் படிப்பை முடித்து இந்தியா திரும்பினார்.
 


படேல் வழக்கறிஞராக பல போராட்டங்களில் ஈடுபட்டார். பின் காங்.,கட்சியில் இணைந்து, சுதந்திரபோராட்டத்தில் களமிறங்கினார். காந்திஜியின் உப்பு சத்யாகிரக போரட்டத்தில், இவரது பங்கு முக்கியமானது. இதனால் சிறை சென்றார். காந்திஜி கொண்டு வந்த ஒத்துழையாமை இயக்கத்தின் படி, வெளிநாட்டு ஆடைகளை புறக்கணித்ததுடன், மகன், மகள் வைத்திருந்த வெளிநாட்டு ஆடைகளையும் துாக்கி எறிந்தார். 1931ல் கராச்சியில் நடந்த மாநாட்டில் காங்., கட்சி தலைவரானார். 1942, ஆக.,9ல், வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தார். உடல்நிலை மோசமாக இருந்த போதும், போராட்டத்தில் கலந்து கொண்டார். இதற்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட இவர், 1945 ஜூன் 15ல் விடுதலையானார். 1946 காங்., கட்சி தலைவர் தேர்தலில், காந்திஜி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நேருவுக்கு வழி விட்டு, வல்லபாய் படேல் ஒதுங்கினார்.


"ஒரே இந்தியா' எப்படி சாத்தியம்:


இந்தியா சுதந்திரம் பெற்ற போது, 565 சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்தது. இவை சுதந்திர பகுதிகளாக இருக்க வேண்டும் என, சமஸ்தான ஆட்சியாளர்கள் கோரினர். இவற்றை ஒருங்கிணைப்பது புதிய அரசுக்கு சவாலாக இருந்தது. இப்பொறுப்பு உள்துறை அமைச்சராக இருந்த படேலிடம் ஒப்படைக்கப்பட்டது. பிகானிர், பாட்டியாலா, குவாலியர், பரோடா முதலிய சமஸ்தானங்கள் உடனடியாக இணைந்தன. பெரும்பாலான சமஸ்தானங்கள் தாமாகவும், சில பேச்சுவார்த்தையின் மூலமும் இணைக்கப்பட்டன. படேலின் முயற்சியால் 552 சமஸ்தானங்கள் இணைந்தன. தமிழகத்தில் இருந்த ஒரே சமஸ்தானமான புதுக்கோட்டை, 1948, மார்ச் 3ல் இணைந்தது.


காஷ்மீர், ஐதராபாத், திருவாங்கூர், ஜூனாகத் போன்ற சில சமஸ்தானங்கள் இணைய மறுத்தன. . இதையடுத்து ராணுவத்தை அனுப்பி, அப்பகுதிகளை இந்தியாவுடன் இணைத்தார் படேல். ஒரே இந்தியா உருவாக காரணமாக இருந்ததால் இந்தியாவின் 'இரும்பு மனிதர்' என போற்றப்படுகிறார். -தேசிய ஒற்றுமை தினம்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.