கடவுள் மறுப்பு இயக்கத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் புதியதாக அவர் கட்டியிருக்கும் வீட்டிற்கு வருகின்ற 9ம் தேதி புதுமனை புகுவிழா வைத்திருப்பதாகக் கூறி எனது அலுவலகத்தில் வைத்து அழைப்பிதழ் தந்தார்.

அவர் வந்த நேரத்தில் அலுவலகத்தில் விவாகரத்து வழக்கு பதிவு செய்வதற்காக வந்திருந்த ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தேன். மனிதர் சம்பந்தம் இல்லாமல் மூக்கை நுழைத்து அந்தப் பெண்ணிடம்,

"உன் கல்யாணத்துக்கு முன்னாடி எவ்வளவு ஜாதக பொருத்தம் பார்த்திருப்பே? சந்ததி விருத்தியா நூறு வருசம் பூவும் பொட்டுமா வாழ்வேன்னு ஜோசியன் புளுகியிருப்பான். இப்போ பாரு! ஒரே வருசத்துல தாலிய அத்து போடுறதுக்கு இவன் கிட்டே வந்து நிற்குற. எப்போ இந்த சாமி, சாத்தான்னு கும்பிடுறதை மனுசன் விட்டுட்டு பெரியார் வழிக்கு வர்றானோ அப்போ தான் உருப்படுவான்" என்றார்.

அந்தப் பெண் அழ ஆரம்பித்து விட்டார். நான் அவரிடம் கேட்டேன்,

"யார் கிட்டே என்ன பேசணும்னு தெரியாதா? ஏற்கனவே நொந்து போயிருக்கிற பொண்ணோட மனசை ஏன் அமங்கள வார்த்தைகளால குதறி எடுக்குற?"

நண்பர் சிரித்துக் கொண்டே பதில் பேசினார் "இந்த உலகத்தில் நிர்மூடர்கள் அதிகம். உங்களுடைய மூடநம்பிக்கையை எடுத்து சொன்னால் அது குற்றமா? வார்த்தைல ஏதுடா மங்களம்? அமங்களம்? உள்ளதை உள்ளபடி சொல்லுறதுல தப்பே இல்லை"

அலுவலகத்தில் அமைதி நிலவியது. சில நிமிடங்கள் அவர் தந்த அழைப்பிதழை பார்த்து விட்டு அவரிடம் சொன்னேன்,

"9ம் தேதி நான் திருவாடானை நீதிமன்றம் போவதால் உன் இல்ல விழாவிற்கு வரமுடியாது. அதனால இப்போவே உன் பெரியாரை நினைச்சுக்கிட்டு வாழ்த்திடுறேன்.

நீ கடன் வாங்கி கட்டியிருக்கிற வீட்டோட கடனை நீ அடைக்க முடியாமல் போய் வீடு ஜப்தி ஆயிடாமலோ, பால் காய்ச்சி குடியேறினதும் யாரும் செத்து போயிடாமலோ, கட்டுமானம் சரியில்லாம போய் வீடு கீழே விழுந்து கட்ட மண்ணாகிப் போயிடாமலோ நல்லா இருக்கட்டும்!"

நண்பரின் முகத்தில் இருள் சூழ்ந்தது. எதுவும் பேசாமல் தளர்வாய் வெளியேறினார்.

அலுவலகத்தில் இருந்த அந்தப் பெண் கேட்டாள் "ஏன் சார் இவ்வளவு கடுமையா பேசினீங்க? ரொம்ப அப்சட் ஆகிப் போயிட்டாரு"

நான் சொன்னேன்,

"அவன் தானம்மா சொன்னான் வார்த்தைகள்ல மங்களம், அமங்களம்னு கிடையாதுன்னு. அவன் கொள்கைப்படி வாழ்க்கைல நடக்குறதை உள்ளதை உள்ளபடி சொல்லி "நல்லா இருக்கட்டும்"னு வாழ்த்தத்தான செய்தேன்.

அடுத்தவங்க மனசை அவன் கொள்கை புண்படுத்துறதைப் பற்றி கவலைப்படாத போது அதே கொள்கையை அடுத்தவங்க அவன் கிட்டே பிரயோகிக்கும் போதும் கவலைப்படக் கூடாது.

அப்படி கவலைப்பட்டால் அவன் தான் மூடநம்பிக்கையில ஊறிக் கிடக்குற ஒண்ணாம் நம்பர் நிர்மூடன். அந்த வகையில் இவன் நிர்மூடன்! மட நாய்க்கு தடிக் கம்பு தான் சரி!"

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.