2001ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது , அங்கு வைத்திருந்த கார் குண்டு வெடிக்காமல் போனது ஏன் என்று அப்சல் குரு வியப்புடன் கேட்டதாக திஹார் சிறை ஆவணத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த கேள்விக்கு இதுவரை விடை தெரியாமல் அவர் தவித்து வருவதாகவும் அந்த தகவல் கூறுகிறது.

2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அவர் தற்போது தூக்குக்காக காத்திருக்கிறார். திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், சிறையின் 3வது பிரிவு கண்காணிப்பாளர் மனோஜ் திவிவேதியிடம் கூறியவற்றை அவர் தொகுத்து ஆவணமாக்கியுள்ளார்.

மொத்தம் 180 பக்கங்களுடன் கூடியதாக உள்ள இந்த ஆவணப் புத்தகம், 6 அதிகாரங்களைக் கொண்டதாக உள்ளது. அதில் முதல் அதிகாரத்தில், நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவம், அப்போது நடந்தது என்ன என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப் புத்தகத்தில் திவிவேதியிடம் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் குரு. அதில் ஒரு இடத்தில், நாடாளுமன்றத் தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்ட காரில் நான் தான் குண்டு வைத்தேன். ஆனால் அந்தக் குண்டு கடைசி வரை வெடிக்கவில்லை. அது ஏன் என்பது எனக்கு இதுவரை புரியவில்லை.

அந்தக் குண்டு மட்டும் வெடித்திருந்தால் காஷ்மீர்ப் பிரச்சினை சர்வதேச பிரச்சினையாக மாறியிருக்கும். மத்திய அரசுடன் காஷ்மீரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட அது உதவியிருக்கும். ஆனால் அது நடக்காமல் போய் விட்டது என்று கூறியுள்ளார் குரு.

குரு பேசியது குறித்து திவிவேதி கூறுகையில், காரில் வைக்கப்பட்ட குண்டு நிச்சயம் வெடிக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்ட காரில் நிறைய குண்டுகளை தான் பொருத்தி வைத்திருந்ததாகவும், அந்தக் காரை யாராவது திருடி விடப் போகிறார்களே என்ற பயத்தில் காரை போலீஸ் நிலையம் ஒன்றின் முன்பு பாதுகாப்புக்காக நிறுத்தி வைத்திருந்ததாகவும் என்னிடம் கூறினார் குரு. ஆனால் அந்த குண்டுகள் வெடிக்காமல் போனது அவருக்கு பெரும் வியப்பை அளித்ததாக கூறினார்.

அதை விட ஆச்சரியமாக குண்டுகள் நிறைந்த கார் காவல் நிலையம் முன்பு விடிய விடிய நின்றிருந்த நிலையிலும் அதை யாரும் கண்டு கொள்ளாமல் போனதுதான். ஒரு போலீஸ்காரருக்குக் கூட ஏன் இந்தக் கார் நிற்கிறது என்று சந்தேகம் வராமல் போனது பெரும் வியப்பாக உள்ளது.

2009 மார்ச் முதல் 2010 டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் நான், குருவுடன் பேசிய தகவல்களைக் கொண்டதாக இந்த ஆவணம் அமைந்துள்ளது. நான் இதை புத்தகமாக வெளியிட திட்டமிட்டேன். ஆனால் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டது என்றார் திவிவேதி.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.