ஆளும் அரசியல்கட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, மாநிலங்களுக்கு இடையே மத்திய அரசு பாகுபாடு காட்டு வதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.


ஹைதராபாதின் மியாபூர் முதல் நகோல் வரையிலும் 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதல்கட்ட மெட்ரோ ரயில்பாதை திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில், மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.


இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்தார். இதையடுத்து, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் சேர்ந்து, மெட்ரோரயிலில் சிறிது தூரம் அவர் பயணித்தார். ஆந்திரம் மற்றும் தெலங்கானா ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தெலங்கானா மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி. ராமா ராவ், மாநில பாஜக தலைவர் கே. லட்சுமண் உள்ளிட்டோரும் ரயிலில் பயணித்தனர்.


இதனிடையே, ஹைதராபாதில் மெட்ரோ ரயில்சேவையைத் தொடங்கி வைக்க வந்த பிரதமர் மோடியை கௌரவிக்கும் வகையில், அவருக்கு தெலங்கானா மாநில பாஜக சார்பில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:


தெலங்கானா மாநிலமானது, புதிதாக உருவாக்க ப்பட்ட மாநிலமாகும். தில்லியில் ஆளும் பாஜக அரசு (மத்திய அரசு), அரசியலை அடிப்படையாகக் கொண்டு, இந்தமாநிலத்தை பாகுபாட்டுடன் நடத்தாது என்று தெலங்கானா மாநில மக்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன். மாநிலத்தில் எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, மத்தியில் ஆளும் அரசானது, கூட்டுறவு சார்ந்த கூட்டாட்சியை பேணுவதற்கு உறுதி பூண்டுள்ளது. போட்டிமிக்க கூட்டுறவுசார்ந்த கூட்டாட்சியை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.


வளர்ச்சியை நோக்கி மாநிலங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, மத்திய அரசு எப்போதும் தோளோடு தோள் கொடுத்துநிற்கும். நாட்டின் முதல் துணைப்பிரதமரான சர்தார் வல்லபபாய் படேலை ஹைதராபாத் நினைவு கூரவேண்டும். நாடு சுதந்திரமடைந்த பிறகு, தனித்துச் செயல்பட்ட ஹைதராபாத் மாகாணத்தை, இந்தியாவில் இணைத்தது சர்தார் வல்லபபாய் படேல்தான். அவருக்கு எனது வணக்கத்தை செலுத்துகிறேன். தெலங்கானா விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த மக்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்.


பாஜக தற்போது இந்த அளவுக்கு உயர்ந்திருப்பதற்கு, கடின உழைப்பும், பலதலைமுறை கட்சித் தொண்டர்கள், அவர்களது குடும்பத்தினரின் தியாகங்கள்தான் காரணமாகும். 
ஒருங்கிணைந்த ஆந்திரம், கேரளம், தமிழகம் ஆகியமாநிலங்களில் இருக்கும் பாஜக தொண்டர்கள், கடின உழைப்பு, கட்சிக் காகவும், நாட்டுக்காகவும் தியாகம் செய்தல் என்ற பாதையில் இருந்து எப்போதும் பிரழாதவர்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.