பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பயன்கள் குறித்து ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), மக்களுக்கு விரைவில் எடுத்துச்சொல்ல வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டார்.


மத்திய தகவல் ஆணையத்தின் 12-ஆவது மாநாடு, தில்லியில் புதன் கிழமை நடைபெற்றது. அந்த மாநாட்டில் அவர் மேலும்பேசியதாவது:


உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ்பெறப்பட்டதன் நோக்கம் என்ன? ஒட்டுமொத்த பணத்தையும் செல்லாது என்று அறிவிப்பதால் எப்படி பலன்கிடைக்கும் என்று மக்கள் கேட்கிறார்கள்.


முறைகேடுகளைத் தடுக்க வேண்டும்; படுக்கை அறை, கழிப்பறை போன்ற இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் உள்பட ஒட்டு மொத்த பணமும் வங்கி சுழற்சிக்கு வரவேண்டும் போன்ற காரணங்களுக்காக, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


வங்கிகளுக்கு வந்தபணத்தில் கருப்பு பணம் எவ்வளவு என்பதை தெரிவிக்க வேண்டியது ரிசர்வ் வங்கியின் வேலையாகும்.


எனவே, ரிசர்வ் வங்கி தனது மதிப்பீட்டுப் பணிகளை விரைவில் முடித்து, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பலன்களை நாட்டுமக்களுக்கு விரைவில் தெரிவிக்க வேண்டும். மேலும், வங்கி சுழற்சிக்கு வந்த மொத்தபணம் எவ்வளவு? அதில், கருப்புப் பணம் எவ்வளவு? வரி வரம்புக்குள் வந்தவர்கள் எத்தனை பேர்? போன்ற விவரங்களையும் மக்களுக்கு ரிசர்வ்வங்கி தெரிவிக்க வேண்டும்.


ஏனெனில், உயர் மதிப்புடைய ரூபாய்நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட பிறகு, 50 நாள்கள் அவதிப்பட்டவர்கள் மக்கள். அவர்களுக்கு விளக்கம்கொடுத்தாக வேண்டும். அப்போதுதான் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்.


6 மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு இடத்தில் தேர்தல்நடப்பதால், எப்போதும் தேர்தல் விழாக்கோலத்துடன் இந்தியா உள்ளது. எனவே, நாடாளுமன்றத்துக்கும், ஒரேநேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் யோசிக்க வேண்டும்.
தகவல் ஆணையத்துக்கு வரும் புகார் மனுக்களுக்கு ஆணையர்கள் விரைவாக பதிலளிக்க வேண்டும். மனுதாரர்களுக்கு அளிக்கப்படும் தகவல்கள், உண்மையாகவும், சரியாகவும் இருக்கவேண்டும். மேலும், 95 சதவீதம் பேருக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால், மனுதாரர்களுக்கு அவர்களது தாய்மொழியிலேயே பதிலளிக்கவேண்டும். இதேபோல், தகவல் கோரும் மனுக்களையும் படிப்படியாக தாய்மொழிக்கு மாற்றவேண்டும். இதுதொடர்பாக, நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைகள், மனுதாரருக்குத் தெரிந்தமொழியில் இருக்க வேண்டும். இவை குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பேசியிருக்கிறேன் என்றார் வெங்கய்ய நாயுடு.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.