வங்கிகள் திவால்ஆகும் நிலைமை ஏற்பட்டாலும், பொது மக்களின் பணத்தை முழுமையாக பாதுகாப்போம் என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

நிதிதீர்வு மற்றும் சேமிப்பு காப்பீடு (எப்.ஆர்.டி.ஐ.) என்ற புதியமசோதாவை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம், பாராளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல்செய்யப்பட்டது. ஆனால், நிறைவேற்றப்படவில்லை. தற்போது, பாராளுமன்ற கூட்டுக்குழு இம்மசோதாவை ஆய்வு செய்துவருகிறது.

விரைவில் தொடங்க உள்ள பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது.

அதே சமயத்தில், இதில் உள்ள சில அம்சங்கள், பொதுமக்களின் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்துக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவை என்று பொருளாதார நிபுணர்களும், எதிர்க்கட்சியினரும் அச்சம் தெரிவித்தனர்.

வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனங்கள், பங்குச்சந்தை நிறுவனங்கள் போன்றவை திவால் ஆகும் நிலைமை ஏற்படும் போது, அதை சரி செய்வதற்காகவே இந்தமசோதா கொண்டுவரப்படுகிறது.

இதற்காக, ‘தீர்வுகழகம்’ என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்படும். இது, வங்கிகளின் வாராக் கடன்களை குறைத்து எழுதி, வங்கிகள் திவால் ஆகாமல்தடுக்கும். தற்போது, ரூ.1 லட்சம் வரையிலான அனைத்து சேமிப்புதொகையும் ‘சேமிப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழக சட்டம்‘ மூலம் பாதுகாக்கப் படுகின்றன. ஆனால், இந்த புதியமசோதா, மேற்கண்ட சட்டத்தை ரத்து செய்ய வழிவகுக்கிறது.

இதனால், பொதுமக்களின் சேமிப்பு தொகைக்கு ஆபத்து நேருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. வங்கிகள் திவால் ஆவதை தடுக்க, பொதுமக்களின் பணம் எடுத்து பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த விதிமுறையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், பொது மக்களின் அச்சத்தை போக்கும் வகையில், மத்திய நிதிமந்திரி அருண்ஜெட்லி நேற்று இதுபற்றி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

எப்.ஆர்.டி.ஐ. மசோதா குறித்து வதந்தி பரப்பப் படுகிறது. பொதுத் துறை வங்கிகளையும், நிதித் துறை நிறுவனங்களையும் பலப்படுத்த உறுதி பூண்டுள்ளதாக மத்திய அரசு ஏற்கனவே தெளிவுபடுத்திஉள்ளது. வங்கிகளை பலப்படுத்து வதற்காகவே, வங்கிகளில் ரூ.2 லட்சத்து 11 ஆயிரம்கோடி முதலீடுசெய்ய உள்ளோம்.

இது, வங்கிகளை பலப்படுத்து வதற்குத்தான். இதற்காக, வங்கிகள் திவால் ஆகும் நிலைமை ஏற்படும் என்று அர்த்தம் அல்ல.

ஒருவேளை, வங்கிகள் திவால் ஆகும் நிலைமை ஏற்பட்டாலும், வங்கிகளில் பொது மக்கள் போட்டு வைத்துள்ள பணத்துக்கு மத்திய அரசு முழுபாதுகாப்பு அளிக்கும். அதில் மத்திய அரசு மிகத்தெளிவாக உள்ளது.

மேலும், இந்த மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுசெய்து வருகிறது. அக்குழு என்ன சிபாரிசு செய்தாலும், அதை பரிசீலிக்க மத்தியஅரசு தயாராக இருக்கிறது.

இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார். 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.