மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரில் 25-12-1924 அன்று பிறந்த அடல் பிஹாரி வாஜ்பாய், வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து, இந்தியவிடுதலைப் போரில் ஈடுபட்டதற்காக 1942-ம் ஆண்டு சிறையில் அடைக்கப் பட்டார்.  அன்றுமுதல் தீவிரமாக தன்னை பொது சேவையில் ஈடுபடுத்திக் கொண்ட அவர், 1957-ம் ஆண்டு பல்ராம்பூர் தொகுதியில் இருந்து முதன் முதலாக பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, எம்.பி. ஆனார்.

 

அவரது பேச்சாற்றலை கண்டு வியப்படைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, 'என்றாவது ஒரு நாள் வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராக வருவார்' என தெரிவித்தார். 1970-ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலைசட்டம் (மிசா) பிரகடனப் படுத்தப்பட்ட போது, அதனை எதிர்த்துப்போராடி, கைதாகி, சிறைச்சென்ற முக்கிய அரசியல் தலைவர்களில் வாஜ்பாயும் ஒருவர்ஆவார்.

 

பின்னர், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உயர்ந்த வாஜ்பாயின் பெயர் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசியலோடு ஒன்றிணைந்த பெயராகவே மாறிப் போய் விட்டது.

 

திருமணமே செய்து கொள்ளாமல் முழுநேர அரசியல்வாதியாக வாழ்ந்தவர், இந்தியாவின் 10-வது பிரதமராக 16-5-1996 அன்று பதவி ஏற்றார். எனினும், பாராளு மன்றத்தில் போதுமான எம்.பி.க்களின் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் போனதைதொடர்ந்து 13 நாட்களிலேயே அவர் பதவி விலகநேர்ந்தது.

 

பின்னர், 1998-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக. தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியதையடுத்து, இரண்டாவது முறையும் பிரதமராக அவர் பதவி ஏற்றார். தேசியஜனநாயக கூட்டணிக்குள் ஏற்பட்ட கருத்து மற்றும் கொள்கை முரண்பாடுகளின் விளைவாக இந்தமுறையும் 13 மாதங்கள் மட்டுமே பிரதமராக அவர் பதவிவகிக்க முடிந்தது.

 

அதன் பிறகு, அடுத்த ஓராண்டுக்குள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 1999-ல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 303 எம்.பி.க்.களுடன் பாஜக. அபாரவெற்றி பெற்றது. இதனையொட்டி, 13-10-1999 அன்று மூன்றாவது முறையாக அவர் இந்தியாவின் பிரதமர் ஆனார்.

 

இம்முறை, முழுமையாக ஐந்தாண்டு காலம் தனது பதவியை நிறைவுசெய்த வாஜ்பாய், பொக்ரான் அணுகுண்டு சோதனை, கார்கில் போர் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்தி பாகிஸ்தானின் மூக்கை உடைத்தார். இதன்மூலம் இந்தியாவின் ஆற்றலையும், பெருமையையும் உலக நாடுகளுக்கு உணர்த்தினார்.

 

நாட்டின் முக்கிய பெரு நகரங்களை ஒன்றிணைக்கும் தங்க நாற்கர விரைவுநெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக இந்தியாவின் உள்கட்ட மைப்பையும் அவர் மேம்படுத்தினார். 6 முதல் 14 வயதுக்கிடைப்பட்ட பிள்ளைகளுக்கு இலவசமாக கட்டாய கல்வி அளிப்பதற்காக வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு அறிமுகப் படுத்திய ‘சர்வ சிக்‌ஷா அபியான்’ திட்டத்தின் மூலம் பள்ளி மாணவ – மாணவிகளின் இடைநிற்றல் 60 சதவீதம் அளவுக்கு குறைந்தது.

 

தேர்ந்த அரசியல்வாதி, மிகச் சிறந்த நிர்வாகி என புகழப்படும் வாஜ்பாய் கவிதைகள் எழுதும்கலையிலும் கைதேர்ந்து விளங்கினார். 2004-ம் ஆண்டு தனது ஐந்தாண்டு காலபதவியை நிறைவுசெய்த வாஜ்பாய், அரசியலில் இருந்து விலகுவதாக 2005-ல் அறிவித்தார். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பூரண ஓய்வில் இருக்கும் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு கடந்த 2015-ம் ஆண்டில் நாட்டிலேயே மிகவும் உயரியதான ‘பாரதரத்னா’ விருது வழங்கப்பட்டது.

 

மரபுகளை எல்லாம் கடந்தவகையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் இல்லம் தேடிச் சென்று சிறப்புக் குரிய இந்த விருதினை அவருக்குவழங்கினார்.கடந்த 25-ம் தேதி டெல்லியில் உள்ள இல்லத்தில் வாஜ்பாய் தனது 93-வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார். பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மற்றும் மத்திய மந்திரிகள் பலர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

 

அவரது பிறந்த நாளை மத்திய அரசும் பாஜக. ஆட்சி நடைபெறும் பல்வேறு மாநில அரசுகளும் நல்லாட்சி தினமாக கொண்டாடி மகிழ்கின்றன. அன்றைய தினம் சிறைகைதிகளின் தண்டனை குறைத்து விடுதலை செய்வது மற்றும் பல்வேறு நலதிட்டங்களை வழங்குவது போன்றவை நடை முறையில் உள்ளது.

 

இந்நிலையில், வாஜ்பாயின் அருமை, பெருமைகள் மற்றும் அவரது ஆட்சிமுறையின் சிறப்புகள் தொடர்பாக பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ரமேஷ் பொக்ரியால் நிஷான்க் என்பவர் ‘யுக புருஷர் பாரதரத்னா அடல் ஜி’ என்ற நூல் ஒன்றை இயற்றியுள்ளார்.

இந்த நூல் வெளியீட்டுவிழா டெல்லியில் நடைபெற்றது. துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு நூலினை வெளியிட்டு வாஜ்பாயை பற்றிய பலசுவாரஸ்யமான நினைவுகளை குறிப்பிட்டு வாழ்த்துரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.