மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்’ என்பதிலிருந்து ‘கல்விஅமைச்சகம்’ என பெயர் மாற்றப்பட்ட, புதிய அமைச்சகத்தில், 22 மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும்வகையில், வரவேற்பு பலகை, நிறுவப்பட்டுள்ளது.

கடந்த, 2014ல் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும், டில்லியில், பெயர் மாற்ற நடவடிக்கைகள் அரங்கேறின.

பிரதமர் இல்லம் அமைந்துள்ள, ரேஸ் கோர்ஸ் சாலை, லோக் கல்யாண் மார்க் என, பெயர் மாற்றப் பட்டது. ஒளரங்கசீப் சாலை, டாக்டர் அப்துல் கலாம்சாலை என மாற்றப்பட்டது. திட்டக் கமிஷனின் பெயர், நிடி ஆயோக் என மாற்றம் செய்யப்பட்டது. பா.ஜ., 2019ல் மீண்டும் ஆட்சிக்குவந்ததும், மத்திய நீர்வள அமைச்சகத்தின் பெயரை, ஜல்சக்தி அமைச்சகம் என மாற்றியது.

இந்நிலையில், உயர்கல்வி நிறுவனங்கள் உட்பட, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி அமைப்புகளை நிர்வகிக்கும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை, கல்வி அமைச்சகம் என, புதியபெயர் சூட்ட, ஜூலை, 29ல், மத்திய அமைச்சரவை, ஒப்புதல் வழங்கியிருந்தது. இந்தஒப்புதலை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முறைப்படி ஏற்று, அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.

இதையடுத்து, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அமைந்துள்ள சாஸ்திரிபவனில், அந்த பெயர் மாற்றப்பட்டு, கல்வி அமைச்சகம் என புதிய பெயர் பளிச்சிடுகிறது. இந்நிலையில், உயர் கல்வித்துறையின் செயலர் அமித்கரேயின் அலுவலகத்தின் முன், நேற்று, புதியபெயர் பலகை மாட்டப்பட்டுள்ளது.

அங்குவரும் பார்வையாளர்களை வரவேற்பதாக கூறும் அந்தபலகையில், இந்தியாவின், 22 மொழிகளில், வரவேற்புவாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அரசியல் அமைப்பு சட்டத்தின், எட்டாவது அட்டவணையில், இடம்பெற்றுள்ள, 22 மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும்விதமாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments are closed.