கர்நாடக மாநிலத்திலிருந்து காங்கிரஸ்கட்சி வெளியேறும் காலம் வந்துவிட்டது என பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா 85 நாள் பிரச்சார யாத்திரை மேற்கொண்டார். இந்தயாத்திரையின் ஒரு பகுதியாக பாஜக மேலிடத் தலைவர்கள் அமித்ஷா உள்ளிட்ட பலரும் கர்நாடகா வந்து சென்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடகா வந்துள்ளார். பெங்களூரு பேலஸ் கிரவுண்டில் அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.

பிரதமர் மோடி பேசும்போது, "கர்நாடகாவிலிருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்றும் காலம் வந்துவிட்டது. கர்நாடக காங்கிரஸுக்கு மட்டும் நாங்கள் முற்றுப் புள்ளி வைக்கப் போவதில்லை ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கலாச்சாரம் இல்லாத அரசியல், சமூகம், கலாச்சாரத்தை உருவாக்கப் போகிறோம்.

மக்களின் வாழ்வை எளிமையாக்கும் திட்டங்களையே மத்திய பாஜக அரசு அமல்படுத்தி கொண்டிருக்கிறது. அந்தத்திட்டங்களால் கர்நாடக மக்களும் பயனடைந்துள்ளனர்.

ஆனால், கர்நாடகாவிலும் பாஜக ஆட்சியே நடைபெற்றால் மத்திய அரசின் நலத் திட்டங்கள் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைத்திருக்கும்.

கடந்த 3.5 ஆண்டுகளில் மத்திய அரசு கர்நாடகத் துக்காக வழங்கிய நிதி எதுவுமே கர்நாடக மக்களின் நலனுக்காக சென்றடையவில்லை.

கர்நாடக அரசு மத்தியிலிருந்து 2 லட்சம்கோடிக்கும் அதிகமான நிதியைப் பெற்றிருக்கிறது. இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது வழங்கியதை விட 118% அதிகமானது என்பதை இங்கே வலியுறுத்த விரும்புகிறேன்.

ஆனால், அவ்வளவு நிதி பெறப்பட்டதற்கு சமமான வளர்ச்சியை மாநிலத்தில் நீங்கள் பார்க்கிறீர்களா? அதற்காகத் தான் இங்கே பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்கிறேன்.

அப்போதுதான் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்து செல்ல முடியும். பெங்களூருவில் 50 லட்சம் பயணிகள் சுமார் 80 ரயில் நிலையங்கள் வாயிலாக பயன்பெற நாங்கள் 160 கி.மீ தூரத்திலான புறநகர் ரயில்சேவைக்கு ரூ.17,000 கோடி செலவழிக்கிறோம்.

கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்குவந்தால், விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படும். விவசாயிகளை எடியூரப்பா இதயத்தில் தாங்குகிறார். விவசாயிகளுக்காக செயல்படுத்த எண்ணற்ற திட்டங்களை வைத்து ள்ளோம்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை விளைவிக்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை. அதாவது தக்காளி, வெங்காயம், உருளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்காக ஆபரேஷன் க்ரீன் என்ற திட்டத்தை அமல்படுத்துவோம். பால் வளத்தை பெருக்குவதில் அமுல் திட்டம் எப்படி முன்மாதிரியாக இருந்ததோ அதேபோல் ஆபரேஷன் க்ரீன் திட்டம் பழம், காய்கறி விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

உலகமே தொழில் வளத்தைப் பெருக்குவதற்கான நடைமுறைகளை எளிமைப் படுத்துவது குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது கர்நாடகா மட்டும் கொலைகள் நடக்கும் வழிகளைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. எதிர்ப்பாளர்கள் உயிரை துறக்க வேண்டும் என்றால் அது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இது மாநில அரசுக்கு அவமானத்தை ஏற்படுத்தக் கூடியது.

கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக ஊழல் குற்றச் சாட்டுகள் உள்ளன. பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கும் அவர்கள் லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுகின்றன. ஒருகாங்கிரஸ் அமைச்சர் பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கியதில் சிக்கினார். மணல் மாஃபியா, பணியிட மாறுதல் மாஃபியா, கட்டுமானத் துறைகளின் மாஃபியா என மாநிலத்தில் பல்வேறு ஊழல்கள் வேர் விட்டிருக்கின்றன. இரும்பு மேம்பாலத் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்ட நினைத்தனர். ஆனால், அதை தடுத்துவிட்டோம். அதன் பெருமை பாஜகவையே சாரும்.

கர்நாடகா அரசை வெளியில் 10% அரசாங்கம் என விமர்சிக் கிறார்களாம். காரணம், 10% கமிஷன் தரவில்லை என்றால் எந்த ஒரு அரசாங்கவேலையும் இங்கு நடக்காதாம். இது எவ்வளவு வேதனையானது.

நேற்று நமது இளம் இந்திய அணி 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றுள்ளனர். அதற்கு பின்னணியில் முக்கியகாரணமாக இருப்பவர் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட். அவர் நாம் எப்படி நேர்மையாக கடமையாற்ற வேண்டும்; மற்றவர்களுக்காக வாழவேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கிறார்.

இதுதான் கர்நாடகாவின் கலாச்சாரமும்கூட. ஆனால், தற்போது ஆளுங்கட்சி இந்தகலாச்சாரத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறது.

எப்படி காங்கிரஸ் முத்தலாக் சட்டத்தை தடுத்துநிறுத்த முயல்கிறதோ அப்படித்தான் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான சட்டத்தையும் தடுத்துநிறுத்த முயல்கிறது.

கர்நாடகா மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்ல நிச்சயம் கர்நாடக மக்கள் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவை வெற்றியடையச் செய்வார்கள் என நம்புகிறேன்" எனக் கூறி உரையை முடித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.