நான், ஒரு போதும் கவலைகளை என்னுடன் வைத்துக் கொள்வதில்லை. இதன் காரணமாக, தூங்குவது சிறிது நேரமானாலும், நிம்மதியாக உறங்கி புது நாளை உற்சாகத்துடன் வரவேற்பதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.


அரபு நாடுகளுக்கு 2 நாட்கள் பயணமாக சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, வளைகுடா நாட்டிலிருந்து வெளியாகும் Gulf News' XPRESS பத்திரிகைக்கு பேட்டியளித்தார்.


அந்தபேட்டியில் மோடி தெரிவித்துள்ளதாவது, நான் தினமும் 4 மணி நேரம் அல்லது 6 மணிநேரமே ( பணிச்சுமையை பொறுத்து) தூங்குகிறேன். குறைவான நேரமே தூங்கினாலும், நிறைவாக தூங்குகிறேன். படுக்கையில் படுத்த சில வினாடிகளில் தூங்கிவிடுவேன். எனது நிறைவான தூக்கத்திற்கு காரணம், நான் எப்போதுமே கவலைகளை என்னுடன் வைத்துக் கொள்வதில்லை. காலையில் எழுந்தவுடன் சிறிதுநேரம் யோகா பயிற்சி செய்கின்றேன். அது என்னை புத்துணர்ச்சியுடன் இருக்கவைக்கிறது. பின் பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்திகள், இமெயில்கள், போன் அழைப்புகள் உள்ளிட்ட வைகளை சரிபார்க்கிறேன்.

அதன்பின், எனது பெயரிலான 'நரேந்திர மோடி மொபைல் ஆப்'பில், மத்தியஅரசு திட்டங்களுக்கு மக்களின் கருத்துகள் மற்றும் அவர்களின் எதிர் வினைகளை கண்காணிக்கிறேன். இது, எனக்கும், மக்களுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப் படுத்துகிறது.


இரவு உறங்கச் செல்வதற்கு முன்னரே, மறு நாளைய நிகழ்வுகள், சந்திப்புகள் உள்ளிட்டவைகளை தயார் செய்து விடுகிறேன். இறுதி நேர அயர்ச்சிக்கு எப்போதும் நான் இடம் தருவதில்லை. பிடித்த உணவு குறித்த கேள்விக்கு, நான் உணவுவிஷயத்தில் எப்போதும் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை. சாதாரணமான சைவ உணவே எனது விருப்பம்.


நான் மாநிலத்தின் முதல்வராக இருந்த போதோ அல்லது தற்போது பிரதமராக இருக்கும் நிலையிலோ, விடுமுறை குறித்து யோசித்தது இல்லை. நான் பணியின் காரணமாக ஏற்படும் அசதியினை, மக்களுடன் இணைந்து கலந்துரையாடும் போதோ, அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை பார்க்கும் வகையில் நான் என்னுடைய கவலைகளை மறந்து நான் உற்சாகமாக பணியாற்ற அது பேரூதவிபுரிகிறது.


தொழில்நுட்ப உதவியுடனேயே, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தமுடியும் என்பதை உறுதியாக நம்புபவன் நான் என்றார்.சுவாமி விவேகானந்தர், மகாத்மாகாந்தி, சர்தார் வல்லபாய் படேல், பகத்சிங், அம்பேத்கர், அமெரிக்கா உருவாக காரணமானவர்களில் ஒருவரான பெஞ்சமின் பிராங்க்ளின் உள்ளிட்டோரை தன்னுடைய ரோல் மாடலாக கொண்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.