ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடத்தை வழங்கி, வீட்டோ அதிகாரத்தை அளிப்பதற்கு ஈரான் ஆதரவுதெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே சாபஹார் துறைமுகப்பணிகளின் இயக்கம் உள்பட 9 துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி யுள்ளன.
இந்தியா வந்துள்ள ஈரான் அதிபர் ஹசன்ரௌஹானிக்கு தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் சனிக் கிழமை பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.


அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை ஹசன்ரௌஹானி சந்தித்தார். அப்போது இரு தலைவர்களும் பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக விரிவாக பேச்சு வார்த்தை நடத்தினர். தவிர, ஆப்கன் உள்ளிட்ட பிராந்திய விவகாரங்கள் குறித்தும் அவர்கள் விவாதித்ததாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்தார். 


இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து மோடியும், ரௌஹானியும் கூட்டாக  செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ரௌஹானி கூறியதாவது: நாங்கள் வரி தொடர்பான விவகாரங்கள் குறித்தும் வங்கி உறவுகள் குறித்தும் ஆக்க பூர்வமான முறையில் பேச்சு நடத்தினோம். இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் முடிவு செய்துள்ளோம். இருநாடுகளும் முக்கியமான இரு தரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்த அதே வேளையில், ஒரு விஷயத்தில் கூட நாங்கள் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருக்கவில்லை.


100 கோடிக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட, அமைதியைவிரும்பும் நாடான இந்தியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் ஏன் அளிக்கப்பட வில்லை? அமெரிக்கா அந்த அதிகாரத்தை அனுபவிப்பது எப்படி? அணுகுண்டுகளை வைத்துள்ள ஐந்து சக்திவாய்ந்த நாடுகளுக்கு மட்டுமே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் வழங்கப் பட்டிருப்பது ஏன்? ஈரானியர்களின் தலைவிதியைத் தீர்மானிக்க அமெரிக்கா முயற்சிப்பது கண்டிக்கத் தக்கது.
இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவுகள் தொழில், வர்த்தகத்துக்கும் அப்பாற்பட்டு, வரலாற்றுடன் தொடர்புடையதாக உள்ளன. இருநாடுகளும் ஒரே விதமான வரலாறு மற்றும் கலாசாரத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன.
பயங்கர வாதத்தை எதிர்கொள்வதில் இந்தியாவும் ஈரானும் ஒரேநிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.


அமெரிக்கா வருந்தும்: உலக நாடுகளுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் இறுதிவரை நிறைவேற்றும். அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறினால், பின்னர் அந்த நாடு வருத்தப்பட நேரிடும்.ஆப்கானிஸ்தானின் அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் அனைத்து தரப்பினரும் பாடுபடவேண்டும் என்பதே இந்தியா, ஈரான் ஆகிய இருநாடுகளின் கருத்தாகும். சிரியா, இராக், யேமன் போன்ற பிராந்தியப் பூசல்கள் அனைத்தும் ராஜீய மற்றும் அரசியல் முன் முயற்சிகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றார் ரௌஹானி.


முன்னதாக பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா, ஈரான் ஆகிய இரு நாடுகளுமே பயங்கரவாதம் இல்லாத உலகையே விரும்புகின்றன. பயங்கரவாதம், போதை மருந்துக்கடத்தல், இணையவெளிக் குற்றங்கள் மற்றும் இதர சர்வதேசக் குற்றங்களை ஊக்குவிக்கும் சக்திகளின் விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்த உறுதிபூண்டுள்ளன. சாபஹார் துறை முகத்தை மேம்படுத்துவது, ஆப்கானிஸ்தானையும் மத்திய ஆசியாவையும் சென்றடைய உதவும். சாபஹார் துறை முகத்தை மேம்படுத்துவதில் ஈரான் அதிபர் காட்டிய அக்கறை பாராட்டத்தக்கது என்றார் மோடி.


இரு தலைவர்களின் சந்திப்பை தொடர்ந்து இந்தியாவுக்கும், ஈரானுக்கும் இடையே சாபஹார் துறைமுக பணிகளின் இயக்கம் உள்பட 9 துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் படி, சாபஹார் துறைமுகத்தின் முதல் கட்டமான ஷாகித் பெஹேஷ்டி துறைமுகத்தில் தற்போதுள்ள வசதிகளை அடுத்த 18 மாதங்களுக்கு இயக்குவது-கையாள்வது தொடர்பான ஒப்பந்தம், ஈரானின் துறைமுகம் மற்றும் கடல்சார் அமைப்புக்கும், இந்தியாவின் போர்ட்ஸ்குளோபல் லிமிடெட் நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்தானது. தவிர, இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு, குற்றவாளிகளை நாடு கடத்தும் உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது, ராஜீய-தூதரக கடவுச்சீட்டுகள் வைத்திருப்போருக்கு விசா அவசியம் என்பதில் இருந்து விதிவிலக்கு அளிப்பது, பாரம்பரிய மருத்துவ முறைகள், வர்த்தக நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக நிபுணர்குழு அமைப்பது உள்ளிட்ட ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன.


இந்த 9 ஒப்பந்தரங்கள் தவிர, மேலும் நான்கு உடன் படிக்கைகளும் இருதரப்புக்கும் இடையே கையெழுத்தானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியா மற்ற நாடுகளுடன் செய்து கொண்டுள்ளதை போல் ஈரானுடனும் இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


இந்தியா- ஈரான் இடையே இடையே முதலீடுகள், தொழில் நுட்பம் ஆகியவை வருவதையும், பணியாளர்கள் வருவதையும் இந்த ஒப்பந்தம் முறைப்படுத்தும். சர்வதேச தரத்தின்படி இருநாடுகளிடையே தகவல் பரிமாற்றத்துக்கும் இது வழிவகுக்கும். இது வரி விவகாரங்களில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதோடு வரி ஏய்ப்பைத் தடுக்கவும் உதவும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.