தொங்கு சட்ட சபை அமைந்துள்ள மேகாலயாவில், ஆட்சியமைக்க கவர்னரை சந்தித்து பாஜக.,வின் கூட்டணி கட்சியான தேசியமக்கள் கட்சி உரிமை கோரியுள்ளது.
நடந்து முடிந்த மேகாலயா சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களிலும் தேசியமக்கள் கட்சி 19 இடங்களிலும், பிறகட்சிகள் 17 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. கடந்த தேர்தலில் இங்கு ஒருதொகுதியில் கூட வெற்றிபெறாத பா.ஜ., இந்த முறை தே.ம.க.,வுடன் கூட்டணி வைத்து 2 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. இங்கு ஆட்சியமைக்க தேவையான 31 இடங்களை எந்தகட்சியும் பெறவில்லை. இதனால், அங்கு தொங்கு சட்டசபை அமைந்துள்ளது.
இந்நிலையில் பா.ஜ., கூட்டணியான தேசியமக்கள் கட்சி கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. தே.ம.க.,வின் கான்ராட்சங்மா கவர்னரிடம் உரிமை கோரினார். பா.ஜ., – தே.ம.க., கூட்டணிக்கு 8 யுடிபி, எச்.எஸ்.பி.டி.பி., எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களின் ஆதரவைதொடர்ந்து கான்ராட் சங்மா மேகாலயாவின் முதல்வராவது உறுதியாகியுள்ளது. நாளை மறுநாள்(மார்ச் 6) தே.ம.க., பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.