திரிபுரா மாநில முதல்வராக பாஜகவின் விப்லவ் குமார்தேவ் (48) நேற்று பதவியேற்றுக் கொண்டார். கட்சியின் மூத்த தலைவர் ஜிஷ்ணு தேவ் வர்மா, துணை முதல்வராக பொறுப்பேற்றார்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் சட்டப் பேரவைத் தேர்தல் கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்றது. 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற இத்தேர்தலில் 43 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றிபெற்றது. பாஜக தனியாக 35 தொகுதிகளையும், அதன் கூட்டணிக் கட்சியான திரிபுரா பழங்குடியின மக்கள்முன்னணி (ஐபிஎப்டி) 8 தொகுதிகளையும் கைப்பற்றின. 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரிபுராவில் ஆட்சியில் இருந்த இடதுசாரி கூட்டணியால், வெறும் 16 தொகுதிகளை மட்டுமே பெறமுடிந்தது.

திரிபுராவில் பாஜக வெற்றிபெற்றதை அடுத்து, சட்டப்பேரவைக் குழுத் தலைவராக விப்லவ் குமார் தேவ் அண்மையில் தேர்ந்தெடுக்கப் பட்டார். திரிபுரா மாநில முதல்வராக விப்லவ் குமார் தேவ் நேற்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ததகத ராய் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் சேர்ந்து 12 அமைச்சர்களும் பதவியேற்றனர். அவர்களில் இரண்டுபேர் பாஜக கூட்டணியான ஐபிஎப்டி கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர். துணை முதல்வராக பாஜக மூத்த தலைவர் ஜிஷ்ணுதேவ் வர்மா பொறுப்பேற்றார்.

திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நடைபெற்ற இப்பதவியேற்பு நிகழ்ச்சிக்காக 100 அடி நீளத்தில் பிரம்மாண்டமான விழாமேடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திரிபுரா அரசை வழிநடத்த உதவுங்கள்

திரிபுரா முதல்வராக மாநில பாஜக தலைவர் விப்லவ்குமார் தேவ் நேற்று பதவியேற்றார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

தற்போது திரிபுராவில் அமைந்துள்ள பாஜக ஆட்சி, அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய ஆட்சியாக அமையும். பாஜகவுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காத வர்கள் என்று எந்தவித பாரபட்சமும் இந்த ஆட்சியில் காட்டப்படாது.

அதேபோல், திரிபுரா மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில்இருந்த இடதுசாரிகளின் அனுபவத்துக்கும் நாங்கள் என்றும் மதிப்பளிப்போம். திரிபுராமுதல்வராக பொறுப்பேற்றுள்ள இளைஞர் விப்லவ் குமார் தேவுக்கு, நீங்கள் (இடதுசாரிகள்) பக்கத்துணையாக இருக்கவேண்டும். உங்கள் அனுபவத்தின் மூலம் இந்த ஆட்சியை சிறப்பாக வழிநடத்த உதவுங்கள்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.