தமிழர்களை காப்பாற்ற முடியவில்லை. ஆனால் தமிழைவைத்து பிழைப்பு நடத்த ராகுல்காந்தி முயற்சிக்கிறார் என்று பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் குற்றம்சாட்டினார்.

 

பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள 85% மக்களின் நம்பிக்கையாக ரத யாத்திரை உள்ளது. தமிழகத்தில் எந்தவித கலவரங்களும் இன்றி ரத யாத்திரை அமைதியாக நடைபெறும்போது திமுக, விசிக உள்ளிட்ட கட்சியினர் அதை ஏன் எதிர்க்கின்றனர்? ஸ்டாலின், திருமாவளவன் போன்றவர்கள் இதுபோன்ற அரசியலை இனி முன்னெடுக்க முடியாது.

தமிழகத்தில் நேர்மறையான அரசியல் வர வேண்டும். எதிர்மறையான அரசியலுக்கு இனி தமிழகத்தில் வழியில்லை.

சேலத்தில் மத்திய அரசின் உதான்திட்டத்தின் கீழ் வருகிற 25-ந் தேதி விமானசேவை தொடங்குகிறது. இது சேலத்தின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். சேலம் உள்பட 5 இடங்களில் ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இந்தியாவோடு தமிழகத்தையும், முன்னேற்ற பாதையில் பிரதமர் மோடி கொண்டுசெல்கிறார்.

 

ஆனால் ஏதோ தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிப்பது போன்ற ஒரு தோற்றத்தை சிலர் ஏற்படுத்தி வருகின்றனர். இந்திய வரலாற்றிலேயே தலைவர்களில் மிகமோசமான உரை என்றால் அது டெல்லி காங்கிரஸ் மாநாட்டில் பேசிய ராகுல்காந்தி உரை தான் ஆகும். தவறு செய்த நிரவ் மோடியை, பிரதமர் மோடியுடன் இணைத்து பேசுவது கண்டிக்கத்தக்கது.

 

சோனியா காந்தி குடும்பத்துக்கும், காந்திகுடும்பத்துக்கும் என்ன சம் பந்தம். ஆனால் அவர்கள் பெயருக்கு பின்னால் காந்தி என்ற பெயரை வைத்துக்கொண்டு மக் களை ஏமாற்றி வருகின்றனர். அழகுதமிழை பா.ஜனதா கட்சி முடக்க பார்க்கிறது என்று ராகுல்காந்தி கூறுகிறார். அழகு தமிழை பேசிய லட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட போது எங்கே போனார் ராகுல்காந்தி. தமிழர்களை காப்பாற்ற முடியாத ராகுல்காந்தி தமிழை வைத்து பிழைப்புநடத்த முயற்சிக்கிறார் என்று நேரடியாகவே குற்றம்சாட்டுகிறேன்.

 

பா.ஜனதா ஒரு அமைப்பின் குரல் என்கிறார் ராகுல்காந்தி. 22 மாநிலங்கள் மற்றும் மத்தியில் ஆட்சிசெய்வதுடன், 60 சதவீத மக்களின் ஆதரவு பெற்ற ஒரு கட்சியின் குரல் தான் நாட்டின் குரல். எதிர்க்கட்சியாக கூட இருக்க முடியாமல் சுருங்கி கொண்டே போகும் காங்கிரஸ் குரல்தான் ஒரு குடும்பத்தின் குரல் ஆகும்.

 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்று தெளிவாக கூறி வருகிறோம். கர்ப்பிணிகள், மாணவிகள், காதலிக்க மறுப்பவர்கள் என பெண்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் சென்றால் நகைப்பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உருக்காலையை தனியார் மயமாக்குவது குறித்தமுழுமையான எந்த அறிவிப்பும் இல்லை.

 

காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக பா.ஜனதா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நாட்டின் பொருளாதாரம் பற்றி பேச மன்மோகன் சிங்கிற்கு எந்ததகுதியும் இல்லை. மத்திய அரசை யாராலும் அசைக்க முடியாது.

 

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.