"கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பா, தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக் கழகத்துக்கு துணை வேந்தர் ஆகலாமா?"- என்று கொதிப்பவர்களின் கவனத்துக்கு….

ஒன்றுபட்ட சென்னை ராஜதானியாக விளங்கிய காலம். கொச்சி, திருவனந்தபுரம் சமஸ்தானங்கள் நீங்கலாக இன்றைய கேரளத்தின் – மலபார் உள்ளிட்ட – இதர பகுதிகள்; அன்றைய மைசூர் சமஸ்தானம் நீங்கலாக, இன்றைய கர்நாடகத்தின் பெல்லாரி உள்ளிட்ட பகுதிகள்; ஹைதராபாத் நிஜாம் சமஸ்தானமும், விஜயநகர அரசும் நீங்கலாக, சித்தூர், நெல்லூர், விஜயவாடா, கடப்பா, கர்நூல் உள்ளிட்ட ஆந்திரப் பகுதிகள்..- இவை அனைத்தையும் உள்ளடக்கியது 'சென்னை ராஜதானி'! அதன் ஆகப் பெரிய, பாரம்பரியம் மிக்க ஒரே பல்கலைக்கழகம் 'மதராஸ் யூனிவர்சிட்டி'- அதாவது இன்றைய சென்னைப் பல்கலைக் கழகம்.

அந்த மதராஸ் யூனிவர்சிட்டியில் 27 வருட காலம் தொடர்ந்து துணை வேந்தராக இருந்தவர், 1942 – 1969 வரை, மொழிவாரி மாநிலங்கள் அமையும் முன்பும், பின்பும் துணைவேந்தராக இருந்தவர் Dr A லட்சுமணசாமி முதலியார்! அப்போது அவர் மிகச் சிறந்த கல்வியாளர், கறைபடியாத நேர்மையாளர் என்ற ஒரு விஷயம்தான் பார்க்கப்பட்டதே தவிர கன்னட-தெலுங்கு- மலையாளம் இருந்த நிலப்பரப்பில் ஒரு தமிழர் மட்டுமே எப்படி மொழிவாரி மாநிலம் பிரிக்கப்படும் வரை (1955) தொடர்ந்து துணைவேந்தராக இருந்தார் என்ற கேள்வி வரவில்லையே?

Dr அழகப்ப செட்டியார் வள்ளல் பெருந்தகை – அவர் நிறுவிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு ஒரு 'பார்ப்பனர்' ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரியை நியமித்தாரே – அந்த வரலாறு இந்தப் போராளிகளுக்குத் தெரியுமா?

தமிழகக் கல்லூரிகளில் 'செமஸ்டர் முறை' யை அறிமுகப்படுத்தியவர் Dr மால்கம் ஆதிசேஷையா என்ற தெலுங்குப் பார்ப்பனர் – அவர் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பிறகு 1976 பேட்ச் முதல் கலைக் கல்லூரிகளில் பட்ட வகுப்புகளுக்கு 'செமஸ்டர்' முறை வந்தது!

இந்தப் போராளிகளுக்கு இந்த விபரம் எல்லாம் தெரியுமா? கல்வியாளர்களில் எதற்காக இந்தத் தமிழன், கன்னடன், பார்ப்பான், பார்ப்பனர் இல்லாதவன் என்ற வேறுபாடு? நம்மைப் பொறுத்தவரை ஆற்காடு லட்சுமணசாமி முதலியார், மால்கம் ஆதிசேஷையா, டாக்டர் மு வரதராசனார், தெ பொ மீனாட்சி சுந்தரனார் (மதுரைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்கள்)… – எவராக இருப்பினும் அவர்கள் தகுதியும் தரமும் மிக்க நல் அறிஞர்கள்! அரசியல் சிபாரிசு மூலம் பதவியைப் பிடித்த சில கழிசாடைகளின் தரம் பற்றிதான் இப்போது செய்திகளில் பார்க்கிறோமே!

நமக்குத் தேவை நமது கல்வி நிலையங்களுக்கு நல்ல துணைவேந்தர்கள் – அவர்கள் எங்கிருந்து வந்தாலும் வரவேற்போம் – வந்த பின் அவரது செயல்பாடு எப்படி என்று பார்ப்போம். வரும்போதே கன்னடன் வரலாமா, தெலுங்கன் வரலாமா என்ற கூச்சல் எதற்கு?!!

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.