இதுவரை இந்தியாவில் 10 முறை ராணுவக் கண்காட்சி நடைபெற்றுள்ளது, சென்ற முறை பாஜக ஆளும் கோவாவில் நடைபெற்றது. காங்கிரஸ், திமுக ஆட்சி செய்து கொண்டிருந்தபோது கூட இப்படிப்பட்ட தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் கண்காட்சியை நடத்தியது கிடையாது. வாய்ப்பு கொடுத்த பாரத பிரதமருக்கு நன்றி, இந்த கண்காட்சி தமிழகத்திற்கு வரவிருக்கும் பாதுகாப்பு தொழில் உற்பத்தி புரட்சிக்கு முன்னோட்டம். 60 நாடுகள் பங்கெடுத்து நம் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் ஓர் கண்காட்சியை திறந்து வைப்பதற்காக பிரதமருக்கு நன்றி,

ஆனால் அப்படிப்பட்ட நிகழ்ச்சியை துவக்க வந்த பாரத பிரதமரை கொச்சைப்படுத்தி சில கட்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பது கண்டிக்கத்தக்கது. இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. இங்கே நடக்கும் போராட்டங்கள் காவிரியைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக அல்ல, விவசாயிகளுக்காகவும் அல்ல, மோடி எதிர்ப்பு மட்டுமே இதில் பிரதானமாக இருப்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்ல இந்தியாவில் ஒரு வலிமையான பிரதமர் இருக்கிறார் என்றல் தங்களால் வருங்காலத்தில் அரசியல் பிழைக்க முடியாது என்று நினைக்கும் அயல் நாட்டு சக்திகளின் கைக்கூலிகள் இங்கே காவிரியின் பெயரில் போராட்டங்களை தூண்டிவிட்டு கண்ணியம் தவறி அரசியல் அநாகரிகமாக நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது. நான் தமிழக மக்களிடம் கேட்கிறேன் இதே திமுக மற்றும் ஆதரவு கட்சிகளும், தமிழ் உணர்வாளர்கள் என சொல்லிக் கொள்வர்களும் இலங்கை தமிழர்கள் மாண்டு மடிய காரணமான காங்கிரஸ் பிரதமர் மண் மோகன் அவர்களுக்கும், சோனியா அவர்களுக்கும் எத்தனை முறை கருப்பு கொடி காட்டினீர்கள், இது மோடி வெறுப்பின் வெளிப்பாடு தானே.

 

உச்ச நீதி மன்றமே மீண்டும் வரும் 3 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்ததும் இரு மாநிலங்களும் போராட்டம் இன்றி அதுவரை அமைதி காக்க வேண்டும் என்று சொன்ன பிறகும் வேண்டுமென்றே போராட்டம் நடத்தும் இவர்கள் தான் நீதி மன்றத்தை அவமதிக்கிறார்கள்.

 

கூட்டத்தில் தானே பிக்பாக்கிட் அடித்து விட்டு மற்றவர்கள் கண்டுபிடித்து விட கூடாது என்பதற்காக திருடன் திருடன் என்று கத்திக்கொண்டே திருடனே ஓடுவது போல் காவிரி நதி நீர் உரிமையை தான் சுய லாபத்திற்காக தொலைத்தவர்கள் அதை வைத்து மூன்று தலைமுறையாக பதவி சுகம் கண்டவர்கள், தாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது செய்ய தவறியதை தற்போது உச்ச நீதி மன்றமே இறுதி தீர்ப்பாக வழங்கி இன்னும் சில வாரங்களில் மோடி அரசால் செயல் வடிவம் பெற இருக்கும் சூழலில் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வேண்டுமென்றே தமிழகத்தை ஒரு அரசியல் போர்க்களம் ஆக்கி கொதிநிலையில் வைத்து பொது அமைதியை கெடுத்து அதில் குளிர்காய நினைக்கும் கூட்டத்தை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்று வேண்டுகிறேன்.

 

காவிரி பிரச்சனையில் ஸ்டாலின் மற்றும் அத்துணை தலைவர்களும் சுயநலத்தோடு தான் நடந்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது நாடறியும். 

 

நாகரிகத்துக்கும், பொது அமைதிக்கும் இருப்பிடமாக தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் எதிர்ப்பு அநாகரித்தின் உச்ச கட்டமாக காவிரியின் பெயரால் முன்னிறுத்தப்பட்டது, ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நம் மாநிலத்திற்கு வெறும் 1500 கோடி ரூபாய் பொருள் இழப்பு மட்டுமல்ல தமிழகத்தின் நற்பெயருக்கே பெரும் களங்கம்.

 

தமிழகம் ஒரு இழவு வீடு என்று சிலர் சொல்வதை தமிழக மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மோடி அவர்களின் செல்வாக்கு மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியால் போராடும் திரைப்பட துறையினர் கடந்த காலங்களில் தமிழகத்தில் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு எத்தனை முறை திரை அரங்கங்களை மூடினார்கள், எத்தனை முறை திரைப்படங்களை நிறுத்தினார்கள்?

 

தமிழகத்திக்கு எந்தவித வளர்ச்சி திட்டங்களுக்கு வந்து விட கூடாது என்ற குறுகிய எண்ணத்துடன் செயல் படும் தமிழ் ஆர்வலர்கள் என்ற போர்வையில் சில தமிழர் விரோத சக்திகளின் கைகளில் தான் இந்த போராட்டங்கள் இயங்குகிறது. இவர்களை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கவிட்டால் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க முடியாது, விவசாயிகள், விவசாயம் என்று கூக்குரலிடும் இவர்கள் கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு என்ன நன்மை செய்திருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

 

மோடி அரசு தமிழக விவசாயிகளுக்கு இந்தியாவிலேயே அதிக தொகையாக 2700 கோடி ரூபாய் பயிர் காப்பீட்டு திட்டத்தில் கொடுத்திருக்கிறார்கள். ஆக இங்கே காவிரி எதிர்ப்பு என்ற பெயரில் தமிழக்தை நிலைகுலையைச் செய்யும் ஒரு மிகப்பெரிய சூழ்ச்சியை திமுக உள்ளிட்ட கட்சிகள் எடுத்துக் செல்கின்றன என்பதை தமிழக மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

 

7 கோடி மக்கள் வாழும் தமிழகத்தில் சில இடங்களில் கருப்பு கொடி பிடித்து விட்டு கருப்பு சர்வதேச மொழி என்று பெருமை பேசுவோர்களை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். கருப்பு கொடி காட்டுவதிலும் ஒரு கண்ணியமும், நாகரிகமும், பண்பாடும் இருக்க வேண்டும் இதை மீறி எல்லை தாண்டி நடந்து கொள்ளும் தமிழர் விரோதிகளை தமிழ் மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

நன்றி டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக பாஜக தலைவர்.

Leave a Reply