என்னப்பா கர்நாடக எலெக்சன் பற்றி ஒரு அப்டேட்டும் இல்லையே தோல்வியடைந்து விடுவீர்கள் என்கிற பயத்தில் தேர்தலை மறந்து விட்டீர்களா என்று சில நண்பர்கள் கிண்டல் செய்து கொண்டே இருந்தார்கள். அவர்களுக்காகவே கர்நாடகம் நோக்கி மீண்டும் ஒரு அரசியல் பயணம்.

நேற்று வரை தெற்கு கர்நாடகாவில் உள்ள சாமுண்டீஸ்வரி தொகுதியில் மட்டும் நின்று ஜெயிப்பேன் என்று மார்தட்டி வந்த சித்தாராமையா இப்பொழுது வடக்கு கர்நாடகாவில் இருக்கும் பதாமியிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

பதிலுக்கு எடியூரப்பாவும் கட்சி உத்தரவிட்டால் சித்தராமையாவை எதிர்த்து பதாமியில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இதுதான் கர்நாடகா அரசியலில் இப்போதைய ஹாட் நியூஸ்…

எடியூரப்பா போடியிடுகிறாரோ இல்லையோ கர்நாடக தேர்தல் களத்தில் பதாமி தொகுதி அகில இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. சித்தராமையா வடக்கு கர்நாடகாவில் உள்ள பதாமியில் போட்டியிட முக்கிய காரணம் அங்கு லிங்காயத்துக்களை அடுத்து அதிகளவில் இருப்பவர்கள் சித்தராமையா ஜாதியை சேர்ந்த குருபர்கள்தான்.

குருபர்கள் ஓட்டுக்கள் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கிற தைரியத்தில் சீதாராமையா பதாமியில் களம் இறங்கியுள்ளார். ஆனால் இந்த பதாமி பிஜேபிக்கு ஆதரவான தொகுதி என்று கடந்த கால தேர்தல் வரலாற்றில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

லிங்காயத்துக்கள் அதிகமுள்ள பிஜேபிக்கு சாதகமான இந்த தொகுதி யில் போட்டியிட இருக்கும் சித்தராமையாவின் துணிச்சலுக்கு ஒரு அரசியல் ஆர்வலராக என்னுடைய சல்யூட்…

ஒரே நேரத்தில் வடக்கு கர்நாடகாவில் பதாமி அடுத்து தெற்கு கர்நாடகாவில் சாமுண்டீஸ்வரி என இரண்டு தொகுதிகளிலும் சித்தராமையா போட்டியிட முடிவு செய்துள்ளதன் முக்கிய நோக்கம் என்னவென்றால் வடக்கு கர்நாடகா மற்றும் தெற்கு கர்நாடகா என்று ஒட்டு மொத்த கர்நாடகாவிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு உத்வேகத்தை அளிக்க முடியும் என்கிற நம்பிக்கையில்தான்.

ஆனால் சித்தராமையா என்னதான் கணக்கு போட்டாலும் காங்கிரசால் இனிமேல் மீண்டும் கர்நாடகாவில் ஆட்சிக்கு வரமுடியாது என்கிற நிலையே இப்பொழுது உள்ளது. ஏனென்றால் இப்பொழுது வரும் கருத்துக்கணிப்புகள் எல்லாம் கர்நாடகாவில் தொங்கு சட்டமன்றமே அமையும் என்று கூறி வருகின்றது. சில கருத்துக்கணிப்புகள் பிஜேபி தனிப்பெரும் கட்சியாக வரும் என்று கூறுகின்றது

இந்தியா டுடே மாதிரி சில கருத்துக் கணிப்புகள் தொங்கு சட்டமன்றம் தான்; ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு தான் அதிக தொகுதிகள் கிடைக்கும் என்று கூறுகிறது.

எது எப்படியோ பிஜேபி காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் ஆட்சி அமைக்கும் மெஜாரிட்டியை இன்னும் தொட்டு விடவில்லை என்பதே கருத்துக் கணிப்புகளின் மையமாக இருக்கிறது.

ஆனால் நான் பிஜேபி தான் மெஜாரிட்டியோடு ஜெயித்து அடுத்து ஆட்சியில் அமரப்போகிறது என்கிறேன். இதைத்தான் கர்நாடக தேர்தலில் மையம் கொண்டுள்ள தேர்தல் சூதாட்டமும் கூறுகின்றது.

பெங்களூரில் பிஜேபி தான் அடுத்து ஆட்சி அமைக்கும் என்று அதிகளவில் பெட்டிங் ஓடிக்கொண்டு இருக்கிறது.

ஏனென்றால் இப்பொழுது வரும் கருத்துக் கணிப்புகள் அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு 100 இடங்கள் என்றும் பிஜேபிக்கு 90 இடங்கள் வரை கிடைக்கும்; காங்கிரஸ் கட்சிக்கு 37 சதவீதம் ஓட்டுக்களும் பிஜேபிக்கு 35 சதவீத ஓட்டுக்களும் கிடைக்கும் என்று இந்தியா டுடே கணித்துள்ளது. இந்தியா டுடேயின் ரீஜன் வாரியான ஓட்டு ஷேரிங்கில் தவறான கணிப்புகளே இருக்கின்றது.

எது எப்படியோ…

கர்நாடக தேர்தலில் பிஜேபி-காங்கிரஸ் இடையே கடும் போட்டியிள்ளது என்பது உண்மை என்று வைத்துக்கொண்டால் தேர்தல் நெருங்க நெருங்க அது எதிர்கட்சிக்கே சாதகமாகும் என்பதை வலுவான எதிர்க்கட்சியும்; அதற்கு இணையான ஆளும்கட்சியும் போட்டியிட்ட தேர்தல்களில் வெற்றி எதிர்க்கட்சியின் பக்கமாகவே வந்துள்ளது என்பதை பல தேர்தல்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

அதாவது ஒரு தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும் பொழுது தேர்தல் நெருங்க நெருங்க ஆளும்கட்சியின் மீது மக்கள் கோபம் அதிகரிக்கும். அதே நேரத்தில் எதிர்க்கட்சியின் மீது மக்களின் ஈர்ப்பு அதிகரிக்கும்.

ஏனென்றால் ஆளும் கட்சி ஆட்சியில் இருந்ததினால் செய்த தவறுகள் மக்கள் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக கோபமாகி கொண்டே வரும். இதைத்தான் ஆண்டி இன்கம்பன்சி என்று சொல்வார்கள்.

ஆனால் எதிர்க்கட்சிக்கு இந்த மாதிரி தேர்தல் நேரத்தில் வரும் ஆண்டி இன்கம்பன்சி கிடையாது. அதனால் ஹாயாக தேர்தலை எதிர்கொள்வார்கள். இந்த cool நிலையிலேயே பிஜேபி இப்பொழுது தேர்தலை எதிர் கொண்டு வருகின்றது. காங்கிரஸ் கட்சியோ ஆட்சிக்கு எதிரான ஆண்டி இன்கம்பன்சியை எதிர் கொண்டு வருகிறது.

தேர்தல் லாஜிக் என்னவென்றால் தேர்தல் நெருங்க நெருங்க மக்கள் எதிர்க்கட்சி பக்கம் மெல்லமாக திரும்ப ஆரம்பிப்பார்கள். இந்த லாஜிக் தான் பிஜேபியை ஆட்சிக்கு கொண்டு வந்துவிடும் என்று உறுதியாக
நினைக்கிறேன்.

ஏனென்றால் இந்தியா டுடே கருத்து கணிப்பு படி காங்கிரஸ் கட்சிக்கும் பிஜேபிக்கும் இடையில் இருப்பது வெறும் 2 சதவீத ஓட்டுக்கள் தான்.

தேர்தல் நெருங்க நெருங்க இந்த 2 சதவீத வாக்குகள் வித்தியாசம் குறைந்து கொண்டே வந்து மெல்ல மெல்ல பிஜேபி பக்கம் 2 சதவீத வாக்குகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இப்போதைய நிலையில் பிஜேபி 1 சதவீத வாக்குகளை அதாவது காங்கிரஸ் கட்சியை விட குறைவாக 36 சதவீத வாக்குகளை பெற்றாலும் பிஜேபி காங்கிரஸ் கட்சிக்கு இணையாக 100 தொகுதிகளை பெற்று விடும்.

அதே நேரத்தில் பிஜேபி காங்கிரஸ் கட்சிக்கு இணையாக 37 சதவீத வாக்குகளை பெற்றால் சுமார் 110 தொகுதிகளுக்கு மேல் பெற்று ஆட்சியை பிடித்து விடும் என்பதில் எனக்கு துளி கூட சந்தேகமில்லை..

இது தான் இப்போதைய கர்நாடக தேர்தல் களத்தில் இருக்கும் உண்மையான நிலைமை.

ஆனால் என்னுடைய ஆசை என்னவென்றால் பிஜே பி க்கு 130 தொகுதிகளுக்கு மேலாக கிடைக்க வேண்டும் என்பதே. இது சாத்தியமாகுமா என்று நீங்கள் கேட்கலாம்.

இதற்கும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் பிஜேபிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இருந்த வாக்கு வித்தியாசம் வெறும் 2 சதவீதம் தான்.

2014 பாராளுமன்ற தேர்தலின் பொழுது கிடைத்த வாக்குகளின் படி கர்நாடகா சட்டமன்ற தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த முன்னிலைபடி பார்த்தால் பிஜேபி 43 சதவீத ஓட்டுக்களை பெற்று 133 சட்ட மன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 41 சதவீத ஓட்டுக்களை பெற்று 72 சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னிலை பெற்று இருந்தது.

மதசார்பற்ற ஜனதா தளம் 11 சதவீத வாக்குகளை பெற்று 19 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருந்தது. ஆக ஒரு இரண்டு சதவீத வாக்கு வித்தியாசம் பிஜேபிக்கு காங்கிரசை விட 61 தொகுதிகளில் அதிகமாக முன்னிலை பெற்று இருந்ததை அறிந்து கொள்ளலாம்.

அது மட்டுமல்லாது பாராளுமன்ற தேர்தலில் மத சார்பற்ற ஜனதா தளம் பெற்ற 11 சதவீத ஓட்டுக்கள் இந்த சட்டமன்ற தேர்தலில் 20 சதவீதமாக அதிகரிக்கும் என்றே தெரிகிறது.

இதனால் அதிகமான பாதிப்பு யாருக்கு என்றால் காங்கிரஸ் கட்சிக்கு தான் என்று சிறு பிள்ளை கூட சொல்லிவிடும்.இதை உறுதி செய்யும் வகையில் தெற்கு கர்நாடகாவில் இருக்கும் மைசூர் ரிஜனில் கடந்த மாதத்தில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. ஆனால் இப்பொழுது மத சார்பற்ற ஜனதாதளம் தான் முன்னிலையில் இருக்கிறது..

இந்த ஒரு விஷயத்தை வைத்தே காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும் கட்சி அந்தஸ்து கிடைக்காது என்று சூடம் அடித்து சத்தியம் செய்யலாம். மத சார்பற்ற ஜனதா தளம் வாங்கும் ஒவ்வொரு ஓட்டும் காங்கிரஸ் கட்சிக்கு வைக்கப்படும் வேட்டு என்றே சொல்ல வேண்டும்.

தெற்கு கர்நாடகாவில் ஒக்கலிகர்கள் மத்தியில் உருவாகி வரும் மத சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவான எழுச்சி நிச்சயம் காங்கிரஸ் கட்சியை காலி செய்து விடும்.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் கர்நாடகா தேர்தல் களத்தில் இதுவரை அமித்ஷா மட்டுமே நின்று தேர்தல் பிரச்சாரத்தை முன்னின்று நடத்தி வருகிறார். அதற்கே பிஜேபி காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கிட்டதட்ட சம அளவி ல் வாய்ப்புள்ளதாகவே கருத்துக்கணிப்புகள் தெரிவித்து வருகின்றது.

ஆனால் மோடி இன்று வரை கர்நாடகா தேர்தல் களத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. இனி மேல் தான் மோடியின் பிரச்சாரமே ஆரம்பிக்க உள்ளது கர்நாடக மக்களின் நம்பிக்கை நாயகன் மோடிதான்.

அதனால் இப்பொழுது காங்கிரசோடு சம நிலையில் இருக்கும் பிஜே பி மோடி பிராச்சரத்திற்கு பிறகு முதல் இடத்திற்கு வந்து மெஜாரிட்டியோடு ஆட்சி அமைக்கும் என்று 100 சதவீத நம்பிக்கையுடன் உறுதி அளிக்கிறேன்.

சரிப்பா… டைட்டிலில் அடுத்த வாதாபி கொண்டான் யார் என்று வைத்து விட்டு அதைப்பற்றி ஒன்றுமே சொல் லாமல் போய்க்கொண்டு இருக்கிறாயே என்று நீங்கள் கேட்க வருகிறீர்களா…

இதோ வந்து விட்டேன் டைட்டிலுக்கு… இந்த வாதாபி என்கிற வார்த்தைக்கும் நம்முடைய தமிழ்நாட்டிற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.

கர்நாடக முதல்வர் சீதாராமையா போட்டியிட உள்ள பதாமி தொகுதிக்கு பழைய பெயர் என்ன தெரியுமா?

வாதாபி… கர்நாடகாவின் புகழ்பெற்ற சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசியின் புண்ணிய பூமி. ஒரு காலத்தில் சாளுக்கியர்களின் தலைநகரமாக இருந்த இந்த வாதாபி தான் இப்பொழுது பதாமியாக மாறியுள்ளது.

நம்ம நரசிம்ம பல்லவர் இருந்தார் அல்லவா.. அவர் தன்னுடைய அப்பாவான மகேந்திர வர்மனை பல்லவ பூமியில் நுழைந்து தோற்கடித்ததால் மனம் குன்றி இறந்து விட்டதற்கு பதிலடியாக சாளுக்கிய பூமியில் நுழைந்து வாதாபியை தீ வைத்து கொளுத்தியதோடு… …

இரண்டாம் புலிகேசியையும் கிபி 642 ல் கொன்று விட்டார் என்று கூறி நம்முடைய வரலாறுகள் நரசிம்ம பல்லவரை வாதாபி கொண்டான் என்று இன்றும் அழைத்துக் கொண்டு இருக்கிறது.

அந்த வரலாற்று பூமியான வாதாபியான பதாமி தொகுதியில் போட்டியிடும் எடியூரப்பா vs சீதாராமையா ஆகிய இருவரில் வாதாபியை அடைய இருப்பது யார் என்கிற தேர்தல் வெற்றியை வைத்தே அடுத்த வாதாபி கொண்டான் யார் என்று டைட்டிலை வைத்தேனே தவிர வேறொன்றுமில்லை. இதில் எடியூரப்பா லிங்காயத்து சாதியை சேர்ந்தவர்.

இந்த லிங்காயத்துகளின் மூலம் தேடிச்சென்றால் 1800 வருடங்களுக்கு முன் தமிழகத்தில் இருந்து புலம் பெயர்ந்த கடம்பர்கள் தான் என்று வரலாறு சொல்கிறது. அதனால் எடியூரப்பாவை ஒரு பண்டைய தமிழ் இனத்தின் வழித்தோன்றல் என்றே சொல்லலாம்.

அதே நேரத்தில் சாளுக்கிய வம்சத்திற்கு பின் கர்நாடகாவை ஆண்டவர்கள் வடக்கில் இருந்து வந்த தேவகிரி யாதவா வம்சத்தை சேர்ந்தவர்கள் இந்த யாதவா வம்சத்தில் இருந்து வந்தவர்கள்தான் சித்தராமையாவின் குருபர்கள் இனத்தினர்.

ஆக இன்றைய பதாமியான அன்றைய வாதாபியை முன் வைத்து தெற்கில் இருந்து கர்நாடகா சென்ற கடம்பர்களின் வழியில் வந்த எடியூரப்பாவும் வடக்கில் இருந்து கர்நாடகா வந்த யாதவர்களின் வழி சித்தராமைய்யாவும் வாதாபிக்காக நடத்தும் யுத்தத்தில் யார் ஜெயிக்கிறார்களோ அவரே அடுத்த வாதாபி கொண்டான் என்று வரலாறு சொல்லும்.

வாதாபியை பற்றி சொல்லும் பொழுது ஒரு முக்கிய விஷயம் ஒன்றையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நம்முடைய தமிழ்நாட்டில் விநாயகர் வழிபாடு துவங்க முக்கிய காரணமானது இந்த வாதாபி பூமிதான் இரண்டாம் புலிகேசியை அழித்துவிட்டு அங்கிருந்த வாதாபி விநாயகரை பல்லவ பூமிக்கு கொண்டு வந்து நரசிம்ம பல்லவன் வணங்கி வந்தார் என்று வரலாறு கூறுகிறது.

அந்த வாதாபி விநாயகர் சிலை இப்பொழுது எங்கு இருக்கிறது என்பது பற்றி இன்றும் நம் தமிழகத்தில் பல கருத்துக்கள் உள்ளது. ஒரு தரப்பு நாகப்பட்டினம் மாவட்டம் திருச்செங்காட்டங்குடியில் இருக்கும் உத்திரா பசுபதீஸ்வரர் என்கிற கணபதீஸ்வரர் கோயிலில் இருக்கிறது என்கிறார்கள்.

இதற்கு காரணமாக சிறுத்தொண்டர் என்கிற 63 நாயன்மார்களில் ஒருவரை கூறுகிறார்கள்.

ஏனென்றால் வாதாபியை தீ வைத்து கொளுத்திய நரசிம்ம பல்லவனின் சேனாதிபதியான பரஞ்சோதி இந்த வாதாபி போருக்கு பிறகு மனம்மாறி அசோகர் மாதிரி துறவியாகி விட்டார். அந்த பல்லவ சேனாதி பதி தான் 63 நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டர் என்றும் நம்முடைய பல்லவ வம்ச வரலாறுகள் கூறுகின்றது.

இதனாலே சிறுத்தொண்டர் அவதரித்த பூமியான திருச்செங்காட்டங்குடி கோயிலில் இருக்கும் விநாயகர் சிலையே வாதாபி விநாயகர் என்று சொல்லப்ப டுகிறது. இதையேதான் பல்லவ சாளுக்கிய பகையை வைத்து கல்கி எழுதிய சிவகாமியின் சபதம் நாவலில் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் இன்றைய ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் திருவாரூர் தியாகராஜா கோயிலில் இருக்கும் விநாயகர் தான் சாளுக்கிய சிற்பக்கலையினை ஒத்துள்ளது. அதனால் தியாகராஜா கோயிலில் இருக்கும் விநாயகர் தான் வாதாபி விநாயகர் என்று தேங்காய் உடைத்து சொல்கிறார்கள்.

எதுவோ இருந்து விட்டு போகட்டும். கன்னட பூமியில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலை தான் தமிழ் நாட்டில் பிள்ளையார் வழிபாட்டினை துவக்கி வைத்துள்ளது என்று சொல்லலாம்..

சரிப்பா முடிவாக என்ன சொல்ல வருகிறாய் என்று கேட்கிறீர்களா..15 நூற்றாண்டுகளாக மொழிரீதியா கவும் இன ரீதியாகவும் பிளவு பட்டுள்ள கர்நாடக தமிழக மக்களிடையே அன்றும் இன்றும் ஒற்றுமையாக இருக்கும் ஒரே விஷயம் இந்து மதம் மட்டும் தான்.

ஆதலால் இந்து ஒற்றுமை என்கிற உணர்வு இருக்கும் வரை இந்தியாவை எந்த ஒரு தீய சக்தியாலும் பிரித்து விட முடியாது என்றும் அந்த இந்து மதத்தின் தத்துவ கோட்பாடுகளின் படி செயல்படும் பிஜேபி கர்நாடகாவில் ஆட்சி அமைக்க வாதாபி விநாயகர் அருள் புரிவார் என்று கூறி என்னுடைய நீண்ட அரசியல் பயணத்தினை நிறைவு செய்கிறேன்

Leave a Reply