குமரி மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக கடல்சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழும்பி தடுப்புசுவரையும் தாண்டியதால், கரையோரம் இருக்கும் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால், கடற்கரையோர கிராமங்களை சேர்ந்தவர்கள் வீடுகளை விட்டுவெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்தனர்.

கடல் சீற்றம் காரணமாக வள்ளவிளை பகுதியில் 5 வீடுகள் இடிந்தன. இது போல், மாவட்டத்தில் பலபகுதிகளில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மேலும் பல பகுதிகளில் கடற்கரை சாலைகள் துண்டிக்கப்பட்டு, போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், கொல்லங்கோடு அருகே கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட நீரோடி, மார்த்தாண்டன் துறை, வள்ளவிளை போன்ற கடலோர பகுதிகளை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் பார்வை யிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். வள்ளவிளை பங்குத் தந்தை டார்வின், பங்குபேரவை செயலாளர் சுனில் ஆகியோர் கடல் சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்திய மந்திரியிடம் விளக்கிகூறினர்.

கடந்த ஆண்டு ஒகிபுயலின் போது துண்டிக்கப்பட்ட நீரோடி- இனயம் கடலோர சாலை இது வரை சீரமைக்கப் படாமல் உள்ளது. அந்தசாலையை மத்திய மந்திரி நேரில் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வள்ளவிளை பகுதியில் கடல்சீற்றத்தால் அலை தடுப்பு சுவர் சேதமடைந்து உள்ளது. இங்கு ஒருவாரத்திற்குள் தற்காலிகமாக அலைதடுப்பு சுவர் அமைக்கப்படும்.

வீடுகளை இழந்தமக்களுக்கு பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், சொந்த இடம் இருப்பவர்களுக்கும், மாநில அரசு ஒதுக்கீடுசெய்து கொடுப்பவர்களுக்கும் உடனடியாக வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய மந்திரியுடன் பா.ஜனதா கட்சியை சேர்ந்த பலர் உடனிருந்தனர்.

மண்டைக்காடு புதூர் பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் கடலுக்குள் அமைக்கப் பட்டிருந்த தூண்டில் வளைவு சேதமடைந்தது. மேலும், 3 மின் கம்பங்கள் உடைந்து விழுந்தன.

இந்தபகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியமந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டார். அவருடன் பங்குதந்தை மைக்கேல்ராஜ் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.