மேற்கு வங்க பிஜேபி – சி.பி.எம் கட்சியினரில் ஒருபிரிவினர். ஆம், பி.ஜே.பி-யினரும் சி.பி.எம் கட்சியினரும் ஒரேஅணியாகச் சேர்ந்து பஞ்சாயத்துத் தேர்தலில் செயல்படுகின்றனர்.

மேற்கு வங்கத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 1, 3 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர் என்று பிரச்னை ஏற்பட்டது. எதிர்க் கட்சியினர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் முறையிட்டதை அடுத்து, மே 14-ம் தேதியன்று ஒரேகட்டமாகத் தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில், மொத்தமுள்ள 58,692 பதவிகளில் 20,076 இடங்களில் (34.2 சதவிகிதம்) திரிணாமூல் காங்கிரஸ் கட்சியானது போட்டியி ல்லாமல் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளைக் கண்டித்தே, எதிரெதிர் தரப்புகளான சிபிஎம், பி.ஜே.பி கட்சியினர் ஒன்றுசேர வேண்டியதாகி விட்டது என இரு தரப்புமே ஞாயப்படுத்துகிறார்கள்.

 

ஆளும் கட்சியின் தேர்தல் வன்முறைகளுக்குக் கண்டனம் தெரிவித்து நாடியா மாவட்டத்தின் கரிம்பூர்-ரனகட்பகுதியில் கடந்த மாதக் கடைசியில் பெரிய ஊர்வலம் நடந்தது. அதில் சி.பி.எம் கட்சியினரும் பி.ஜே.பி-யினரும் கூட்டாகப் பங்கேற்றுள்ளனர். இரு கட்சிகளின் கொடிகளையும் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ள காட்சி ஊடகங்களில் பதிவாகியுள்ளது.

“கட்சியின் அடிமட்ட அளவில் தேர்தல்தொடர்பாக பரஸ்பரப் புரிந்துகொள்ளல் ஏற்பட்டுள்ளது; நிறைய இடங்களில் கிராமத்தில் ஒருவருக்கொருவர் போட்டியிட விரும்புகின்றனர்; அதைமதித்தாக வேண்டும். ஆனால், இதற்கும் கட்சியின் கொள்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என நாடியா மாவட்ட சி.பி.எம் கட்சியின் மாவட்டச்செயலாளர் சுமித் டே கூறியுள்ளார்.

இரு கட்சியினரும் இணைந்து பங்கேற்ற பேரணி பற்றி அதில்பங்கேற்ற சிபிஎம் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான ராமா பிஸ்வாஸ் கூறுகையில்,“திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வன்முறைக்கு எதிராக கிராமத்தினரே அந்தப் பேரணியை நடத்தினர்” என்று விளக்கம் அளித்தார்.

மேற்குவங்க பி.ஜே.பி தலைவர் திலிப்கோஷ்,” ஆமாம். திரிணாமூல் கட்சியின் வன்முறையை எதிர்த்து எங்கள்கட்சியினர் அழைப்புவிடுத்த பேரணியில் சி.பி.எம் கட்சியினர் பங்கேற்றனர் ” என்று கூறினார்.


கிராமப் பஞ்சாயத்துகள் அளவில் சி.பி.எம் கட்சியினர் சுயேச்சைகளாக நிற்கும் இடங்களில், பி.ஜே.பி சார்பில் வேட்பாளர்களை அறிவிக்க வில்லை; இதைப்போலவே பி.ஜே.பி-க்காக சி.பி.எம் கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்பதே நாடியா மாவட்டத்தில் ‘கமுக்கக்கூட்டணி’அரசியலை உறுதிப்படுத்தியது. ஆனால் சி.பி.எம் கட்சியின் தரப்பில் தெளிவாகவும் தெளிவில்லாமலுமாக ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.