தமிழக பாஜக. தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் திருச்சியில்  நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகாவில் ஒருவாரம் முகாமிட்டு பிரசாரம்செய்தேன். அங்கு சிறப்பான சூழ்நிலை நிலவுகிறது. மக்கள் அமோக ஆதரவு அளித்தனர். கர்நாடகாவில் பாஜக. வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் என்பார்கள். அதுபோல் எடியூரப்பா ஆட்சியின் அருமையை சித்தராமையா ஆட்சியின் மூலம் மக்கள் தெரிந்துள்ளனர்.

காவிரி விவகாரத்தை மத்தியஅரசு தெளிவாக அணுகியிருக்கிறது. ஆள சிந்தித்து கால அவகாசம் எடுத்துக் கொண்டுள்ளது. அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம் தமிழகத்திற்கு நல்ல தீர்வுகிடைக்கும். இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டுதான் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை 14-ந்தேதி சந்திக்கிறது. கர்நாடக தேர்தலில் அரசியல் இருப்பது உண்மைதான். 4 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டும், சித்தராமையா தண்ணீர் இல்லை என்று கூறிவிட்டார். இதற்கு தமிழகத்தில் எந்தவித எதிர்ப்பும் கிளம்ப வில்லை. பா.ஜ.க.வை மையமாக வைத்தே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எந்த எதிர்ப்புகள்வந்தாலும் அதனை சந்திப்போம்.
 

காவிரி பிரச்சனைக்காக நடை பயணம் மேற்கொள்பவர்கள் பெங்களூரில் நடைபயணம் செல்ல வேண்டியது தானே. மு.க.ஸ்டாலின் இங்கு அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டுகிறார். அவர்கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் ராகுல் காந்தியை அழைத்து சென்று சித்தராமையாவிடம் பேச வேண்டியதுதானே. இதன்மூலம் இந்த விவகாரத்தில் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார்கள்.

பா.ஜ.க. 22 மாநிலங்களில் ஆட்சிசெய்கிறது. அதுபோல் 23-வது மாநிலமாக கர்நாடகாவிலும் ஆட்சி அமைக்கும். அங்கு ஆட்சிஅமைந்ததும் தமிழகத்தில் காவிரிதண்ணீர் திறந்துவிடப்படும்.

காவிரி மட்டுமல்லாமல் முல்லைபெரியாறு, பாலாறு பிரச்சனையும் உள்ளது. அதற்கெல்லாம் யார்காரணம் என்று முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நதிகள் பிரச்சனை அனைத்திற்கும் பாஜக. நிரந்தர தீர்வுகாணும். கோதாவரி நீரும்கூட பெற்றுதரப்படும். குட்கா விவகாரத்தில் தி.மு.க.வை சேர்ந்த ஒருவரது பெயரும் அடிபடுகிறது. இதற்கு மு.க.ஸ்டாலின் என்ன சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை. நதிகள் இணைப்புக்கு முதலில் குரல்கொடுத்தவர் வாஜ்பாய்தான். அதன்பிறகு ரஜினிகாந்த் குரல்கொடுத்தார். வாஜ்பாய் இருந்திருந்தால் நதிகள் பிரச்சனைக்கு தீர்வு கண்டிருப்பார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.