தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள்
இருக்கலாம்….. அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்….

அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்….ஆனால்,
இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது…..

20 ஆயிரம் பேர் கொண்ட மக்கள் திரளில் வன்முறையைத் தூண்ட 20 பேர் போதும்….அந்த 20 பேரின் தூண்டுதலில்உற்சாகம் அடைந்த ஒரு200 பேர் —
அது வளர்ந்து 200 என்று போராட்ட களத்தைரணகளம் ஆக்கிவிட முடியும்…..

முதலில் வன்முறையை தூண்டிய 20 பேரும் அடுத்து தொடர்ந்த 200 — 2000 பேரும்
இப்படி நடந்து கொள்ள போகிறார்கள் என்று போராட வந்த மக்களுக்கு தெரிந்து இருக்கும் என்றும் சொல்ல முடியாது….

நடந்த வன்முறை சம்பவங்களில் ஒரு தனித்துவம் தெரிகிறது… மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களைத் தாக்குவது… ஆலையின் குடியிருப்பை தாக்குவது… தீயிட்டு கொளுத்துவது… எல்லாம் சராசரி பொதுமக்கள்
நடத்தும் போராட்டங்களில் காண முடியாதவை …..

அரசியல் கட்சிகளின் ஊர்வலங்களில் கூட வன்முறை சம்பவங்கள் நிகழ்வது உண்டு… அது பஸ்களின் மீது கல்லெறிவதாகவே இருக்கும்.! அரசு அலுவலகங்களை தீயிட்டு கொளுத்த முயற்சிப்பது

அதன் மூலம் அரசு எந்திரத்தை தூண்டி பதில் தாக்குதலை நடத்தச் செய்வது போன்ற வன்முறைகளை – அரசியல் கட்சிகளின் போராட்ட முறைகளில்
எளிதாக பார்க்க முடியாது! ஜனநாயக ஆட்சி முறையை ஏற்காதவர்கள் தான்
இப்படி பட்ட வன்முறையை நடத்துவது வழக்கம்….

மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள அரசியல் கட்சிகள் இந்த அலை பிரச்சினையை முன்னெடுத்து மக்களை வழி நடத்தி இருந்தால் அரசுக்கு அழுத்தம் தந்து சுமூகமாகவே தீர்வு கண்டிருக்க முடியும்.

ஆனால்,அரசியல் கட்சிகளின் தளத்தை சிறு குழுக்கள் ஆக்கிரமிக்கும் போக்கு
தமிழகத்தில் அதிகரித்து வருகிறது…. இந்த குழுக்கள் தாமாக இயங்குகின்றனவா
அல்லது வேறு யாருக்காவது இயங்குகின்றனவா என்பது பற்றிய தகவல் மத்திய- மாநில அரசுகளிடம் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை!

கட்டுக்கடங்காத கூட்டமும் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையும் துப்பாக்கி சூடு நடத்த காரணமாகி இருக்கிறது…… போலிஸார் மீது தாக்குதல் நடத்தி ஓட ஓட விரட்டப்பட்டதை காண முடிகிறது….. இதை ஒரு சாகசமாக பார்ப்பதை விட
கேவலம் எதுவும் இல்லை!

துப்பாக்கிச் சூடு நடத்தப்படாமல் இருந்தால் அசம்பாவிதத்தின் அளவு அதிகமாக விரிவடைந்து இருக்க வாய்ப்பு உண்டு… ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையை
தனியாகவும் இன்றைய போராட்டத்தின் பின்னணியை தனியாகவும் பிரித்து பார்க்க வேண்டும்!

ஏற்பட்டு இருக்கும் உயிர் இழப்புகளை சர்வ சாதாரணமாக கடந்து சென்று விட அரசு முயற்சிக்கக் கூடாது! மக்களும் அதை அனுமதிக்கக் கூடாது! இந்த உயிர் இழப்புகளை அரச கொலைகள் என்ற விமர்சனம் இனி கிளம்பும்…. அதைக் கண்டு அஞ்சி மாநில அரசு தற்காப்பு வாதங்களை முன் வைப்பதில் கவனம் செலுத்தாமல்

போராட்ட வன்முறையை வடிவமைத்தவர்கள் யார் என்று மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும்! சிறந்த- திறம்பட்ட அரசு நிர்வாகத்திற்கு அது தான்
அடிப்படை தகுதி… அந்த தகுதி தனக்கு இருப்பதாக காட்ட எடப்பாடி பழனிச்சாமி
தலைமையிலான அரசுக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது…..

நன்றி வசந்த பெருமாள்

 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.