தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டம் வன்முறையாளர்களின் கரங்களில் சிக்கியதால் திசைதிரும்பி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இதனால், விலை மதிப்பற்ற 12 உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இது மிகவும் கவலைக்குரியது; கண்டனத்துக்குரியது.

ஆனால், இந்தப் போராட்டம் கடந்து வந்த பாதையைக் கவனித்தவர்களுக்கு, போராட்டத்தின் இறுதிக்கட்டம் இந்த நிலையைத்தான் அடையும் என்பதைக் கணிப்பதில் சிரமம் இருக்க முடியாது. ஏனெனில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும், ஆரம்பத்தில் வெகுமக்கள் போராட்டமாக இருந்த களத்தை விஷமிகள் சிலர் சாதுரியமாக ஆக்கிரமித்ததன் பலனை சென்னை கடற்கரையில் நிகழ்ந்த கலவரத்தில் நாம் கண்டிருக்கிறோம்.

முதலில் இத்திட்டத்தை எதிர்க்க அதிமுகவுக்கு மட்டுமே முழு உரிமையும் உண்டு. முதல்வராக இருந்த ஜெயலலிதா மட்டுமே ஸ்டெர்லைட் ஆலை மீது நடவடிக்கை எடுத்தவர். மாறாக அந்த ஆலை அமையக் காரணமான கட்சி திமுக. அதைத் துவக்கி வைத்தவர் கருணாநிதி. அதன் நிர்வாக இயக்குநர் குழுவில் இருந்தவர், ராகுல் காந்தியின் பிரதான ஆலோசகரான ப.சிதம்பரம். அந்த ஆலையிடம் இருந்து நன்கொடை பெறாத அரசியல் கட்சிகள் குறைவு.

தாமிர ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுப்புகையால் நகரில் பாதிப்பு ஏற்பட்ட பிறகே, ஆலைக்கு எதிரான போராட்டம் துவங்கியது. ஆரம்பத்தில் அதுவும் ஆலையின் அருகில் மட்டுமே காணப்பட்டது. அன்மைக்காலமாகத் தான் இந்தப் போராட்டம் பிரமாண்ட வடிவெடுத்தது. இதன் பின்புலத்தில் கிறிஸ்தவ அமைப்புகள் உண்டு.

தொழில்துறை முன்னேற்றத்தால் சூழல் மாசுபடுவது என்பது தூத்துக்குடியில் மட்டுமல்ல, திருப்பூரிலும், ஈரோட்டிலும், கோவையிலும், வாணியம்பாடியிலும், அம்பத்தூரிலும், ஹோசூரிலும் கூட உண்டு. ஆனால், வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகிய காரணங்களுக்காக நாம் சூழல் மாசுபாட்டை அறிந்தே கடக்கிறோம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையும் அப்படிப்பட்டதே. அங்கும் ஆயிரக் கணக்கான பணியாளர்கள் வேலை செய்கின்றனர்.

நாட்டின் பொருளாதாரம் முக்கியமா, சுற்றுச்சூழல் முக்கியமா என்ற கேள்வி தர்ம சங்கடமானது. எந்த நாணயத்திலும் இரு பக்கங்கள் உள்ளன. தவிர இந்த விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு சாதகமாக உள்ளன. கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு நீதிமன்றம் கெடு விதித்தால் அதை ஆராதிப்பவர்கள், ஸ்டெர்லைட் விஷயத்திலும் நீதிமன்றத்தின் உத்தரவைப் பரிசீலித்திருக்க வேண்டும்.

மாறாக, தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டு பொங்கிக் கொந்தளிக்கும் மனநிலையே மிகுதியாகக் காணப்படுகிறது. பெரியவர் ஒருவர் பல ஆண்டுகள் பகுத்தறிவைப் பிரசங்கித்ததாலோ என்னவோ, இங்கு அந்த அம்சம் மிகவும் பற்றாக்குறையாகிவிட்டது. அதனால்தான், ஸ்டெர்லைட் விவகாரத்தை அரசுக்கு எதிரான போராட்டமாக ‘போராளிகளால்’ மாற்ற இயன்றது.

தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவே இது வரை செயல்பட்டு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் பங்கு ஏதுமில்லை. சொல்லப் போனால், பாஜகவும் இந்த ஆலைக்கு எதிராக ஆரம்ப காலத்திலேயே போராடி இருக்கிறது. இதையெல்லாம் சீர் தூக்கிப் பார்க்க இங்கு யாரும் தயாரில்லை.

ஜெயலலிதா போன்ற சர்வாதிகாரியின் ஆட்சியிலிருந்து விடுபட்ட தமிழகத்துக்கு இப்போது தலைமை தாங்க பலரும் எத்தனிக்கிறார்கள். அவர்கள் எந்த விஷயத்தையும் பெரிதுபடுத்துவதிலும், சமூகப் பதற்றத்தில் குளிர் காய்வதிலும் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றனர். அதன் விளைவே கடந்த பல மாதங்களில் தமிழகத்தில் ஏற்பட்டு வரும் பதற்றங்கள்.

நல்ல தலைமை இல்லாத நாடு எத்தனை வளங்களைப் பெற்றிருந்தாலும் பயனில்லை என்று குறள் (740) கூறும். அது உண்மையே என்பதைத்தான் இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பிரிவினைவாதிகளும், அடிப்படைவாதிகளும் மக்களை திசை திருப்புகின்றனர். தூத்துக்குடி போராட்டத்தில் தமிழ்த்தேசியப் பிரிவினைவாதிகள், நக்ஸல் ஆதரவாளர்களின் ஊடுருவல் துவங்கியபோதே, இந்தப் போராட்டத்தின் திசை மாறிவிட்டது.

வெகுஜனக் கருத்தாக்கத்தை ஒட்டி அரசியல் தலைவர்கள் பலரும் பின்வாங்கிய நிலையில், பிரிவினைவாதிகள் மக்களை திசை திருப்பியதில் வெற்றி கண்டிருக்கிறார்கள். மே 22-இல் தூத்துக்குடி நகரின் சாலைகளில் ஆவேசத்துடன் காவலர்களைத் துரத்திய மக்கள் திரளுக்கு, அதன் பின்விளைவு தெரியாது. அவர்களைத் தூண்டிவிட்டவர்கள் பதுங்குமிடத்தில் பத்திரமாக இருப்பார்கள்.

அண்மையில் தூத்துக்குடியில் பிரமாண்டமான ஸ்டெர்லைட் எதிர்ப்புப் பேரணி நடைபெற்றபோதே, சில வாண்டுகள் அதனை தமிழ்த் தேசிய உதயத்துக்கு முதல் படி என்று முகநூலில் விஷம் கக்கியிருந்ததை மறக்க முடியாது.

இந்த விவகாரத்தை தமிழக அரசு கையாண்டதில் தோல்வி அடைந்துவிட்டது. அரசும் காவல்துறையும் போராட்டத்தின் பின்னணீயில் இருப்பவர்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்திருக்க வேண்டும். இப்போது நிலைமை கைமீறிய பின், துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டி வந்திருக்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் பலர், விவரம் அறியாதவர்களே.

இதைச் சொன்னால், நான் அரசின் கைக்கூலியாக வசை பாடப்படுவேன். உண்மையில் காவல் துறையால் தனிப்பட்ட முறையில் கடுமையாக பாதிக்கப்பட்டவன் நான். அதற்காக, காவலர்களைத் தாக்குவதை என்னால் ஆதரிக்க முடியாது. பிறகு சட்டத்தின் ஆட்சி என்ற சொல்லை நாம் மறந்துவிட வேண்டியதுதான். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் எரிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கு யார் பதில் சொல்வது?

ஆகவே எனது முகநூல் நண்பர்களுக்கு, இதையே வேண்டுகோளாக வைக்கிறேன்.

உங்கள் அரசியல் சார்பு நிலை, முன்முடிவுகள், போராட்டக் குணம், சூழியல் ஆர்வம் ஆகியவற்றை விட மக்களின் இயல்பு வாழ்க்கை முக்கியம். தூத்துக்குடி மக்களின் பெயரைப் பயன்படுத்தி பிரிவினை அரசியல் செய்யாதீர்கள்.

துப்பாக்கிச்சூடு குறித்து அரசும், நீதித் துறையும் நடவடிக்கை எடுக்கட்டும். நீங்கள் விவரமின்றிப் பொங்காதீர்கள். அதனால் குலைவது நமது சமூக ஒருமைப்பாடு தான்.

பொங்குதல் யார்க்கு எளிய- அரியவாம்
இங்கிதம் காணும் செயல்.

-ஸ்டெர்லைட் குறள்.

நன்றி முரளி முத்துவேலு

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.