மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நிதித்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விகடனுக்கு அளித்த பேட்டி

 

“தூத்துக்குடி போராட்டத்தின் போது தமிழக அரசின் செயல்பாடு எப்படி இருந்தது?"

“போராட்டம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தமிழகஅரசு கண்காணிக்க தவறி விட்டது. தமிழக அரசு செயல் படாமல் உள்ளது". 

“செயல்படாத, மக்களுக்கு எதிரான இந்த அரசை பிஜேபி. பின்னால் இருந்து இயக்குவதாக சொல்லப் படுகிறதே?''

“இந்த அரசுக்கு பின்னணியிலும், முன்னணியிலும் பிஜேபி. இல்லை. தவறாக அப்படி சொல்லபடுகிறது". 

“போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தக் காரணம் யார்?"

“தமிழகத்தில் நடைபெறும் பலபோராட்டங்களில் பிரிவினைவாதம் பேசும் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளார்கள் என்று ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போதே நான் கூறினேன். ஆனால், அரசு அதைக் கண்டுகொள்ள வில்லை. அதன் விளைவுதான் தமிழகத்தில் பலபாதிப்புக்களை உருவாக்கி வருகிறது. இவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தவறி விட்டது. திமுக. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இதுபோன்ற பிரிவினை வாதிகளுடன் மறைமுகமாக தொடர்பு வைத்திருக்கிறார். தி.மு.க. தலைவர் கலைஞர் செயல்பாட்டில் இருந்திருந்தால் இதுபோன்று நடக்காது".

“பி.ஜே.பி-க்கு எதிராகப் போராடுகிறவர்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது ஏன்? "

“அப்படி இல்லை. தனித்தமிழ்நாடு கேட்கும் பிரிவினைவாதிகள் சமீபகாலமாக பல போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர். இவர்களால் பல ஆபத்துகள் உள்ளன. அவர்களைக் கண்டறிந்து முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். 1980-ம் ஆண்டுகளில் நக்ஸல் பிரச்னை அதிகமிருந்தது. அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், வால்டர் தேவாரத்துக்கு அதிக அதிகாரத்தைக் கொடுத்து நக்ஸலைட்டுகளை ஒழித்தார். கப்பலோட்டிய தமிழனை சிறையில் அடைத்த கலெக்டர் ஆஷுக்கு வீர வணக்கம் என்று சிலர் போஸ்டர் அடிக்கிறார்கள். இப்படியே விட்டால், தீவிரவாதிகள் தமிழக தேசத் தலைவர்களை இழிவுபடுத்துவார்கள். இதை காங்கிரஸ் கட்சி கண்டிக்கவில்லை. பிரிவினைவாதம் தமிழகத்தில் மேலோங்கி வருவது ஆபத்தானது. விரைவில் மத்திய அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்." 

“நீட், காவிரி என பல பிரச்னைகளில் தமிழர்களுக்கு எதிராக பிஜேபி இருப்பதாக சொல்லப்படுகிறதே…?" 

“தமிழர்களின் நலனுக்காகவே பலதிட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அது தவறாகப் பரப்பப்படுவதால் பி.ஜே.பி-யை விமர்சிக்கிறார்கள். விரைவில் மக்கள் புரிந்து கொள்வார்கள்".

“பல திட்டங்கள் மூலம் பிரதமர் மோடி, சாதனை செய்துள்ளதாகக் கூறுகிறீர்கள். பெட்ரோல்விலை ஏற்றத்திலும் உலகசாதனை என்று சொல்லலாமா?"

“பல நாடுகளுடன் ஒப்பிடும் போது நம் நாட்டில் பெட்ரோல் விலை குறைவுதான். மாநில அரசுகள் தான் பெட்ரோலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவர தயக்கம் காட்டி வருகிறது. மாநிலங்களின் உரிமையில் தலையிடக்கூடாது என்பதால், மத்திய அரசு பெட்ரோல் விலையில் மாற்றம்செய்யவில்லை".

“கர்நாடகாவில் பி.ஜே.பி-யின் திட்டம்தோற்றது ஏன்?"

“நியாயப்படி அங்கு பிஜேபி-தான் ஆட்சி அமைத்திருக்கவேண்டும். விரைவில் காங்கிரஸ் கட்சியிலுள்ள எம்எல்ஏ-க்கள் அக்கட்சியை விட்டுவெளியே வந்துவிடுவார்கள்".

“காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பி.ஜே.பி-க்கு வந்துவிடுவார்கள் என்று சொல்கிறீர்களா?"

“அப்படிச் சொல்ல முடியாது", என்று சுருக்கமாக முடித்துகொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.