இந்தோனேஷியா வுடனான இந்தியாவின் உறவு என்பது, இந்தியாவுக்கு பலவகைகளில் சீனாவிடமிருந்து பாதுகாப்பை தரவல்லது என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள். நீண்டகால எல்லை பிரச்சினை, அணு சப்ளை குரூப்பில் இந்தியாவுக்கு இடம்தரவிடாமல் மறுப்பது, பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத குழுக்கள் மீது சர்வதேச தடைவிதிக்க விடாமல் ஐநாவில் முட்டுக்கட்டை போடுவதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம், சீனா இந்தியாவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தபடி உள்ளது.

இந்த நிலையில்தான் அமெரிக்காவுடன் நட்பைதொடரும் அதே வேளையில், கிழக்கு ஆசிய நாடுகளுடன் இந்தியா நெருக்கம்காட்டுவது காலத்தின் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பாதுகாப்பு கொள்கை என்பது இது வரை பிரிட்டிஷ் காலத்திய நடைமுறையை பின்பற்றியே இருந்துவந்தது. நரேந்திர மோடி அரசு இதைமாற்றி, பாரம்பரியமான நமது கடல்வழி உறவுகளை பலப்படுத்து வதற்கான முக்கியத்துவத்தை தர ஆரம்பித்துள்ளது. அதில் ஒருநாடுதான் இந்தோனேஷியா.

இந்தோ-பசிபிக் மண்டல த்திலுள்ள நாடுகளுடனான உறவை பலப்படுத்துவதன் மூலம், புவிசார் பொருளாதார மேம்பாட்டையும், பாதுகாப்பையும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துவருகிறது மத்திய அரசு. இந்தோனேஷியா வுடனான வரலாற்று ரீதியிலான, கலாச்சாரம் மற்றும் வியூக அடிப்படையிலான உறவை பலப்படுத்தும் வகையில், பிரதமர்மோடி முதல் முறையாக இந்தோனேஷியா சென்றுள்ளார். இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூரில் மோடி 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
 
இந்தியாவின் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கும் இந்தோனேஷி யாவின் அச்சே பகுதிக்கும் நடுவே 80 நாட்டிகல் மைல்தொலைவு கூட இல்லை என்பதில் இருந்து அந்த நாடு நமக்கு அண்டைநாடுதான் என்ற அடிப்படையில் இந்த சுற்றுப்பயணம் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. ராஜதந்திர வியூக அடிப்படையில் பார்த்தால் அமெரிக்கா, சீனாவை போன்றே, இந்தியாவுக்கு இந்தோ னேஷியாவும் முக்கியமான நாடு. காரணம், இந்தோ-பசிபிக் மண்டலத்தில் இந்தோனேஷியா அமைந்துள்ள பூகோள இடம்அப்படி.
 
இந்த பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நாடாக தன்னை உருமாற்ற இந்தோனேஷியா முயன்றுவரும் இந்த சூழ்நிலையில், இந்தியாவின் நட்புக்கரம் அதை வலுப்படுத்த உதவும். சீனாவின் அதிகாரபரவலை தடுக்க உதவும் முக்கியமான நாடுகளில் ஒன்றுதான் இந்தோனேஷியா. இந்தியாவின் பொருளாதார, ராணுவ நடவடிக்கைகளை சபாங்தீவில் மேற்கொள்ள இந்தோனேஷியா அனுமதித்திருப்பது என்பது, மோடி அரசின் "ஆக்ட் ஈஸ்ட்" கொள்கைக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.
 
சீனாவின் அத்து மீறல்களை இந்தோனேஷியா கண்டிக்க தொடங்கியுள்ளது. இதனால் அந்தநாட்டின் வெளியுறவை கொள்கை புதுடெல்லியை நோக்கியதாக மாறத்தொடங்கியுள்ளது. இந்தோனேஷியா அதிபர் ஜோகோ விடோடோ கொண்டு வர உள்ள புதிய கடல்வழி கொள்கைக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது. இந்த கொள்கை இந்தியாவுக்கும் பயனுள்ளதாக அமைய போகிறது. மேலும், இந்தோனேஷியா அதிகப்படியான இஸ்லாமிய மக்கள் வசிக்கும் நாடு. அந்த நாட்டுடனான இந்தியாவின் நெருக்கமான உறவு என்பது, காஷ்மீர் பிரச்சினை மற்றும் ஜிகாதி தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகளின் நோக்கத்தை திரித்து பரப்பும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு சவுக்கடி கொடுப்பதை போல அமையும்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.