பிரதமர் நரேந்திர மோடியை கொலைசெய்ய சதித் திட்டம் திட்டமிட்டதாக கூறப்படும் மவோஸ்யிஸ்ட்கள் எப்படி சிக்கினார்கள் என்பது பற்றி ஸ்வாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது. 

200 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ்  படைக்கும் – மகாராஷ்டிர படைக்கும் இடையே  போர் நடைபெற்றது. இந்தப் போரில், பிரிட்டிஷ்படைக்கு ஆதரவாக மகர் இன தலித் மக்கள் இருந்தனர். அதில் பிரிட்டிஷ் படை வெற்றிபெற்றது ஆண்டுதோறும் புத்தாண்டுத் தினத்தில் மகர் இன மக்கள் இந்த வெற்றியை விழாவாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், 1818-ம் ஆண்டு நடந்த போரின் நினைவாக கோரேகாவ் பீமா பகுதியில் இந்த ஆண்டும் ஜனவரி ஒன்றாம் தேதி தலித் மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த மற்றொரு தரப்பினருக்கும் தலித் சமூகத்திற்கும் தகராறு ஏற்பட்டது. இது பயங்கர மோதலாக ஏற்பட்டது. இந்தமோதலின் போது ராகுல் என்ற 28 வயது வாலிபர் பலியானார். மேலும் பலர் காயம் அடைந்தார்கள். இதனால் அந்த பகுதியில் பெரும்கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் போலீஸ் வாகனம் உட்பட ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 

இந்த சம்பவங்களுக்கு முன்பு பீமா கொரிகோன் போரின் 200ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஷனிவார் வாடாபகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி எல்கர் பரிஷத் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. குஜராத் எம்.எல்.ஏவும், தலித் செயல்பாட்டாளருமான ஜிக்னேஷ் மேவானி மற்றும் சர்ச்சைக்குள்ளான ஜே.என்.யு மாணவர் உமர் காலித் உள்ளிட்டோர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக ஜிக்னேஷ் மற்றும் உமர் காலித் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதாவது, “எதிர்காலத்தில் பிமா கொரிகோன் போன்று போரில்ஈடுபட நம்மால் முடியும். அவர்கள் முதலில் தாக்கினால் பதிலடி கொடுக்கப்படும்” என்று பேசினார்கள் என்பதுதான் எஃப்.ஐ.ஆரில் பதிவுசெய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கான பேச்சு. 

 

ஆக்‌ஷாய் கௌதம் பிக்காட் என்பவர் டெக்கான் ஜிம்கானா காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் வழக்கு விஷ்ரம்பக் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. விஷ்ரம்பக் போலீசார் நடத்திய விசாரணையில் எல்கர் பரிஷத் நிகழ்ச்சியில் கபிர் காலா மஞ்ச் என்ற அமைப்பைச் சேர்ந்த சுதிர் தாவ்லே என்பவரும் கலந்து கொண்டார் என்பது தெரியவந்தது. மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், தாவ்லே மாவோயிஸ்ட் கருத்துக்களில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பது கண்டறியப்பட்டது. எல்கர் பரிஷத் நிகழ்ச்சியில் மிகவும் ஆக்ரோசமாக பேசியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. அதோடு, ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டு வரும் தலித் மக்கள் உயர் சாதியினருக்கு எதிராக கிளர்ச்சி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் கவிதைகள் எழுதியுள்ளதை போலீசார் கண்டறிந்தார்கள். அதனால், கலவர வழக்கில் தாவ்லேவும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். 

நக்சலைட் கொள்கையோடு இருந்த தாவ்லே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மாவோயிஸ்ட்) உறுப்பினர்கள் மற்றும் ஜே.என்.யு ஆராய்ச்சி மாணவர் ரோனா ஜேகப் வில்கன், வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங் ஆகியோருடம் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். பின்னர், ஜேகப் வில்சன் மற்றும் காட்லிங் இருவரும் நக்சல் தொடர்புடைய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததை போலீசார் உறுதி செய்தனர். காட்சிரோலி வன்முறையில் கைதான நக்சலைட்டுகளுடனும் தொடர்பு இருந்ததையும் போலீசார் உறுதி செய்தனர். இதனால், சதிவழக்கும் அவர்கள் மீது கூடுதலாக பதிவு செய்யப்பட்டது. 

இதனையடுத்து, வில்சன், காட்லிங் மற்றும் நக்சலைட் ஆதரவாளர் ஹர்ஷலி போட்டர் உள்ளிட்டோர் வீடுகளில் புனே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது, எலக்ட்ரானிக் சாதனங்கள், சிடிக்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மின்னணு சாதனங்கள் பின்னர் சோதனைக்கு அனுப்பபப்ட்டன. அப்படி சோதனை செய்யப்பட்ட ஒரு டிவைசில் இருந்துதான் மோடியை கொலை செய்வதற்கான திட்டம் தொடர்பான கடிதம் கண்டறியப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது. 

ரோனா ஜேக்கப் என்பவர் எழுதியதாக சொல்லப்படும் அந்த கடிதத்தில், பீகார், மேற்குவங்க மாநிலங்களில் தோல்வியடைந்த போதும் 15 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாரதிய ஜனதா அரசை பிரதமர் மோடி வெற்றிகரமாக நிறுவியுள்ளதாகவும், இந்த நிலை தொடர்ந்தால், அது தங்கள் அமைப்புக்கு பல்வேறு தளங்களிலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து பாசிசத்தை தோற்கடிப்பதே தங்கள் முக்கிய நோக்கம் என்று கூறப்பட்டுள்ள அந்த கடிதத்தில் மற்றொரு ராஜீவ் காந்தி போன்ற நிகழ்வை தாங்கள் சிந்திப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தின் அடிப்படையில், புனே போலீசார் ஜேகப் வில்சன், தாவ்லே, ஷோமா சென், மகேஷ் ராவ்ட் மற்றும் காட்லிங் ஆகிய 5 ரை கைதுசெய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது போலீஸ் விசாரணையில் உள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.  

கலவர வழக்கு ஒன்றிற்கான விசாரணையாக தொடங்கி பல்வேறு கட்ட விசாரணையில் இறுதியாக மோடி தொடர்பாக கடிதம் சிக்கியுள்ளது. இதனால் பிரதமர் மோடி பொதுமக்களுடன் கலந்து பழகும் நிகழ்ச்சிகளில் அவரை குறிவைக்க மாவோயிஸ்டுகள் திட்டமிட்டுள்ளதாக மகாராஷ்ட்ர காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். கடிதம் குறித்து மத்திய உளவுத்துறை விசாரணை நடத்திவருகிறது. இந்நிலையில் பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தில் மிகுந்தகவனம் செலுத்தப்படுவதாகவும், நாட்டின் பத்து மாவட்டங்களில் மட்டுமே மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாகவும் அவர்கள் தோல்வியடைந்து வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.