பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கீழ் பலர் வீடுவாங்க ஆர்வம் காட்டிவரும் நிலையில் இத்திட்டத்தில் அதிகமானோர் பயன்பெறும் வகையில் மத்திய அரசு இத்திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளது. மத்தியஅரசு தற்போது அறிவித்துள்ள மாற்றத்தின் வாயிலாக இனிவருடம் 18 லட்சம் ரூபாய் வரையில் வருமானம் பெறுபவர்கள் கூட வீட்டுக்கடனுக்கான வட்டியில் தள்ளுபடி பெறலாம்.

 

செவ்வாய்க்கிழமை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் அளிக்கப்படும் வட்டிசலுகையை அதிகரித்துள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கும் அளவை விடவும் 33 சதவீதம் அதிகமான அளவு கொண்ட வீடுகளுக்கும் இனிவட்டியில் சலுகை அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதன்மூலம் 2,100 சதுரடி வீட்டுக்குக் கூட ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வட்டி சலுகை பெற முடியும்.

 

2,100 சதுரடியில் இருக்கும் வீடுகளை 18 லட்சம் ரூபாய் வருமானம் கொண்டவர்கள் வாங்கமுடியாத நிலை டெல்லி, மும்பை பகுதியில் நிலவுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டே தற்போது மத்திய அரசு இந்தமுடிவிற்கு வந்துள்ளது. இத்திட்டத்தைக் கூடுதலாக 3ஆம், 4ஆம் தர நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

 

ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் 3 பிரிவின் கீழ் வீடுவாங்குபவர்களுக்கு வட்டி சலுகை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 2 பிரிவை ஓரே பிரிவாக சேர்த்துத் தற்போது நடைமுறைப் படுத்தியுள்ளது. இதில் 6 -12 லட்சம் வரையில் வரையில் வருமானம் உள்ளவர்கள் MIG-1 பிரிவிலும், 12-18 லட்சம் வரையில் வருமானம் உள்ளவர்கள் MIG-2 பிரிவின் கீழ் வீட்டுக் கடனுக்கான வட்டியில் சலுகை அளிக்கப்படுகிறது.

மொத்த வருமானம்: 6-12 லட்சம் ரூபாய் வட்டி மானியம் (வருடத்திற்கு): 4 சதவீதம் கடன் திட்டத்தின் காலம்: 20 வருடம்மானியம் பெற தகுதியான அளவு: 9 லட்சம் கட்டுமான இடம்: 160 சதுரமீட்டர் (1,722 sq ft)

மொத்த வருமானம்: 12-18 லட்சம் ரூபாய் வட்டி மானியம் (வருடத்திற்கு): 3 சதவீதம் கடன் திட்டத்தின் காலம்: 20 வருடம் மானியம்பெற தகுதியான அளவு: 12 லட்சம் கட்டுமான இடம்: 200 சதுரமீட்டர் (2,153 sq ft)

டவுன் மற்றும் கிராமங்களில் வீட்டு மனையின் அளவு அதிகமாகஇருக்கும் பட்சத்தில் இத்திட்டம் அவர்களுக்குப் பலன் அளிக்கவில்லை எனப்புகார் வந்த நிலையில் மத்திய அரசின் அனுமதியுடன் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளதாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார துறை அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார்.

ஜனவரி 2017இல் இத்திட்டம் அறிவிக்கப்பட்டபின்பு மத்திய அரசு கட்டுமான இடத்தின் அளவை இதுவரை 2 முறை மாற்றியுள்ளது குறிப்பிடத் தக்கது. இத்திட்டத்தின்கீழ் இதுவரை 1.68 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். மேலும் மானியமாகச் சுமார் 737 கோடி ரூபாய் மத்திய அரசு அளித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.