தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனுஅளித்த டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல் உள்பட 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் கடந்த 18.9.2017 அன்று உத்தர விட்டார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குதொடர்ந்தனர்.


இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல்நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடக் கூடாது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்தக்கூடாது என்றும் 20.9.2017 அன்று உத்தரவிட்டார்.
 

பின்னர், அந்தவழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் தலைமையிலான முதன்மை அமர்வுக் மாற்றப்பட்டது. இந்தவழக்கின் விசாரணை பல நாட்கள் நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர், கொறடா, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருக்காக சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல்கள் பலர் இந்த வழக்கில் ஆஜராகி வாதாடினர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.


தமிழக அரசியலில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் இன்று காலை முதலே நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் 18 எம்எல்ஏக்களும் நீதிமன்றத்திற்கு வந்தனர். அதேசமயம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று மதியம் 1.40 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அப்போது,  18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார். அதேசமயம் தகுதிநீக்கம் செல்லாது என நீதிபதி சுந்தர் தீர்ப்பு கூறினார். இவ்வாறு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் இனி மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கு செல்லும். மூன்றாவது நீதிபதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.