அணை பாதுகாப்பு சட்டம் மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று கூறியிருக்கிறார் தி மு க செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள். நாடு முழுவதும் உள்ள 5300 க்கும் மேலான பெரிய அணைகளில் பெரும்பாலான அணைகள் போதிய தொழில்நுட்ப உதவியின்றி பராமரிப்பு குறைகளை கொண்டதாக உள்ளது. இந்த மசோதாவானது, அணைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு, சீராய்வு போன்றவற்றை உறுதி செய்யும். இதன் மூலம் அணைகள் முறையாக, தொழில்நுட்ப ரீதியாக கண்காணிக்கப்பட்டு பருவநிலை மாற்றம், கட்டமைப்பு போன்றவற்றை சீரான முறையில் அதிக அளவிலான வல்லுநர்களை கொண்டு முறைப்படுத்தி மாநில அரசுகளுக்கு உதவ தேசிய அணைகள் பாதுகாப்பு குழுவை நியமிக்கும். 

 

அணைகள் பாதுகாப்பு மசோதாவானது 30, ஆகஸ்ட் 2010 அன்று தி மு க அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் தான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு குழப்பங்களுடன், குறைகளுடன் கூடிய இந்த மசோதாவை பாராளுமன்றம் நிலைக்குழுவிற்கு அனுப்பி வைத்தது. இந்த நிலைக்குழுவில், தி மு க, அ தி மு க மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் நிலைக்குழுவின் பரிந்துரைகளை ஏற்காத காங்கிரஸ் ஆட்சி இந்த மசோதாவை கிடப்பில் போட்டது. குறிப்பாக, 29/07/2011 அன்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள், இந்த மசோதாவில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு, அதன் பின்னர் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழக நலன் சார்ந்த இந்த கருத்தை அன்றைய காங்கிரஸ் மற்றும் தி மு க ஏற்காத காரணத்தினால் இந்த மசோதா நிறைவேறாமல் போனது. 

2010 மசோதாவில் 'விரும்பும்' மாநிலங்கள் மசோதாவை ஏற்றுக்கொள்ளலாம் என்று இருந்ததாக சொன்னாலும், அது ஏற்று கொள்ள முடியாத ஒன்று. ஏனெனெறால், முல்லைபெரியார் போன்ற நான்கு அணைகள் தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கேரள மாநிலத்தில் உள்ளன என்பதும், கேரளா ஏற்று கொண்டு தமிழகம் மறுத்தால் பிரச்சினைகள் ஏற்படும் என்பதை கூட அறியாதவராக உள்ளார் ஸ்டாலின் அவர்கள். அதே போல் 2010 மசோதாவில் அந்தந்த மாநிலங்களில் உள்ள அணைகளை சம்பந்தப்பட்ட மாநிலங்களே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், பராமரிக்கும் என்ற ஷரத்தை நீக்கி, தற்போதைய 2018 மசோதாவில் பராமரிக்கும், உரிமை பெற்ற மாநிலங்களின் உரிமை பறிபோகாமல் காத்திருக்கிறது என்பதை ஸ்டாலின் அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

 

தொடர்ந்து பாஜகவை விமர்சிப்பது ஒன்றையே கொள்கையாக கொண்டு அதிகாரத்திற்க்காக அலைந்து கொண்டிருக்கும் ஸ்டாலின் அவர்கள் உண்மை நிலை என்ன என்பதை அறிந்து கொண்டு விமர்சனங்களை முன் வைப்பது நலம்.

டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக பாஜக தலைவர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.