அடுத்த ஆண்டு, சர்வதேசளவில் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில், பிரிட்டனை விஞ்சி, ஐந்தாவது இடத்திற்கு இந்தியா முன்னேறும்,'' என, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

உலகநாடுகளின் கடந்தாண்டு பொருளாதார நிலவரம் குறித்த ஆய்வறிக்கையை, உலகவங்கி இரு தினங்களுக்கு முன் வெளியிட்டது. அதில், இந்தியா, 2.59 லட்சம் கோடி டாலருடன், பிரான்சை விஞ்சி, ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப் பட்டிருந்தது.பிரிட்டன், 2.62 லட்சம் கோடி டாலருடன், ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இதுகுறித்து, அருண் ஜெட்லி முகநுாலில் கூறியுள்ளதாவது:நாட்டின் பொருளாதாரவளர்ச்சி விகிதம், மதிப்பீட்டின்படி தொடர்ந்தால், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில், 2019ல், இந்தியா, பிரிட்டனை விஞ்சி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறும்.எனினும், அதிகரித்துவரும் கச்சா எண்ணெய் விலையும், சர்வதேச வர்த்தகப் போர் அபாயமும், நமக்கு சவால்விடுப்பவையாக இருக்கும்.

கடந்த நான்கு ஆண்டுகளாக, நாட்டின் பொருளாதாரம் வேகமாக முன்னேறிவருகிறது. அதனால், அடுத்த, 10 ஆண்டுகள், பொருளாதார விரிவாக்கத்தை நாம் காண முடியும்.

ஏற்கனவே, சுலபமாக தொழில்துவங்கும் வசதி கொண்ட நாடுகளில், இந்தியா, குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியுள்ளது. இதன் காரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பமான தேர்வாக, இந்தியா உள்ளது.இதை, கச்சா எண்ணெய் விலை யேற்றம், சர்வதேச வர்த்தகப்போர் போன்ற சவால்களுக்கு மத்தியில், தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அரசு, அனைத்து வளங்களை கிராமப் புறங்களும், அடித்தட்டு மக்களும் பெற முன்னுரிமை அளிக்கிறது.இத்துடன், திட்டநிதி ஒதுக்கீடுகளும் அதிகரிக்கும் போது, அடுத்த, 10 ஆண்டுகளில், கிராமப்புற மக்களின் மேம்பாடு, குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும் எனலாம்.

காங்., 1970 மற்றும் 1980களில், வலுவான கொள்கையின்றி, ஏழைகள் நலனுக்கு உண்மையாக செலவிடாமல், கவர்ச்சியான முழக்கங்களை எழுப்புவதில்தான், கவனம் செலுத்தியது.அவற்றுள் ஒன்றான, 1971ல் அறிவித்த, 'வறுமையை ஒழிப்போம்' என்ற கோஷம், நாட்டில் செல்வத்தையும், வளங்களையும் உருவாக்குவதற்கு பதிலாக, வறுமையை மீண்டும் அதிகரிக்கவே உதவியது.இந்ததவறான அணுகுமுறையால், ஏழை மக்களின் வாழ்வாதாரம் குறிப்பிடத்தக்க வகையில் உயராமல் போனது.

 

இதற்கு நேர்மாறாக, பிரதமர் மோடி, சொல்லிலும், செயலிலும் திடமான மனிதராக திகழ்கிறார்.அவர் அறிவித்த திட்டங்களும், நிர்ணயித்த கடுமையான இலக்குகளும், துவக்கத்தில் செயல் படுத்த முடியாத விஷயங்களாக தோன்றின. ஆனால், அவர், உண்மையான அக்கறையுடன் அவற்றை செயல் படுத்தி, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய் பெருகியுள்ளது : மத்திய அரசின், ஊரகமேம்பாட்டு திட்டங்களால், இன்று கிராமப்புற மக்களின் வருவாய் பெருகியுள்ளது. சமூகபாதுகாப்பு அதிகரித்துள்ளது. வாழ்க்கைத்தரம் மேம்பட்டுள்ளது. வேளாண் துறையில், அதிக வருவாய் கிடைக்கிறது. ஆரோக்கிய பராமரிப்பு வசதியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்றது முதல், பொருளாதார வளர்ச்சியின் பயன்கள், கிராமப்புற மக்களை சென்றடை வதற்காக பாடுபட்டு வருகிறது. அத்துடன், குறிப்பிடத்தக்க வகையில், புதியநடுத்தர வர்க்கத்தினரை உருவாக்கவும், வறுமையில் இருந்து மக்களை மீட்கவும் உறுதிபூண்டுள்ளது!

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.