மாநிலங்களவைத் துணைத் தலைவராக இருந்த பி.ஜே. குரியனின் பதவிக்காலம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி நிறைவடைந்தது. ஏறத்தாழ, ஒன்றரை மாதங்கள் அப்பதவி காலியாக இருந்தநிலையில், அதற்கான தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆளும் கூட்டணி சார்பில் ஹரிவன்ஷ் நாராயண்சிங் களமிறக்கப் பட்டார். எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக காங்கிரஸ் எம்.பி. ஹரிபிரசாத் முன்னிறுத்தப் பட்டார். மாநிலங்களவையை பொருத்தவரை எதிர்க் கட்சிகளின் பலம் அதிகம் இருப்பதால், இத்தேர்தலில் கடும்போட்டி நிலவியது.

அனைத்து எம்.பி.க்களிடமும் கட்சிபேதமின்றி இரு வேட்பாளர்களும் ஆதரவு திரட்டினர். பரபரப்பான இந்தச் சூழ்நிலையில், மாநிலங்களவை வியாழக்கிழமை கூடியது. அவையின் துணைத்தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஹரிவன்ஷுவை முன்மொழிவதாக எம்.பி. ராம் பிரசாத் சிங் தெரிவித்தார். அதனை மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே, எம்.பி.க்கள் அமித் ஷா, சஞ்சய் ராவத், சுக்தேவ் சிங் திண்ட்ஸா ஆகியோர் வழிமொழிந்தனர்.

இதையடுத்து அதன் மீதான வாக்கெடுப்பை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நடத்தினர். அப்போது சிலர் தவறுதலாக பொத்தான்களை அழுத்தியதாகத் தெரிகிறது. இதனால் இரண்டாவது முறையாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், ஹரிவன்ஷுக்கு ஆதரவாக 125 பேர் வாக்களித்தனர். எதிர்ப்பதாக 101 பேர் வாக்களித்தனர்.
இதையடுத்து, போட்டியில் ஆளும்கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அவருக்கு பிரதமர் மோடி, குடியரசு துணைத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க் கட்சி தலைவர்கள் ஹரிவன்ஷுவை அழைத்துச் சென்று மாநிலங்களவை துணைத் தலைவருக்கான இருக்கையில் அமரவைத்தனர்.

அவை அலுவல்களை நடுநிலை தவறாது புதிய துணைத்தலைவர் நடத்துவார் என்று நம்புவதாக அப்போது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான ஹரிவன்ஷ், ஹிந்தி நாளிதழான பிரபாத்கபர்' பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவராவார். அரசியலிலும், பத்திரிகைத் துறையிலும் நீண்ட,நெடிய அனுபவம் கொண்ட அவர், முதுகலை பொருளாதாரம், இதழியல் பட்டப்படிப்புகளை நிறைவுசெய்தவராவார்.

பின்னர், பிரதமர் நரேந்திர மோடி அவையில் பேசுகையில், “சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை துறையில் இருந்தவர் ஹரிவன்ஷ். ரிசர்வ்வங்கியில் பணிவாய்ப்பு கிடைத்தும் அதை மறுதலித்து செய்தியாளராகவே செயல்பட விருப்பப் பட்டவர் .

சமூக சீர்திருத்தவாதி ஜெய்பிரகாஷ் நாராயணின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஹரிவன்ஷ், முன்னாள் பிரதமர் சந்திரசேகரிடம் பணியாற்றிய அனுபவம்கொண்டவர்.

அரசியல் நெருக்கடி காரணமாக சந்திரசேகர் பிரதமர் பதவியிலிருந்து விலகநேர்ந்தது. அதுகுறித்த தகவல் முன்கூட்டியே தெரிந்திருந்தும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை அந்தச் செய்தியை தனது பத்திரிகையில் ஹரிவன்ஷ் வெளியிடவில்லை.

அவர் கடைப்பிடித்த பத்திரிகை தர்மம் அத்தகையது. மாநிலங்களவையை திறம்பட வழி நடத்தி ஆக்கப்பூர்வமான அலுவல்களுக்கு அவர் வழிவகுப்பார் என நம்புவோம்” என்றார். இதைத்தொடர்ந்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் ஹரிவன்ஷுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.