2019–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை நோக்கி எல்லா அரசியல்கட்சிகளும் செல்ல இருக்கிறது. ஆளும்கட்சியாக இருக்கும் பா.ஜ.க. மீண்டும் ஆட்சி கட்டிலை பிடிக்கப்போகிறதா?, காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி’ என்றபெயரில் பா.ஜ.க.விடமிருந்து ஆட்சியை தட்டிப்பறிக்கப்போகிறதா? என்றவகையில், பெரிய எதிர்பார்ப்புகள் நாட்டு மக்களிடையே இருந்து வருகிறது. ஏற்கனவே மக்களவையில் கடந்த ஜூலை 20–ந்தேதி பாஜக. அரசாங்கத்தின்மீது தெலுங்குதேசம் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது இரவில் ஓட்டெடுப்பு நடந்தது. மொத்தம் 451 ஓட்டுகளில், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக 325 ஓட்டுகளும், ஆதரவாக 126 ஓட்டுகளும்கிடைத்து, பா.ஜ.க.விற்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது.

 

2–வது பலப்பரீட்சையாக நேற்று மாநிலங்களவையில் துணைத்தலைவர் தேர்தல் நடந்தது. மாநிலங்கள வையில் மொத்தம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 245 ஆகும். ஒருகாலியிடம் இருக்கிறது. 73 உறுப்பினர்களைக் கொண்ட பா.ஜ.க.தான் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாகும். காங்கிரஸ் கட்சிக்கு 50 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பா.ஜ.க. தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த பத்திரிகையாளர் ஹரிவன்ஷ் நாராயண்சிங் போட்டியிட்டார். காங்கிரஸ்கூட்டணி சார்பில் முதலில் காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி வேட்பாளரை நிறுத்தும் எண்ணம் இருந்தது. ஆனால், அந்த கூட்டணி சார்பில் யார் வேட்பாளர் என்று முடிவுசெய்ய முடியாதநிலையில், வேட்பாளரை முடிவு செய்யும் பொறுப்பு காங்கிரஸ் கட்சியிடமே விடப்பட்டது. கடைசி நேரத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.கே.ஹரிபிரசாத் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. பா.ஜ.க. கூட்டணி யிலிருந்த சிவசேனா, அகாலிதளம், காஷ்மீரில் உள்ள மக்கள் தேசிய கட்சி போன்ற கட்சிகள் என்னநிலை எடு க்கும்? என்று தெரியாத நிலையில், காங்கிரஸ் கூட்டணிக்குத்தான் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருந்தது. 

ஆனால் பிரதமர் நரேந்திரமோடி, பாஜக. தலைவர் அமித்ஷா எடுத்த அமைதியான முயற்சிகளைத் தொடர்ந்து நிலைமையே மாறி, வேட்புமனு தாக்கலிலேயே முடிவு தெரிந்துவிட்டது. தேசியஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷுக்கு ஆதரவாக பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத், அகாலி தள தலைவர் எஸ்.எஸ்.டிண்ட்சா, ஐக்கிய ஜனதாதளம் சார்பில் ஆர்.சி.பி.சிங் ஆகியோர் சார்பில் 4 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று துணைத்தலைவர் தேர்தல் நடந்தபோது, அவையில் 232 உறுப்பி னர்கள்தான் இருந்தனர். வெற்றி பெறுவதற்கு 116 உறுப்பினர்களின் ஆதரவுவேண்டும்.

ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷுக்கு 125 ஓட்டுகளும், காங்கிரஸ் கட்சியின் பி.கே.ஹரிபிர சாத்துக்கு 105 ஓட்டுகளும் கிடைத்தன. 2 உறுப்பினர்கள் ஓட்டெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. ஹரிவன்ஷ் வெற்றிக்கு முழுகாரணம் அ.தி.மு.க.வின் 13 உறுப்பினர்களும் ஆதரவாக ஓட்டுபோட்டதுதான். 40 ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதுதான் முதல்முறையாக காங்கிரஸ் அல்லாத ஒருகட்சியை சேர்ந்தவர் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க.வுக்கு இது நிச்சயமாக பெரிய வெற்றியாகும். 2 பலப் பரீட்சைகளிலும் பா.ஜ.க. வெற்றிபெற்ற நிலையில், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக யார்–யார் இருக்கிறார்கள்?, எதிர்ப்பாக யார்–யார் இருக்கிறார்கள்?, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக யார்–யார் இருக்கிறார்கள்?, இது 2019 தேர்தலில் எதிரொலிக்குமா? என்ற பூர்வாங்க கணக்கீட்டை மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல்காட்டிவிட்டது.

நன்றி தினத்தந்தி

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.