சட்டத்துடன் மதம் முரண்படலாம். ஆனால், நம்பிக்கைகள் முரண்பட வேண்டிய அவசியம் இல்லை. சட்டம் மக்களின் தொன்றுதொட்ட நம்பிக்கைகளை உள்ளடக்கி ஏற்றுக்கொள்வதில் தவறொன்றும் இல்லை. 


இந்தியா போன்ற மிகப் பழைமையான நாகரிகத்தில் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்படும் பழக்கவழக்கங்கள் மக்களால் மதித்து ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பகுத்தறிவாளர்களின் நம்பிக்கை பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைக்கு மாறுபட்டிருக்கும்போது, சட்டமும் நீதியும் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கையை மதிப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும்.


சபரிமலை ஆலயத்தின் விதிமுறைகளும், தர்ம சாஸ்தா என்று அறியப்படும் சுவாமி ஐயப்பன் தொடர்பான வழிபாட்டு முறைகளும் எப்படியிருக்க வேண்டுமென்பதில் பக்தர்களின் கருத்துதான் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். அதை ஏற்றுக்கொள்ள மறுத்து உச்ச நீதிமன்றம் அதற்கு எதிரான தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை. 


புனிதமான 18 படிகளில் எந்தவிதத் தடையுமில்லாமல் பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பக்தர்கள் ஏற்கெனவே நிராகரித்திருக்கிறார்கள். பெண்ணியவாதிகளும், மகளிர் அமைப்புகளும் குரலெழுப்புவது போலல்லாமல், பெண் பக்தைகள் இந்தத் தீர்ப்பின் காரணமாக மிகப் பெரிய அளவில் சபரிமலை கோயிலுக்கு வழிபட வந்துவிடப் போவதில்லை. 


சபரிமலையில் இருக்கும் தர்ம சாஸ்தாவின் பிரம்மச்சரியத்தைக் கலைக்க விரும்பாமலும், தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கையை தவிர்த்துவிடாமலும் இருக்க, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எதிர்பார்ப்புக்கு மாறாகப் பெண்கள் சபரிமலை பயணத்தைத் தவிர்ப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம். அனுமதிக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்பதற்காக பெண் பக்தைகள் ஆயிரக்கணக்கில் சபரிமலைக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டுவிடப்போவதில்லை.


இந்தப் பிரச்னையின் அடிப்படை நம்பிக்கை சார்ந்தது. பெண்களின் மாதவிடாயை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்கிற தவறான வாதம் முன்வைக்கப்படுகிறது. அது அடிப்படையே இல்லாத கருத்து. அது நிராகரிக்கப்பட வேண்டும்.
சபரிமலையில் வீற்றிருக்கும் சுவாமி ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பது பக்தர்களின் நம்பிக்கை. சுவாமி ஐயப்பன் சபரிமலையில் பிரம்மச்சரியத்துடன் கூடிய கடுமையான தவத்தில் இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். அப்படித் தவக் கோலத்தில் இருக்கும் சபரிமலை ஐயப்பனின் சந்நிதியில் பெண்கள் அனுமதிக்கப்படக் கூடாது என்பது மாதவிடாய் காரணமாக அல்ல, தர்ம சாஸ்தாவின் பிரம்மச்சரிய தவநிலை காரணமாக என்பதை உணர வேண்டும்.


முருகக் கடவுளுக்கு அறுபடை வீடுகள் இருப்பதுபோல, ஐயப்பன் என்று அழைக்கப்படும் தர்ம சாஸ்தா என்கிற தெய்வத்துக்கு நான்கு வீடுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. குளத்தூர்புழை என்கிற இடத்தில் பாலகனாகவும், சபரிமலையில் கடும் பிரம்மச்சரிய நிஷ்டையில் தவக் கோலத்தில் ஐயப்பனாகவும், ஆரியங்காவில் பூர்ணா } புஷ்கலாம்பாளுடன் உறையும் ஹரிஹர புத்திர சுவாமியாக கிருகஸ்தனாகவும், அச்சன்கோவிலில் வயோதிகராகவும் காட்சி தருகிறார் சுவாமி ஐயப்பன்.


ஐயப்பனுக்கு சபரிமலை அல்லாமல் ஆயிரக்கணக்கில் ஆலயங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அவற்றிலெல்லாம் அவர் பிரம்மச்சாரியாகக் காட்சி தருவதில்லை. அதனால் அந்த ஆலயங்களில் பெண்கள் நுழைவதற்கோ வழிபடுவதற்கோ எந்தவிதத் தடையுமில்லை.
சபரிமலையைப் பொருத்தவரை தடை பெண்களுக்கு அல்ல. சுவாமி ஐயப்பனுக்குத்தான் என்பதுதான் உண்மை. அதுவும்கூட தனது தவம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காக ஐயப்பன் தனக்குத்தானே விதித்துக்கொண்ட கட்டுப்பாடுதான்.


பிறகு ஏன் பத்து வயதுக்குக் கீழே உள்ள பெண் குழந்தைகளும் ஐம்பது வயதுக்கு மேல் உள்ள பெண்களும் சபரிமலையின் பதினெட்டு படிகளிலும் சன்னிதானத்திலும் அனுமதிக்கப்படலாம் என்கிற வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது என்று கேட்கலாம். பத்து வயதுக்குள்பட்டவர்கள் குழந்தைகள், ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர்கள் தாய் ஸ்தானத்தில் தெரிகிறார்கள். அதனால்தான் நிபந்தனையும் கட்டுப்பாடும். தவிர, இதற்கும் பெண்களின் மாதவிடாய் காலத்துக்கும் தொடர்பில்லை. மேலும், கரடுமுரடான காட்டுப்பாதையில் மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் மலையேறுவது அவர்களது உடல்நலத்துக்குக் கேடு என்பதற்காகக்கூட அப்படியொரு தடை பக்தர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கக் கூடும்.


நீதிபதி சந்திரசூட் உள்ளிட்ட அந்த உச்சநீதிமன்ற அமர்வின் பெரும்பான்மை நீதிபதிகள் மாதவிடாய் காரணமாக பெண்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவது ஒருவகையிலான தீண்டாமை என்று குறிப்பிட்டிருப்பதற்கு, அவர்களுக்கு இந்தப் பிரச்னை குறித்த சரியான புரிதல் இல்லாமல் இருப்பதுதான் காரணம். மேலும், இந்தத் தடை பெண்களுக்கான பொதுவான தடை அல்ல என்பதையும், இது சபரிமலைக்கு மட்டுமே உரித்தான தடை என்பதையும் நீதிமன்றம்  உணரத் தவறிவிட்டது. இந்தத் தடைக்கும் மாதவிடாய் பிரச்னைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லையென்பதை நீதிமன்றம் உணராமல் போனது துரதிருஷ்டம்.


சபரிமலையின் வழிபாட்டு முறை என்பது நம்பிக்கை சார்ந்தது. தங்களை முற்போக்குவாதிகள், பகுத்தறிவாளர்கள், நாகரிகவாதிகள் என்று கூறிக்கொள்பவர்கள் பக்தர்களின் நம்பிக்கையை நிராகரிக்கவோ, ஏற்றுக்கொள்ள மறுக்கவோ செய்யலாம். அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால், இவர்களைப் போன்ற பெண்ணுரிமைப் போராளிகளின் உணர்வுகளுக்கு ஏற்றாற்போல பக்தர்களின் நம்பிக்கைக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளிக்க முற்படும்போது அது பல்வேறு அரசியல் சாசன சிக்கல்களுக்கு வழிகோலுவதாகவும், வாயிலைத் திறந்து வைப்பதாகவும் அமையும்.
"மதம் தொடர்பான நம்பிக்கைகளை நீதித் துறை ஆய்வுக்கு உள்படுத்தத் தொடங்கினால், அது அவரவர் நம்பிக்கைக்கு ஏற்றாற்போல வாழும் உரிமையையும், அதுதொடர்பான சடங்குகளைப் பின்பற்றும் பழக்கவழக்கங்களையும் அழித்துவிடும்' என்கிற நீதிபதி  இந்து மல்ஹோத்ராவின் பதிவை மறுப்பதற்கில்லை. 


ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நம்பிக்கையின் முக்கியத்துவத்தை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளாதது மிகவும் வருத்தத்துக்கு உரியது. சபரிமலை ஆலயமும், சுவாமி ஐயப்பன் என்கிற வழிபாட்டு தெய்வமும் எந்த வழிமுறையின் அடிப்படையில் இயங்குகிறதோ அந்த அடிப்படையையே உடைத்தெறிய முற்பட்டிருக்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.
இந்தப் பிரச்னை ஒழுக்கம் குறித்தானதோ, சம உரிமை குறித்தானதோ, மகளிர் மேம்பாடு குறித்தானதோ அல்ல. சமுதாயத்துக்கும், தனிப்பட்ட எந்த நபருக்கும் பாதகம் எதுவும் இல்லாமல் நடைபெற்று வந்த ஒரு பழக்கவழக்கத்தைக் குறித்துத் தேவையில்லாமல் உச்சநீதிமன்றம் விபரீதமானதொரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்தப் பிரச்னையை உடன்கட்டை ஏறுதல், கைம்பெண்கள் கைவிடப்படுதல் உள்ளிட்ட நடைமுறைக்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாத சமூகக் குற்றங்களுடன் தேவையில்லாமல் இணைத்து குழப்பக்கூடாது. 


சபரிமலை என்பது ஓர் இறைத் தத்துவம். அதை ஏற்றுக் கொள்வதோ மறுப்பதோ, பின்பற்றுவதோ பின்பற்றாமல் இருப்பதோ அவரவர் உரிமை. அப்படியிருக்கும்போது, நம்பிக்கையின் அடிப்படையிலான அந்த விதிமுறையில் தேவையில்லாமல் உச்சநீதிமன்றம் ஏன் தலையிட்டுக் குழப்ப வேண்டும்?


சபரிமலை ஆலயம் தொடர்பான வழக்கில் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு மிகப்பெரிய ஆபத்தை உள்ளடக்கியிருக்கிறது. தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கைளுக்கு எதிராக இனிமேல், புற்றீசல்போலப் பல வழக்குகள் தேவையில்லாமல் தொடரப்பட்டு, நீதித் துறையின் பொன்னான நேரம் வீணடிக்கப்படக் கூடும். பெரும்பான்மை தீர்ப்புக்கு எதிரான மாற்றுக் கருத்தைப் பதிவு செய்திருக்கும் நீதிபதி இந்து மல்ஹோத்ரா, ஒரு முக்கியமான எச்சரிக்கையைக் கூறியிருக்கிறார். தவிர்க்கப்பட வேண்டிய பிரச்னைகளில் எல்லாம் நீதிமன்றம் தலையிடத் தொடங்கினால், அதன் விளைவாகக் கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்களும், பகுத்தறிவாளர்கள், முற்போக்குவாதிகள் என்று தங்களை வர்ணித்துக் கொள்பவர்களும் எல்லா மதங்களிலும் இருக்கும் நம்பிக்கைகளை எதிர்த்துக் கேள்வி கேட்கவும், வழக்குத் தொடரவும் முற்படுவார்கள் என்கிற நீதிபதி இந்து மல்ஹோத்ராவின் சிந்தனைத் தெளிவும் தொலைநோக்குப் பார்வையும் கவனத்தில் கொள்ளத்தக்கது. நீதித் துறை அப்படியொரு ஆழிப் பேரலையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறதா? தேசம் அதற்குத் தயாரா?


தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் சிதைக்கப்படுவது சமுதாயக் கட்டமைப்பையே பாதித்துவிடும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. உச்சநீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு விசாரணைக்கு வரும்போது, இந்தத் தீர்ப்பின் பின்விளைவுகள் குறித்த மறு சிந்தனை மேற்கொள்ளப்பட வேண்டும். 


இந்தியாவை மேலை நாட்டு நாகரிகங்களுடனும், அவர்களது பழக்க வழக்கங்கள், கண்ணோட்டம் ஆகியவற்றுடனும் தொடர்புப்படுத்திக் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை. இந்தியப் பண்பாடும், இந்தியச் சமூகமும் வித்தியாசமானது, தனித்துவமானது. அதை நாம் உணராமல் போனால் அதன் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும்.

Tags:

Leave a Reply