நாம் ஏன் மேற்கத்திய முன்மாதிரிகளைப் பின்பற்ற வேண்டும்? அவை நீடித்து நிலைக்கக் கூடியவை அல்ல. அவற்றால் மேலை நாடுகளின் பொருளாதாரம் கடும் பாதிப்பை அடைந்துள்ளது என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி குறிப்பிட்டார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழ் புது தில்லியில் சனிக்கிழமை நடத்திய தலைவர்களின் உச்சி மாநாட்டில் உரையாற்றிய அத்வானி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அரசின் முடிவை நாங்கள் எதிர்க்கிறோம். நாம் ஏன் மேற்கத்திய முன்மாதிரிகளைப் பின்பற்ற வேண்டும்? அவர்களுக்கு வால்மார்ட் சிறப்பானதாக இருக்கலாம். ஆனால், நமக்கு வால் மார்ட் சேவை புரியாது. நியூயார்க் நகரில் வால் மார்டை அனுமதித்தால் அந்த நகர மேயர் பதவியிழக்க நேரிடும் என நான் கேள்விப்பட்டேன்.

மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவினால் கோடிக்கணக்கான சில்லறை வர்த்தகர்கள் வேலையிழக்க நேரிடும். இது அரசுக்கும் நன்றாகத் தெரியும். தெரிந்தும், பணவீக்கம், விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற சகல பிரச்னைகளுக்கும் “சர்வரோக நிவாரணி’ போல அன்னிய நேரடி முதலீட்டை சித்திரிக்க மத்திய அரசு முனைகிறது. அந்நிய நேரடி முதலீட்டின் மூலம் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புக் கிட்டும் என்று கூறி மக்களை முட்டாள்களாக்கி வருகிறது.

3 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுடன் 123 ஒப்பந்தத்தில் மன்மோகன் சிங் அரசு கையெழுத்திட்டது. அப்போது, மின்சாரப் பிரச்னையை இந்த ஒப்பந்தத்தின் மூலம் முழுமையாகத் தீர்த்துவிடலாம் என்பது போலக் கூறினார்கள். நான் பிரதமரைப் பார்த்து கேட்க விரும்புகிறேன், கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை அணு மின் நிலையங்கள் செயல்படத் துவங்கியுள்ளன? அவற்றிலிருந்து அடுத்த 10 ஆண்டுகளுக்குள் எவ்வளவு மின்சாரம் நமக்குக் கிடைக்கும்?

திடீரென சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு குறித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய விரும்பாததால்தான் இந்த விவகாரத்தை மத்திய அரசு கிளப்பி உள்ளதாக அண்ணா ஹசாரே குழுவினர் கூறுகின்றனர்.

பிரதமர் கம்யூனிஸ்ட் முன்மாதிரியுடன் செயல்படுவதால் அவரால் செயல்பட முடியவில்லை. ஏனெனில், கம்யூனிஸ நாடுகளில்தான் நாட்டின் பிரதமரைக் காட்டிலும் கட்சித் தலைவர் அதிமுக்கியமானவராக இருப்பார். மன்மோகன் சிங் இந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றுதால் அவரால் செயல்படமுடியவில்லை.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை பாரதிய ஜனதா எப்போதுமே எதிர்த்து வந்துள்ளது. அப்படியிருக்க 2004-ம் ஆண்டு தேசிய ஜனநாயக முன்னணி தேர்தல் அறிக்கையில், 26 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவு எவ்வாறு இடம்பெற்றது என்பதை என்னால் நினைவுகூர முடியவில்லை.

ஒருவேளை கூட்டணிக் கட்சிகளின் நிர்ப்பந்தம் காரணமாயிருக்கலாம். ஆனால், 2009-ம் ஆண்டு தேர்தலின் போது, அந்நிய நேரடி முதலீட்டை எதிர்ப்பது என்றே முடிவெடுத்தோம்.

நாடாளுமன்றம் முடங்கிவிடுகிறதே என்று எதிர்க்கட்சிகள் கவலைப்படுகிறன்றன. அதேநேரத்தில், அந்நிய நேரடி முதலீடு குறித்த முடிவினை இந்த நேரத்தில் அரசு ஏன் எடுத்தது என்பது பற்றி வியப்பும் அடைகின்றன. டிசம்பர் 1-ம் தேதி நடந்த பாரத் பந்த் முழு வெற்றி அடைந்துள்ளது.

இந்த அரசு முழுமையாக 5 ஆண்டுகள் நீடிக்குமா? அல்லது 2014-ம் ஆண்டுக்குள்ளேயே கவிழ்ந்து விடுமா என்பது குறித்து நாம் யூகிக்க முடியாது. ஏனெனில், விபத்துகள் குறித்து எவரும் முன்பே கூற முடியாது.

2010, 2011 ஆண்டுகளை ஊழல் ஆண்டுகள் என்று கூறலாம். காமன்வெல்த் விளையாட்டு ஊழலில் தொடங்கி 2 ஜி அலைக்கற்றை ஊழல் வரை மக்களிடம் விழிப்புணர்வு கொண்டுவர நான் யாத்திரை சென்றேன்.

மக்களின் எழுச்சியைப் பார்க்கும்போது மாற்றம் வரும் என்று தோன்றுகிறது. 2012-ம் ஆண்டு ‘செய்த காரியங்களுக்கு பொறுப்பேற்கும் ஆண்டாக’ இருக்கட்டும்.

2008-ம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த 19 எம்.பி.க்களுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் தரப்பட்டது என்றார் அத்வானி.

{qtube vid:=kI_cf2aeNr8}

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.