மதுரைக்குக் கிழக்கே இருக்கிறது திருப்பூவனம். (திருப்புவனம்) இந்த ஊரில் "பொன்னனையாள்' என்றொரு பெயருடைய ஒரு பெண் இருந்தாள். இவள் பிறந்தது தாஸி குலத்தில். ஆனால் திருப்பூவன நாதராகிய சிவபெருமானுக்கு மட்டுமே அந்தப் பெண் அடிமைப்பட்டுக் கிடந்தாள். சிவனடியார்களை நடமாடும் தெய்வங்களாக மதித்தாள்.

ஆலயத்தில் இறைவன் முன்பு நடனமாடுவாள். வீட்டில் அடியார்களை அழைத்துச் சோறிடுவாள். மற்ற நேரங்களில் இறைவனைத் தியானிப்பதும், அவன் திருப்பெயரை ஓதுவதுமாக வாழ்க்கையைக் கழித்தாள்.

இந்தப் பொன்னனையாள்''க்கு ஒரு வித்தியாசமான ஆசை; தன் உள்ளம் கவர் கள்வனாகிய சிவபெருமானின் உருவச் சிலையை தங்கத்தால் வார்க்க வேண்டும என கனவு கண்டாள், பொன்னனையாள்ளுக்கு வசதி வாயிப்பில் ஒன்றும் குறை இல்லை இயல்பிலேயே நல்ல வசதி படைத்தவள்தான். இருப்பினும் அவளுடைய செல்வமெல்லாம் ஆண்டவனின் அடியார்களுக்கு அன்னதானம் செய்வதிலேயே போய்க் கொண்டிருந்தது.

"தன்னுடைய பொற்சிலை ஆசையா, அடியார்களுக்கு அமுது படைத்தலா?' என்ற கேள்வி எழுந்தபோதெல்லாம், "போற்றுதற்குரிய' அந்தப் பொன்னாசையைத் துறந்து, சோறிடுவதிலேயே அவள் சுகம் கண்டாள்.

எல்லாம் வல்ல சித்தராகிய மதுரை சோமசுந்தரக் கடவுளுக்கு தன் அடியாளின் ஆசை புரியாமலா இருக்கும்? ஒரு நாள் சிவபெருமான் பூவனத்தில் சிவயோகி வடிவில் தோன்றினார். பொன்னனையாள் வீட்டின் முன்பு வந்தார்.

அங்கே அடியார்கள் உண்டு கொண்டிருந்த காட்சியைக் கண்டு களித்தார். அவரைக் கண்ட பொன்னனையாளின் வேலைக்காரிகள், ""ஐயா! சூடான சோற்றை உண்டு எங்கள் தலைவியின் மனதை குளிர்விக்க வாருங்கள்'' என்று வேண்டினார்கள்.

சித்தர் சிரித்தார். ""சாப்பிடுவது அப்புறம்; உங்கள் தலைவியைக் கூப்பிடுங்கள். அவளைப் பார்ப்பது முக்கியம்'' என்றார். சேடிகளும் அப்படியே செய்தனர்.

வாசலில் இருந்த வள்ளலைப் பார்க்க பொன்னனையாள் என்ற பூங்கொம்பு வந்தாள். சித்தரின் திருவடியில் மலர் போல் விழுந்தாள். அவளை உற்றுப் பார்த்த சித்தர், ""பெண்ணே! உன் முகத்தைப் பார்த்தால் ஏதோ ஒரு கவலை உன் கண்களில் கலந்திருப்பது தெரிகிறதே? என்னை உன் தகப்பன் போல் நினைத்து உன் கவலையைப் பகிர்ந்துகொள்ளம்மா'' என்று கனிவு ததும்பக் கேட்டார்.

பொன்னனையாள், ""ஐயா! நான் கவலையில் உழல்வது உண்மைதான். என் மனதுக்குள் பொத்தி வைத்திருக்கும் ஒரு ஆசை உண்டு. சிவபெருமானை, "பொன்னிற மேனியன்' என்று புராணங்கள் புகழ்கின்றன. எனக்கு அந்தக் கடவுளின் சிலையை பொன்னால் உருவாக்கி பூஜிக்க வேண்டுமென்ற ஆசை நெடுநாட்களாக நீடிக்கின்றது. இதை நான் யாருக்கும் வெளிப்படுத்தியதில்லை. ஏனோ உங்களைக் கண்டால் மனம் உருகுகிறது. என் உயிர்த் துணைவனாகிய சிவபெருமானே உங்கள் வடிவில் வந்திருப்பதாகத் தோன்றுகிறது. அதனால் சொல்லிவிட்டேன்'' என்று சொல்லிக் கை குவித்தாள். அவள் விழிகளில் "சிறிய வைகை' போலக் கண்ணீர் வெள்ளம் பொங்கியது.

உடனே அந்தச் சிவயோகி, ""உனக்குத்தான் ஆண்டவன் பொருளையும் அருளையும் அள்ளிக் கொடுத்திருக்கிறானே? ஒரு பொற்சிலையை உருவாக்கிக் கொள்வது உனக்கென்ன அத்தனைக் கடினமான விஷயமா?'' என்றார் குறும் சிரிப்போடு!

பொன்னனையாள் கண்களைத் துடைத்தபடி, ""பெரியவரே! ஏழைப் பங்காளனாகிய இறைவன், எனக்குப் போதுமென்ற அளவு பொருள் கொடுத்திருக்கிறான். ஆனால் அதை வைத்துக் கொண்டு, "போதும், போதும்' என அடியார்கள் சொல்லும்வரை சாதம் இடுவதை நான் தவமாகச் செய்கின்றேன். என் உயிரே போனாலும் அந்தத் தொண்டை நிறுத்த நான் தயாரில்லை'' எனக் கூறி கை குவித்தாள்.

அடியார்களின் மேல் பொன்னனையாளுக்கு இருந்த அன்பைக் கண்டு ஆலவாய்க் கடவுள் அகம் மகிழ்ந்தார். ""இளையவளே! சிவன் சிலையை பொன்னால் உருவாக்க வேண்டும் என்கிற உன் ஆசையை நான் நிறைவேற்றி வைக்க முடிவு செய்துவிட்டேன். எனக்கு செம்பை பொன்னாக்கும் ரசவாதம் தெரியும். உன் வீட்டில் உள்ள பித்தளை, ஈயம், செம்புப் பாத்திரங்களை உடனே இங்கு கொண்டு வா!'' என்று ஆணையிட்டார். உடனே நிறைவேற்றினாள் பொன்னனையாள்.

தன் முன்பு குவிக்கப்பட்ட பாத்திரங்களின் மேல் திருநீற்றை தெளித்தார் சிவயோகி. ""மாதரசி! நான் மந்திரத் திருநீற்றை இந்தப் பாத்திரங்களின் மேல் தெளித்திருக்கிறேன். இன்றிரவு இவற்றை உருக்கினால் அவை பொன்னாகும். நீ ஏற்கனவே சிவனுடைய சிலைக்கான கருவுருவை செய்து வைத்திருக்கிறாய் அல்லவா? அந்தக் கருவுருவில் பொற்குழம்பை ஊற்று. உன் ஆசை அக்கணமே நிறைவேறும்'' எனக் கூறி ஆசி வழங்கினார்.

பொன்னனையாளுக்கு தன் பாதங்களின் கீழ் பூமி நழுவுவது போல் ஒரு உணர்வு! அவளால் தன் விழிகளையும் செவிகளையும் விளங்கிக் கொள்ள முடியவில்லை. நிறைவேறவேப் போவதில்லை என்று அவள் முடிவு கட்டிய விஷயம்,கைகூடும் என்று அவள் கனவிலும் கருதியதில்லை. ""ஐயனே! இப்படி ஒரு வரம் அளித்தீர்களே! இதற்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்?'' என்று அகம் குழையக் கும்பிட்டாள். ""நீங்களும் இங்கேயே இருந்து, பொற்சிலை உருவாகும் அந்தப் புனிதக்காட்சியைப் பார்த்து ஆசீர்வதிக்க வேண்டும்'' என்று பிரார்த்தனை செய்தாள்.

சித்தர் சிரித்தார். ""அம்மணி! நான் மதுரைச் சித்தன். அங்கேயே திரும்புகிறேன்'' எனச் சொல்லி மறைந்தார். அந்தக் கணமே வந்தவர் யார் என்று பொன்னனையாளுக்குப் புரிந்துவிட்டது. கை குவித்துக் கண்களை மூடி, கதறத் தொடங்கினாள். பிறகு மனம் தேறி நிலாக்காலத்தை எதிர் நோக்கியிருந்தாள். அவள் நெஞ்சிலே நீலகண்டனின் பேச்சும், சிரிப்பும் ஆனந்த தாண்டவமிட்டன.

இரவு எழுந்தது. சித்தர் சொன்னபடியே செய்தாள் பொன்னனையாள். அவள் கண் முன்பே ஈயமும், பித்தளையும், செம்பும் -பொன்னாக மாறின. அந்தப் பொற்குழம்பை கருவுருவில் வார்த்தெடுத்தாள். ஆஹா! ஒரு சில விநாடிகளில் அவள் முன்பு சிவபெருமானின் பொற்சிலை, நிலவுக்குப் போட்டியாக ஒளிவிட்டது. அதன் அழகு அவளைத் திக்குமுக்காட வைத்தது.

மானிடக் காதலுக்கு மனதில் இடம் கொடுக்காத அந்த மாதரசி, மகாதேவக் காதலில் உருகிப் போனாள். சிலையின் கன்னத்தைக் கிள்ளி, ""அச்சோ! அழகிய பிரானோ!'' என்று கூவி மெய் சிலிர்த்தாள். அந்த அத்தனின் சிலையைக் கட்டித் தழுவி முத்தமிட்டாள்; பித்தானாள். தன் ஆயுள் முழுவதையும் அந்த அரனை வணங்கியே தீர்த்து, சிலலோகம் சேர்ந்தாள்.

இந்த வரலாறு நடந்தது சென்ற யுகத்தில். கலியுகம் பிறந்ததும் அந்தப் பொற்சிலை, ஐம்பொன் விக்ரகமாக மாறவேண்டும் என்பது ஆண்டவன் கட்டளை. அதன்படி இப்போதும் மதுரை மாநகரின் கிழக்குப் புறத்திலே உள்ள திருப்பூவன ஆலயத்தில் பொன்னனையாள் வடித்தெடுத்த சிலை காட்சியளிக்கின்றது.

இன்றும் அதன் கன்னத்திலே பொன்னனையாள் ஆசையோடு கிள்ளியதால் ஏற்பட்ட நகக்குறி இருக்கின்றது. அது நகம் மட்டுமல்ல, ஆண்டவனையே நேரில் வரவழைத்துவிட்ட பொன்னனையாளின் அகம்!

சிறப்புக்கள் பிதுர்மோக்ஷபுரம், புஷ்பவனகாசி, பாஸ்கரபுரம்,பிரமபுரம், லட்சுமிபுரம், ரசவாதபுரம் என்பன வேறு பெயர்கள். அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இத்தலம் மதுரை – மானாமதுரை இருப்பு பாதையில் உள்ளது. பேருந்துகளும் நிறைய உள்ளன. இவ்வூர் நான்கு பகுதிகளில் 'கோட்டை' பகுதியில் கோயில் உள்ளது.

நன்றி சிவநாதன்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.