"குரங்கு புத்தி" என்றே சொல்வது வழக்கம். எது ஒன்றிலும் நிலையாக ஒருநிமிடம் கூட நிற்காமல் சதா ஒன்று மாற்றியன்றாகப் பாய்ந்துகொண்டே இருப்பதற்குப் பேர் போனது குரங்கு. துளிக்கூட கட்டுப்பாடே இல்லாமலிருப்பதற்கு காரணம் அதுதான். இதனால்தான் மனிதர்களாகிய நம் எதிலும் கட்டுப்பட்டு நிற்காமல் சாஞ்சல்யமயமாக இருக்கிறபோது "குரங்கு புத்தி" என்கிறோம்.

ஹ்ருதய – கபிம் அத்யந்த சபலம்

என்று ஆசார்யாளே சொல்கிறார். "பரமேச்வரா!ரொம்ப ரொம்பச் சபலமான இந்த என்னுடைய மனக்குரங்கை பக்திக்கயிற்றாலே கட்டி உன் கையிலே பிடித்துக் கொண்டு குரங்காட்டி வித்தை பண்ணிப் பிழைத்துப் போ!வெறுமனே கபாலத்தை வைத்துக்கொண்டு பிச்சை கேட்பதைவிட இப்படி ஒரு வித்தை, கித்தை செய்து காட்டினாயானால், உனக்கும் நல்ல வரும்படி வருகிற பிழைப்புக் கிடைக்கும், நானும் பிழைத்துப்போவேன்" என்று பரமச்வரனிடம் அவர் வேடிக்கையாக ப்ரார்த்திக்கும்போது, "ஹ்ருதய கபி' அதாவது "மனக்குரங்கு", என்ற வார்த்தையை போட்டிருக்கிறார்.

வெள்ளைக்காரர்களும் "monkey mind" என்கிறார்கள். கட்டுப்பாடேயில்லாமல் ஸதா ஸர்வகாலமும் சரீரத்தாலோ, மனஸாலோ, அல்லது இரண்டினாலுமோ அலையாக அலைந்து கொண்டேயிருப்பதற்குக் குரங்குதான் ரூபகம்.

ஒரு பசு இருக்கிறது, யானை இருக்கிறது – இவை மாம்ஸம் சாப்பிடுவதேயில்லை, சாக உணவுதான் தின்கின்றன என்றால் அதிலே ஆசார்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. 'பசித்தாலும் புல் தின்னாது' என்கிற ஒரு புலி சாக பட்சிணியாக மாறினால் அதுதான் ஆச்சர்யம்!

ஆஞ்ஜநேய ஸ்வாமியின் ஆச்சயர்மான பெருமை இதில்தான் இருக்கிறது சாஞ்சல்யத்துக்கே (சஞ்சலத்தன்மைக்கே) பேர்போன கபியாக அவர் இருந்த போதிலும், அதோடு மஹா பலிஷ்டராக இருந்தபோதிலும், மனஸைக் கொஞ்சங் கூட சஞ்சம், சபலம் என்பதேயில்லாமல் அடக்கி, புலன்களையெல்லாம் அடக்கி, இந்த்ரிய நிக்ரஹம் பண்ணி, சரீரத்தையும் ராமசந்த்ரமூர்த்தியின் தொண்டுக்கே என்று அடக்கி அடிபணிந்து அவர் இருந்ததுதான் அவருடைய மஹிமை.

இதிலே இன்னொரு ஆச்சர்யம், அவர் மனதை அடக்கினார், பூர்ணமான இந்த்ரிய கட்டுப்பாட்டோடே இருந்தாரென்றால், எல்லாக் கார்யத்தையும் விட்டு விட்டு எங்கேயோ குகையிலே மூக்கை பிடித்துகொண்டு உட்கார்ந்து விடவில்லை. ஜன ஸமூஹ ஸம்பந்தமில்லாமல், கார்ய ப்ரபஞ்சத்தில் பட்டுக்கொள் -ளாமல் எங்கேயோ ஒதுங்கி மூக்கைப் பிடித்துக்கொண்டு உட்காருபவர்கள் இந்த்ரியம், சித்தம் ஆகியவற்றை ஒடாமல் அடக்கிப்போட்டு விடலாம். ஆஞ்ஜநேயர் அப்படி இல்லை. 'அஸாத்ய ஸாகதர்' என்கிற அளவுக்குக் கார்ய ப்ரபஞ்சத்திலே செய்திருக்கிறார். ஸமுத்ரத்தையே தாண்டுவது, ஒருமலையையே தூக்கிக்கொண்டுவருவது, ஒரு பெரிய வனத்தை அப்படியே நிர்மூலம் பண்ணுவது, ஒரு பெரிய பட்டணத்தையே தஹனம் பண்ணுவது – என்றிப்படிச் செய்தவர் அவர்.

மனதை கொஞ்சம் கூட சலிக்காதவர், ஸ்ரீ ராமனின் பாதாரவிந்தத்தை விட்டு இங்கும் அங்கும் துளிக்கூட ஆடாமல் ஓடாமல் மனதை நிறுத்தியிருந்தவர். ஆனால் உடம்பால் அவரைப்போல ஓடி ஆடித் தொண்டு செய்த இன்னொருத்தர் இல்லை. ராம த்யானத்திலே அசையாத மனதை ராம கார்யத்திலே 'இதைவிட வேகமில்லை' என்னும்படியாக ஓடியாடுகிற உடம்பு!

ரொம்ப வேகமாக ஓடுவது எது?

'வாயுவேகம், மனோவேகம்' என்பார்கள்.

"காற்று மாதிரி இந்த மனசு கிடந்து பறக்கிறதே! காற்றைப் பிடித்து வைத்து அடக்க முடியாத மாதிரியே அல்லவா இந்த மனதையும் கட்டுப்படுத்தி வைக்க முடியுவில்லை?" என்று அர்ஜுனன் முறையிடுகிறான்:

ஆஞ்ஜநேய ஸ்வாமி யார்?

சஞ்சலத்துக்கே பேர்போன கபி இனத்தில் பிறந்த அவர் ஸதாகாலமும் சஞ்சலித்துக்கொண்டேயிருக்கும் வாயுவுக்குப் புத்ரர்! வாயு குமாரர். 'வாதாத்மஜர்' என்றும் சொல்வார்கள். 'வாத' என்றாலும் வாயுதானே? 'ஆத்மஜன்' என்றால் புத்ரன். வாத – ஆத்மஜன் என்றால் வாயு புத்ரன்.

வாதாத்மஜம் வாநர – யூத – முக்யம்

ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி

'யூதம்' என்றால் கூட்டம், ஸேனை. வானரப்படையில் முக்யஸ்தர் இவரே ஆனடிபயால் 'வாநர – யூத முக்யர்'

இது ச்லோகத்தின் பின் பாதி. முன் பாதி என்ன? அதிலே என்ன சொல்லியிருக்கிறது?

வாயுவேகம், மனோவேகம் என்று இரண்டு சொன்னேனே, அந்த இரண்டு வேகமும் படைத்தவர் இவர் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் மன்,

இந்த்ரியங்கள் ஆகியவற்றின் சலனத்தில் அல்ல. சரீரத்தாலே செய்கிற கார்யத்தில் தான் வாயுவேக, மனோவேகக்காரராக இருக்கறிவர்.

மநோ – ஜவம் மாருத – துல்ய – வேகம்

ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்

"மநோ – ஜவம்' – மனஸைப் போன்ற வேகம் கொண்டவர். 'ஜவம்'என்றால் வேகம்.

"மாருத – துல்ய வேகம்" – காற்றுக்கு ஸமமான வேகமுடையவர். 'மாருதம்' என்றாலும் காற்றுதான். 'மந்த மாருதம்' என்கிறோமல்லவா? மாருதத்தின் புத்ரர் என்பதால்தான் அவருக்கு 'மாருதி' என்று பெயர். 'வீர மாருதி கம்பீர மாருதி' என்று (பஜனையில்) பாடுவார்கள்.

ஓயாமல் சலிக்கிற மனஸைப் போல 'மநோஜவர்':அப்படியே, ஓயாமல் சலித்துக்கொண்டிருக்கிற வாயுவைப் போல 'மாருத – துல்ய – வேகர்', அவரே வாயுவின் பிள்ளைதான் – 'வாதாத்மஜர்', சஞ்சல ஸ்வபாவத்துக்கே பேர் போன கபிகுல முக்யஸ்தராக இருப்பவர் வேறே – 'வாநர – யூத – முக்யர்!'

இப்படியெல்லாம் இருக்கிறவருடைய ஆச்சர்யமான மஹிமை என்ன என்றால், இவரையே ச்லோகம்,

ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்

என்று ஸ்தோத்ரிக்கும்படியாகவும் இருக்கிறார்!

புலன்களை வென்றவர் இவர்:"ஜிதேந்த்ரியர்" – ஜித இந்த்ரியர் ஜயிக்கப்பட்ட இந்த்ரியத்தை உடையவர். மனஸ்தான் அத்தனை இந்த்ரிய கார்யத்துக்கும் மூலம். ஆகையால் அதை ஜயிப்பவர்தான் ஜிதேந்த்ரியர். மஹா சஞ்சலம் வாய்ந்த மனஸை ஜயித்த ஜிதேந்த்ரியர் இவர்.

அதனாலேதான் புத்திமான்களுக்கெல்லாம் உச்சியிலுள்ள 'புத்திமதாம் வரிஷ்ட'ராகி யிருக்கிறார். மனஸை நல்லதிலேயே 'ஸ்டெடி'யாக நிறுத்தி வைப்பதுதான் புத்தி. ஆகையினாலே ஜிதேந்த்ரியாக மனோ நிக்ரஹம் செய்துள்ள ஆஞ்ஜநேய ஸ்வாமி "புத்திமதாம் வரிஷ்ட" ராயிருக்கிறார்.

'புத்திமான்' என்று சொன்னாலே உசத்திதான். அதை விட உச்த்தி 'புத்திமதாம் வர' என்று சொல்லியிருந்தால். அப்படிச் சொல்லியிருந்தால் 'புத்திமான்களில் சிறந்தவர்' என்று அர்த்தம் கொடுக்கும். அதையும்விட உசத்தி, 'புத்தி மதாம் வரீய' என்று சொல்லியிருந்தால். சிறப்புப் பொருந்தியவர்களிலேயே ஒருத்தரை மற்றவேராடு ஒப்பிட்டு, 'கம்பேரடிவ்' – ஆக அவர் மற்றவரைவிட உயர்வு பொருந்தியவராக இருக்கும்போது 'வரீய' என்பார்கள். ஆனால், ஆஞ்ஜநேயரை இப்படிச் சொன்னால்கூடப் போதாது!இதையும் விட உசத்தியாக, "இதற்கு மேலே உசத்தியில்லை, இவரோடுகூட 'கம்பேரிஸ'னுக்கும் இடமில்லை, இவர்தான் புத்திக்கு 'ஸ¨பர்லேடிவ்', புத்திமான்கள் அத்தனை பேருக்கும் உச்சத்தில் இவரைத் தான்வைக்கணும்" என்றே (ச்லோகத்தில்) "புத்திமாதம் வரிஷ்ட" என்று சொல்லியிருக்கிறது. "வரிஷ்ட"தான் சிறப்பின் உச்சஸ்தானம். அதற்கு மேலேயும் இல்லை, ஸமதையும் இல்லை அதற்கு அடுத்தபடியாக 'கம்பேர்' பண்ணக்கூட இன்னொன்று இல்லை.

ஞானிகளில்கூட இப்படி ப்ரஹ்மவித், ப்ரஹ்மவித்வரன், ப்ரஹ்மவித்வரீயன், ப்ரஹ்மவித்வரிஷ்டன்' என்று உயர்த்திக் கொண்டே போவதுண்டு. மாருதி புத்திமதாம் வரிஷ்டர்.

ஆனால் இந்த இந்த்ரிய ஜயம், புத்திச் சிறப்பு எல்லாவற்றையும் விடப் பெரிய அவருடைய பெருமை என்னவென்றால் அவர் ராமதாஸனாக இருந்து, "பகவானுக்கு இவரைப் போலப் பணி புரிந்தவரில்லை" என்று அக்ர ஸ்தானம் (முதலிடம்) பெற்றிருக்கிறாரே, அதுதான். புத்திமான்களைப் போலவே பக்திமான்களுக்கு வரிஷ்டராயிருக்கிறாரே, அதுதான், தேஹ சக்தியோடு, புத்தி நுட்பத்தையும் ரொம்பவும் காட்டிச் செய்ய வேண்டிய பணி தூது போவது. அந்த தூதுப் பணியை ரொம்பவும் சிறப்பாகச் செய்த, ஸாட்சாத் ஸீதா – ராமர்களுக்கே துக்கத்தைப் போக்கிப் பெரிய நம்பிக்கையையும் உத்ஸாஹத்தையும் ஊட்டினாலே, அதற்காகத்தான் முக்யமாக அவரைத் தலை வணங்கிப் பணியவேண்டும் ."ஸ்ரீ ராமதூதம் சிரஸா நமாமி" என்று பாதத்தில் விழுந்து நமஸ்காரம் பண்ணவேண்டும்.

மநோஜவம் மாருத – துல்ய – வேகம்

ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் 1

வாதாத்மஜம் வாநர – யூத – முக்யம்

ஸ்ரீ ராமதூதம் சிரஸா நமாமி 11

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.