சிபிஐ, ஊழல் தடுப்பு (சிவிசி), தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) ஆகிய மூன்று ‘சி’-க்களைப்பற்றி அஞ்சாமல் தகுதியான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்கிடுங்கள் என வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா லாக்டவுனால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க ரூ.21 லட்சம்கோடி மதிப்பிலான தற்சார்பு பொருளாதார திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்தார். அந்தத்திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை கடந்தவாரம் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு தொடர்பாக கடன்வழங்குதல், பொருளாதார மறுமலர்ச்சிக்கான நடவடிக்கை குறித்து பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்தக்கூட்டத்தில் பேசப்பட்ட அம்சங்கள் குறித்து பாஜக தலைவர் நலின் கோலியிடம் காணொலி மூலம் நிர்மலா சீதா ராமன் பேசினார். அவர் அது தொடர்பான வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

அதில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

”தகுதியான வாடிக்கையாளர்களுக்கு கடன்வழங்கிடுங்கள் என்று பொதுத்துறை வங்கிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகள், வங்கிகளின் பொது மேலாளர்களுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளேன். கடன்களுக்கு 100 சதவீதம் மத்தியஅரசு பொறுப்பேற்றுள்ளதால், வங்கிகள் தகுதியான வாடிக்கையாளர்களுக்குக் கடன்வழங்குவதில் அச்சப்பட வேண்டாம்.

கடன் கொடுத்த வங்கியோ அல்லது வங்கி அதிகாரிகளோ கடன்களை வசூலிக்கா விட்டால் அவர்களை வலுக்கட்டாயமாக இழுக்க மாட்டார்கள். இந்த விஷயத்தை நான் வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். ஒருவேளை வங்கிஅதிகாரிகள், வங்கிகள் கடன் கொடுத்தது தவறாக அமைந்துவிட்டால், இழப்பு ஏற்பட்டால் 100 சதவீதம் அரசு பொறுப் பேற்கும். ஆதலால், வங்கி அதிகாரியோ அல்லது வங்கியோ எந்தவிதமான அச்சமும் இன்றி, தகுதியான வாடிக்கை யாளர்களுக்கு கடன் வழங்கலாம்.

கூடுதலாகக் கடன் பெறுவதற்கும், செயல்பாட்டுக் கடன்பெறவும் ஒவ்வொருவரும் தகுதியானவர்கள். வங்கித் துறை எடுக்கும் நல்ல முடிவுகள்கூட சிபிஐ, மத்திய ஊழல்தடுப்புப் பிரிவு (சிவிசி), மத்திய தலைமைக் கணக்கு தணிக்கை அலுவலகம் (சிஏஜி) ஆகிய 3 ‘சி’-க்களைப் பற்றிய அச்சத்தால் அந்தமுடிவுகளில் பாதிப்பு ஏற்படுகிறது என்று கவலைப்படுகிறார்கள். அந்த 3 ‘சி’-க்களைப் பற்றிக் கவலைப்படாமல் பணியாற்றி தகுதியான வாடிக்கையாளர்களுக்கு கடன்கொடுங்கள் எனத் தெரிவித்துள்ளேன்.

குறிப்பிட்ட துறைகளின் முன்னேற்றதுக்காக மட்டும் மத்திய அரசு திட்டங்களை வகுக்காமல் முழுமையான வளர்ச்சிக்காகவே திட்டங்களை வகுக்கிறது. வேளாண்துறை, மின்துறை தவிர்த்து மற்ற துறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப் படுகின்றன. குறு, நடுத்தர நிறுவனங்கள் நலனுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்துத் துறைகளுக்கும் சேர்த்து தான் அறிவிக்க பட்டுள்ளது.

ஜூன் 1-ம் தேதி முதல் வங்கிகள் எந்த விதமான பிணையும் இன்றி வாடிக்கை யாளர்ளுக்குக் கடன் வழங்கும் பணியை விரைவாக தொடங்குவார்கள் என நம்புகிறேன். அதன் பின் பணப் புழக்கம் அதிகரித்து பொருளதாரம் வேகமெடுக்கும். கடன் வழங்கும் வழிமுறையும் எளிதாக இருக்கும். நேரடியாக வங்கி அதிகாரிகளைச் சந்திக்காமல் டிஜிட்டல் முறையிலேயே கடன் வழங்கப்படும்”.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Comments are closed.