இந்தியா பலவீனமான நாடு அல்ல எந்த ஒருசக்திவாய்ந்த நாடாக இருந்தாலும் நமது நிலத்தில் ஒரு இன்ச்கூட தொட்டுவிட முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் எல்லையில் பிரச்சினை நிலவிவரக்கூடிய நிலையில், இன்று லடாக் புறப்பட்டுச் சென்றார் பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங். அவருடன் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவனே ஆகிய உயர் அதிகாரிகளும் அங்குசென்றனர்.

அங்கு இருக்கக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அவர் மேற்பார்வைசெய்தார். இதன்பிறகு ராணுவ வீரர்கள் மத்தியில் அவர் உரையாற்றுகையில் கூறியதாவது: எல்லைபிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இது, எந்தளவுக்கு பலன்தரும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.

உலகின் எந்த ஒரு சக்திமிக்க நாடாக இருந்தாலும் நமது நாட்டில் ஒரு இன்ச் இடத்தைகூட அவர்கள் எடுத்துக்கொள்ள முடியாது. ஒருவேளை பேச்சுவார்த்தைகளில் பலன்கிடைத்தால் அதை விட சிறந்த செய்திகிடையாது. இந்திய ராணுவ வீரர்கள் செய்த தியாகம் வீண்போக விடமாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

லடாக் எல்லைப்பகுதியில் நடைபெற்ற மோதலின்போது சீன ராணுவ வீரர்கள் தாக்கியதால், 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டசம்பவம் அரங்கேறியது. சீன தரப்பில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற தகவலை அந்தநாடு இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. அமெரிக்க உளவு அமைப்புகள் தகவல்படி அந்த நாட்டில் சுமார் 35 ராணுவவீரர்கள் கொல்லப் பட்டிருக்கலாம் என்றும், அவர்கள் ரகசியமாக அடக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கின்றன.

ஒரு பக்கம் ராணுவ தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில் ராஜ்நாத் சிங் இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். கடந்த 14ம் தேதி நடைபெற்ற ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் 15 மணிநேரம் நீண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.