உலகத்தையே இன்று சீனத் தயாரிப்புகள்தான் ஆட்சி செய்துகொண்டிருக்கின்றன. சின்னக் குழந்தைகளுக்கான 5 ரூபாய் ப்ளாட்ஃபார பொம்மையில் ஆரம்பித்து தட்டுமுட்டு சாமான்கள், ப்ளாஸ்டிக் பொருட்கள் என்று நம்மூரில் எல்லாமே சைனா மயம்! கம்பெனி  மொபைல்களை விட பத்து மடங்கு அதிக வசதியோடு வரும் சைனா மொபைல்கள் அதே கம்பெனி மொபைல்களுக்குப் பாதி விலையில் கிடைக்கின்றன. இந்த விலை வித்தியாசம்தான் அவர்களை உலகம்

முழுக்கப் பரவ வைத்திருக்கிறது. "விலையெல்லாம் ஓ.கே. ஆனால் தரம்?' என்று நீங்கள் கேட்டால், அதற்கான பதில் அதிர்ச்சி தருவதாகத்தான் இருக்கிறது. ஆம். விலையைக் குறைத்துத் தந்தால் போதும், தரம் பற்றிக் கவலை இல்லை' என்று நினைக்கும் சீனத் தயாரிப்புகளால் உலக அளவில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் உள்ளூர் சீன மக்களும் அடங்குவர்.

விளையாட்டுப் பொருளல்ல விஷப்பொருள்.. க்ளாடியா ஜுப்லெட் என்ற சீன நிறுவனம் தயாரித்த குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களில் எல்லாம் அளவுக்கு அதிகமாக காரீயம் கலந்திருப்பது 2007இல் கண்டுபிடிக்கப் பட்டது. இது உடலுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது என்பதால், விற்பனைக்கு வைத்திருந்த விளையாட்டுப் பொருட்களைத் திரும்ப எடுத்துக் கொண்டது அந்நிறுவனம்.

குழந்தைகளைக் கொல்லும் உணவு! சீனாவில் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான உணவு வகைகளில் மெலமைன் என்ற நச்சுப் பொருள் இருப்பது 2008இல் தெரிய வந்தது. பல குழந்தைகளுக்கு இதனால் உடல்நிலை பாதிக்கப் பட்டது. 860 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன. ஆறு குழந்தைகள் இறந்தனர். இதனால் இந்த நச்சு விஷயம் உலகிற்குத் தெரிய வந்தது..

எலக்ட்ரானிக் ஷாக் சீனாவில் தயாரிக்கப்படும் பல எலக்ட்ரானிக் சாதனங்களில் ஒயர்கள் சரிவர அமைக்கப்படுவ தில்லை. இதனால் இந்த சாதனங்கள் தீப்பற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. எனவே பல சீன எலக்ட்ரானிக் சாதனங்கள் வெளிநாடுகள் பலவற்றில் தடை செய்யப்பட்டிருக்கின்றன.

பல் சுத்தமாகும் உடல் கெட்டுவிடும்.. சீனாவில் தயாரிக்கப்படும் பற்பசைகளில் டை எத்திலீன் க்ளைக்கால் என்ற நச்சுப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது மூளை, கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றைப் பாதிக்கும். மருந்தல்ல இது விஷம்! 2008இல் சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஹெபாரின் என்ற மருந்து பலரின் உயிரைப் பறித்தது. 81 பேர் இறந்தனர். 700க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. வர்ணம் ஏற்படுத்தும் ரசாயனம்! சீனக் குழந்தைகளின் உடலில் காரீயம் மூலம் வரும் நச்சுப் பொருள் அதிக அளவில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. காரணம் சீனப் பொருட்களில் பூசப் பட்டிருக்கும் வண்ணங்களிலிருந்து காரீயம் உடலில் சேர்வது தெரியவந்துள்ளது.

குழந்தைகள் விஷயத்தில் உஷார்! பல வகை சீன சாக்லேட்கள், பால்பவுடர், சீன ரொட்டி ஆகியவற்றில் மெலமைன் என்ற நச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நாய்கள் கூட தப்பவில்லை! சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட நாய்களுக்கான உணவு வகைகளில் நச்சுப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. 2007இல் இதனை உண்ட நாய்கள் பலவும் இறந்தன.

ஆபத்தான பயணம்! சீனாவில் தயாரிக்கப்படும் டயர்களில் சில பாதுகாப்புப் பட்டைகள் இல்லாதது 2007இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் டயர்களின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது. வேகமாக வண்டி ஓடும்போது விபத்துகள் ஏற்படலாம்.

கழுத்தைச் சுத்தும் பாம்பு! சீனாவில் செய்யப்படும் அலங்கார நகைகளில் அதிக அளவில் காட்மியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நச்சுப் பொருள் தெரியாமல் வாயில் பட்டு கொஞ்சம் வயிற்றுக்குள் போனாலும், அது சிறுநீரகங்களையும், எலும்புகளையும் பாதிக்கும்.

ஆப்பிள் நல்லதா? சீனாவிலிருந்து ஏற்றுமதியாகும் காய்ந்த ஆப்பிள்களில் புற்றுநோயை உருவாக்கும் நச்சு இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காலனாகும் காளான்! சீனாவிலிருந்து ஏற்றுமதியாகும் காளன்களில் பூச்சி மருந்து அளவுக்கு அதிகமாக இருக்கிறது. அதனாலேயே அதனைப் பல நாடுகள் தடை செய்துள்ளன.

கொள்ளை நோயைப் பரப்பும் வெள்ளை! சீனாவில் தயாரிக்கப்படும் சுவர்ப் பூச்சுகள் சல்ஃபர் வாயுக்கள் வெளியிடும் என்றும் அந்தச் சுவரிலே பொருத்தப்படும் ஒயர்களையும் பைப்களையும் பாதிக்கும் என்றும் கண்டறிந்துள்ளார்கள். இந்த சல்ஃபர் வாயுக்களால் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. மின்சார விபத்துகளும் ஏற்படுகிறது.

இன்று தமிழ்நாட்டிலும் எல்லோரது வீட்டிலும் பல கிலோ அளவிற்கு சீனா பிளாஸ்டிக் குப்பைகள் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் ஆபத்தை அரசோ, அரசியல்வாதிகளோ, சுற்றுச்சூழல் துறையோ எவருமே உணரவில்லை! சீனப் பொருட்களைத் தடை செய்வதைப் பற்றியோ, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றியோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பூதாகாரப் பிரச்னைக்குக் கையாலாகாத மத்திய அரசும், ஆளும் கட்சிகளுமே காரணம்! இந்த ஆபத்தைப் பற்றிய விழிப்புணர்வை நாம் தான் பரப்ப வேண்டும். பரப்பினால் மட்டுமே தடுக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.