சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர், அகில பாரத அளவில் புகழ்பெற்றார். அவரது வார்த்தைக்கு அவர் பேசுகின்ற மொழி தெரியாதவர்கள்கூட மதிப்பு கொடுத்தார்கள். அவரைக் கண்டு ஆங்கில அரசாங்கம் நடுங்கியது. ஆங்கிலேய அரசாங்கம் அவரை ஒரு வழக்கில் சிக்க வைத்து, கைது செய்து சிறையில் அடைத்தது. அவர் கைது செய்யப்பட்டார் என்றவுடன் நாடு கொந்தளித்தது.

பம்பாய் நகரில் 2 மாதங்கள் வரை ஸ்டிரைக் நீடித்தது. வழக்கை தானே வாதாடி வெற்றிபெற சட்டம் படித்தார் அந்தச் சுதந்திரப் போராட்ட வீரர்! ஆங்கிலேயன் போட்ட வழக்கைச் சுக்குநூறாக உடைத்தெறிந்து விடுதலையானார். அவர் கைது செய்யப்பட்டதற்கு நாடே கொந்தளித்தது, ஆனால் அவர் விடுதலையாகி வரும்போது அவரை வரவேற்க ஒருவர்கூட சிறைவாசலுக்கு வரவில்லை!

தானாகவே வீடு வந்து சேர்ந்தார். நாடுமுழுவதும் சுதந்திர ஞான வேள்வியை கொண்டு செல்லும் சாதனமாக அவர் நடத்தி வந்த பத்திரிகையையும் அவரது நண்பர்கள் நிறுத்தியிருந்தார்கள். இவற்றையெல்லாம் கண்டு மனம் தளராத அந்தப் போராட்ட வீரர், மக்களை இன்னமும் நாம் முழுமையாகத் தயார்படுத்தவில்லை,

இது அவர்கள் தவறல்ல என்று எண்ணி, தனது பத்திரிகை அலுவலகம் சென்று மேஜை மேலிருந்த தூசியைத் தட்டி சுத்தம் செய்து பேப்பர், பேடை எடுத்து பத்திரிகை தலையங்கத்திற்கு எழுதத்துவங்கினார்.

தலைப்பு ""மீண்டும் பிள்ளையார் சுழி!''

மனங்கலங்காத அந்த வீரர் பாலகங்காதர திலகர் ஆவார். சுதந்திரம் நமது பிறப்புரிமை என்று முழங்கியவர் அவர்!

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.