இந்த உலகில் தெய்வீக அவதாரம் எடுத்துப் பலர் தோன்றி மறைந்து உள்ளனர். ஆனால் அவற்றில் சில அவதாரங்கள் பலருக்கும் தெரியாத வகையில் சிலருக்கு மட்டுமே தெரியும்படி இருந்து விட்டு மறைவது ஏன் என்பது தெரியவில்லை. அப்படிப்பட்ட அவதாரப் புருஷர்களில் ஒருவரே காஷிநாத் சாஸ்திரிஜி என அழைக்கப்பட்டவர்.

 

1870 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள சதானா என்ற ஊரில் பிறந்தவர். குழந்தை வயது முதலேயே அசாதரணக் குழந்தையாகப் பிறந்தவர் படிப்பில் நாட்டம் இன்றி இருந்தார். படிப்பில் கவனம் செலுத்தாததினால் வீட்டில் தினமும் அடியும் உதையும் பட்டார். ஆனாலும் படிப்பு ஏறவில்லை. யோகா, பிராணாயம் போன்ற கலைகளில் தன் கவனத்தைத் திருப்பினார். வீட்டில் உள்ளவர்கள் கவலை அடைந்தனர். வீட்டினருக்கு வேண்டியவர் ஒருவர் பையனுக்குத் திருமணம் செய்து விட்டால் மாறி விடுவான் என்று கூற காஷிராமுக்கு இளம் வயதிலேயே திருமணமும் செய்து விட்டனர்.

திருமணம் ஆகியும் காஷிநாத்தின் மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை. பதினைந்து வயதானபோது எவரிடமும் கூறிக் கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறி விட்டார். அதனால் அவருடைய பெற்றோர்கள் மனம் உடைந்துப் போயினர். அவர்கள் நோய்வாய்பட்டு படுக்கையில் விழுந்து விட எவர் மூலமோ அது பற்றிக் கேள்விப்பட்ட காசிநாத் மீண்டும் வீட்டுக்குத் திரும்பி வந்தார். ஆனால் விதி விளையாடி இருந்தது. அவர் வெளியேறிவிட்டதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போன அவருடைய மனைவி துக்கம் தாங்காமல் மரணம் அடைந்து விட்டாள். ஆகவே மீண்டும் அவரைக் கட்டாயப்படுத்தி அவருக்கு இரண்டாம் திருமணமும் செய்து வைத்தனர். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்கு காஷிநாத் தள்ளப் பட்டார். படிப்பு அறிவு அற்ற அவருக்கு யார் வேலை தருவார்கள். ஆகவே மீண்டும் வெளியூருக்குச் சென்று கூலி வேலை செய்து, சாலை ஓரங்களில் உறங்கிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டத் துவங்கினார்.

இப்படி எல்லாம் கஷ்டப்பட்டுக் கெண்டு இருந்த காஷிநாத் வாழ்வில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. ஒரு சன்யாசியை அவர் வழியிலே சந்தித்தார். அவர் காஷிநாத்திடம் சம்சார வாழ்க்கையைத் துறந்து விட்டு பக்தி மார்கமான ஆன்மீக வாழ்க்கையில் செல்லுமாறு அறிவுறை தந்தார். அதை ஏற்றுக் கொண்ட காஷிநாத்தும் மகாராஷ்டிராத்தில் இருந்த கல்யாண் என்ற இடத்துக்குச் சென்றார். அங்கு சென்றவர் அந்த சன்யாசி கொடுத்திருந்த அறிவுறைப்படி தண்ணீர் அருந்தியும், பிட்சை எடுத்த உணவை உண்டுமே வாழ்க்கையை ஓட்டி வந்தார். உடல் நலிவற்றது. அந்த வாழ்க்கையும் கசந்து போக மீண்டும் அவர் தன் சொந்த ஊரான சதானாவுக்கே திரும்பி வந்தார்.

அவருக்கு வயது நாற்பது ஆயிற்று. அவருடைய நண்பர்கள் சிலர் 1911 ஆம் ஆண்டு அவரை வற்புறுத்தி சீரடி சாயிபாபாவிடம் அழைத்துச் சென்றனர். அந்த வாழ்க்கையினால் தனக்கு என்ன மாற்றம் வர உள்ளது என்பது அவருக்கே தெரியாது. சாயிபாபாவிடம் தெய்வீகப் பாடங்களைக் கற்றிந்த பின் மீண்டும் தன் வீட்டுக்குச் செல்ல முடிவு செய்தார். சாயி பாபாவுக்கோ அவரை ஊருக்குச் செல்ல அனுமதிக்க மனம் இல்லை. ஆனாலும் காஷிநாத் மிகவும் வற்புறுதியதினால் ஊருக்குச் சென்றுவிட்டு திரும்புமாறு அவரை அனுப்பினார். ஆனால் ஒரு நிபந்தனை. ஊருக்குச் சென்றுவிட்டு சரியாக எட்டாவது நாள் மீண்டும் தன்னை வந்து சந்திக்க வேண்டும்.

கையில் பணம் இல்லை. ஆகவே ஊருக்கு நடந்தே செல்லத் துவங்கினார் காஷிநாத். எட்டாவது நாள் வந்தது. இன்னமும் ஊரை அடையவே இல்லை. ஆனால் கூறியபடி மீண்டும் சாயிபாபாவிடம் செல்ல வேண்டும். எங்கு வந்து உள்ளோம் என அங்கும் இங்கும் பார்த்த காஷிநாத் வியப்பு அடைந்தார். அவர் இங்கும் அங்குமாக தன் ஊருக்குச் செல்வதாக நினைத்துக் கொண்டு சீரடியைத் தாண்டி எட்டே கி.மீடர் தொலைவுவரைதான் சென்று இருந்துள்ளார். வேறு வழி இன்றி கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மீண்டும் சீரடிக்குச் சென்று சாயிபாபாவின் முன்னால் சென்று நின்றவரைக் கண்ட சாயிபாபா அவரைப் பார்த்து விஷமத்தனமாக சிரித்தார்.

அதன் பின் அவர் காஷிநாத்திடம் அவர் வேறு எங்கும் போக வேண்டாம் எனவும், இனி அங்கேயே ஒரு அறையில் தம் பக்தர்களுடன் தங்கி இருக்குமாறு கூறிவிட காஷிநாத்தும் அங்கேயே தங்கினார். காலம் ஓடியது. அங்கிருந்த பக்தர்கள் மூலம் மெல்ல மெல்ல சாயிபாபாவின் அற்புதங்களைப் பற்றி காசிநாத் தெரிந்து கொண்டார். மனம் அலை பாய்வது நின்றது. ஒரு நாள் சாயிபாபா சத்சங்கத்தின்போது ஒரு கதையைக் கூறினார். அது காஷிநாத்தின் வாழ்க்கையைப் போலவே இருந்ததினால் அதைக் கேட்டு முடிந்தப் பின் காஷிநாத் விக்கி விக்கி அழுதார். அவரை தன் அருகில் அழைத்த சாயிபாபா தன்னுடன் அவரை இறுக அணைத்துக் கொண்டார். அனைவர் முன்னிலையிலும் சாயிபாபா அறிவித்தார் "இனி காஷிநாத் என்னுடையவன். அவன் செய்யும் நல்லவைகளும் தீமைகளும் என்னையே வந்து சேரும். எனக்கும் அவனுக்கும் இனி வேறுபாடு இல்லை. சாயிபாபாவின் அறிவுறையை ஏற்று நடந்து வந்த காசிநாத் உலகப் பற்றைத் துறந்தார்.

தான் எங்கு சென்றாலும் சாயிபாபா தன்னைத் தொடர்ந்து வருவதைக் கண்டார். ஒரு நாள் அவர் சமையல் செய்து கொண்டு இருந்த போது ஒரு கறுப்பு நிற நாய் அங்கு வந்து அவரை நோக்கியவண்ணமே இருந்தது. சமைத்து முடித்தப் பின் நாய்க்கு ஒன்றும் போடாமல் சாயிபாபாவுக்கு உணவை எடுத்துப் போனார் காஷிநாத். அவரைக் கண்ட சாயிபாபா அவரிடம் கேட்டார் "இத்தனை தூரம் நீ ஏன் உணவை எடுத்து வந்தாய்? நான்தான் நாயாக அங்கு வந்தேனே அப்போதே தந்து இருக்கலாமே". அதைக் கேட்ட காஷிநாத் வியப்பு அடைந்தார். அருக்கு ஒரு பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது. தன் பக்கத்து வீட்டில் இருந்த பிராமணர் ஒருவர் சாயிபாபாவுக்கு உணவு தரப்போனபோது எதிரில் ஒரு பிச்சைக்காரன் வந்தான். அந்த பிச்சைக்காரனை அவர் துரத்திவிட்டு சாயிபாபாவுக்கு உணவை தந்தபோது பாபா கேட்டார் " நான் பிச்சைக்காரன் உருவில் உன்முன் பசியுடன் வந்தபோது உணவு தராமல் துரத்திவிடடு இப்போது தருகிறாயே!" அந்த சம்பவத்தையும் தனக்கு ஏற்பட்ட சம்பவத்தையும் நினைத்து வருந்தினார்.

1913 ஆம் ஆண்டு. அன்று குருபூர்ணிமா தினம். தனக்கு பூஜை செய்ய வந்த பக்தை ஒருவளை 'எனக்கு எப்படி பூஜை செய்வாயோ அப்படியே காஷிநாத்திடம் சென்று பூஜை செய்' எனக் கூறி அவளை காஷிநாத்திடம் பாபா அனுப்பினார். அந்தப் பெண்ணும் காஷிநாத்திடம் சென்று பூஜை செய்யத் துவங்க முதலில் அவள் பூஜையை ஏற்க மறுத்து அவளைத் துரத்தினார் காஷிநாத். வந்தவள் விடுவதாக இல்லை. சாயிபாபா கூறி விட்டார், ஆகவே பூஜை செய்தே தீருவேன் எனப் பிடிவாதமாக அவருடைய பாதங்களுக்குப் பூஜை செய்தாள். சாயிபாபர் 'அவன் தேகம் மட்டுமே காஷிநாத். அவனுள் உள்ள ஜீவன் நான்தான்' என தம்மிடம் கூறியதாக அவள் அவரிடம்கூறினாள். அதைக் கேட்டதும் காஷிநாத் பூஜையை ஏற்றுக் கொள்ள சாயிபாபா அவருக்கு உபாசினி மகராஜ் என்ற பெயரை சூட்டினார்.

காலம் ஓடியது. காஷிநாத் எனும் உபாசினி மகராஜ் முழுவதும் ஞானம் பெற்ற மகானாகி விட்டார். ஒருநாள் அவருக்கு ஒரு கனவு வந்தது. அதில் அவரும் சாயிபாபாவும் தனிமையில் அமர்ந்து இருந்தபோது அவர் காதில் பாபா எதோ மந்திரம் ஓதினார். அப்போது காஷிநாத்தைப் போலலே இன்னொரு உருவம் அங்கு வந்து அதைத் தடுக்க முயல அதை அடித்துத் தன்ளிய சாயிபாபா அதற்கு தீயும் வைத்து எரித்தார். அந்த கனவைப் பற்றி சாயிபாபாவிடம் உபாஸினி மகராஜ் கூற பாபா கூறினாராம் 'வந்தது வேறு யாரும் அல்ல. உன்னுடைய பழைய ஆத்மாதான். ஆகவேதான் அதை நான் அடித்துத் துரத்தி அழித்தும் விட்டேன். இனி உன்னுள் இருப்பது நான் மட்டுமே'.

நாட்கள் செல்லச் செல்ல உபாசினி மகராஜுக்கு பக்தர்கள் குவிந்தனர். 1914 ஆம் ஆண்டு பாபாவிடம் விடை பெற்றுக் கொண்டு நாக்பூருக்குச் சென்று ஆசிரமம் ஒன்றை அமைத்து தமது சக்தியை பக்தர்களுக்குக் காட்டி வந்தார். பல இடங்களுக்கும் சென்று கொண்டு இருந்தவரை சாயிபாபாவின் மறு அவதாரமாகவே ஏற்றுக் கொண்ட பக்தர்களுக்கு அருள் புரிந்து கொண்டு வந்தார். அவர் கொண்டுவர முயற்சித்த பெண்கள் உரிமையினால் அவர் வாழ்விலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. அனைத்தையும் சமாளித்து வெற்றி கொண்டவர 1917 ஆம் ஆண்டு அனைவரிடமும் முன்கூட்டியே கூறிய தேதியின்படி சமாதி அடைந்தார்.

Tags; சீரடி சாயிபாபாவின், ஜீவன், உபாசினி மகராஜ் , ஆன்மிக சிந்தனைகள்,ஆன்மிக சிந்தனை, ஆன்மிகம்

நன்றி சாந்திப்பிரியா 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.