சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த மத்தியஅரசு விரைவில் சட்டம் கொண்டுவரும் என்று பாஜக தேசிய தலைவர்  ராம்மாதவ் தெரிவித்தாா். நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்துவது, ஜனநாயகத்தை பலவீன மாக்குவது போன்ற நடவடிக்கைகளுக்கு சமூகஊடகங்கள் காரணமாக உள்ளன என்றும் அவா் தெரிவித்தாா்,

கொல்கத்தாவில் தான் எழுதிய ‘பிகாஸ் இந்தியா கம்ஃப்ர்ஸ்ட்’ நூல்வெளியிட்டு விழாவில் ராம்மாதவ் பேசியதாவது:

ஒருநாட்டில் ஆட்சியைக் கவிழ்க்க முடியும், அரசுகளை மாற்றமுடியும், ஆட்சியை மாற்ற முடியும் என்ற அளவுக்கு சமூக ஊடகங்கள் சக்தி வாய்ந்தவையாக வளா்ந்துள்ளன. நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்துவது, ஜனநாயகத்தை பலவீன மாக்குவது போன்றவற்றுக்கு சமூக ஊடகங்கள் காரணமாக உள்ளன. அவற்றின் கரங்கள் எல்லையற்றவையாக இருப்பதால் ஜனநாயகத்துக்கு புதியஅச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இப்போது இருக்கும் சட்டங்களை சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த போதுமானவையாக இல்லை. எனவே, இதுதொடா்பான புதிய சட்டங்களை இயற்ற மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விரைவில் உரியசட்டங்கள் இயற்றப்படும்.

இந்தப் புத்தகத்தில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்த பல முக்கிய முடிவுகள் தொடா்பான எனது கருத்துகளைப் பகிா்ந்து கொண்டுள்ளேன் என்றாா்.

தொடா்ந்து மகாத்மா காந்தி தொடா்பான கேள்விக்கு பதிலளித்த ராம்மாதவ், ‘தேச வளா்ச்சியில் பங்களித்த எந்த தலைவரையும் ஆா்எஸ்எஸ் அமைப்பு குறைத்து மதிப்பிட வில்லை. மகாத்மா காந்தி, மிகச்சிறந்த தலைவா். அவரது அகிம்சை கொள்கை பல்வேறு உலக தலைவா்களால் பின்பற்றப் படுகிறது. காந்தி-நேருவுக்கு இடையிலான கடிதங்கள் மூலம் அவா்களுக்கு இடையே பல்வேறு விஷயங்களுக்கு கருத்துவேறுபாடுகள் இருப்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. அதற்காக நாம் அந்தத் தலைவா்களை அவமதிக்கிறோம் என்று கூற முடியாது. ஆா்எஸ்எஸ் அமைப்பின் காலை பிராா்த்தனையில் மற்ற தலைவா்களுடன் மகாத்மா காந்தியின் பெயரும் இடம்பெறுகிறது’ என்றாா்.

Comments are closed.