பக்தர்களின் சரண கோஷத்திற்கிடையே சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி பிரகாசித்தது. இதை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்தனர்.

கடந்த டிச.,30-ம் தேதி துவங்கிய மகரவிளக்கு கால பூஜையின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மகரவிளக்கு பெருவிழா நடைபெற்றது.

பந்தளத்தில் இருந்து கடந்த 13-ம் தேதி புறப்பட்ட திருவாபரணபவனி இன்று மாலை 5.30 மணி வாக்கில் சரங்குத்தி வந்தடைந்தது. தேவசம்போர்டு அதிகாரிகள் சென்று முறைப்படியாக வரவேற்பு கொடுத்த பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பவனி 6.20 மணி வாக்கில் சன்னிதானம் வந்தது. பக்தர்கள் சரணகோஷம் முழங்க 18-ம் படி வழியாக ஒரு திருவாபரண பெட்டி வந்தது. இரண்டு பெட்டகங்கள் மாளிகைப்புறம் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஸ்ரீகோயில் முன்பு திருவாபரணபெட்டியை தந்திரியும், மேல்சாந்தியும் பெற்று நடை அடைத்தனர். தொடர்ந்து திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு நடை திறந்து தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சன்னிதானத்தில் குழுமியிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் கண்கள் பொன்னம்பலமேட்டை நோக்கியிருந்தது. தீபாராதனை முடிந்த சில நிமிடங்களில் மாலை 6.40 மணியளவில் மகர ஜோதி ஒளிவிட்டு பிரகாசிக்க துவங்கியது. இதை கண்ட பக்தர்கள் சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டனர். பின்னர் மூன்று முறை மகரவிளக்கு காட்சி தந்தது. ஜோதியும், விளக்கும் கண்டு தரிசித்த ஆனந்தத்தில் பக்தர்கள் மலை இறங்கினர்.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.