இலங்கை உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி அடுத்த வாரம் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும் 10ம் தேதியன்று, தனது சுற்றுப் பயணத்தை அவர் தொடங்குகிறார்.

இலங்கைக்கு 1987ஆம் ஆண்டு இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி சென்றார். அவருக்கு அடுத்ததாக, 25 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கைக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆவார்.

இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்க பட்டிருப்பதாவது:

இந்த ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தனது முதல்வெளிநாட்டு சுற்றுப்பயணமாக செஷல்ஸ், மோரீஷஸ், இலங்கை ஆகிய 3 நாடுகளில், வரும் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை சுற்றுப் பயணம் செய்கிறார்.

தனது பயணத்தின் முதல் கட்டமாக செஷல்ஸ் செல்லும் பிரதமர் , மார்ச் 11ம் தேதியன்று அந்நாட்டு அதிபர் ஜேம்ஸ் அலெக்சிஸ் மிச்செல்லுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். அப்போது அவர், இரு நாடுகளுக்கு இடையே கடற்படை ரீதியிலான உறவை வலுப் படுத்துவது, வளர்ச்சி தொடர்பாக ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து செஷல்ஸ் அதிபருடன் ஆலோசனை நடத்துகிறார்.

அதைத் தொடர்ந்து, மோரீஷஸில் 11, 12 ஆகிய இரு தினங்கள் பிரதமர் மோடி சுற்றுப் பயணம் செய்கிறார். அங்கு அவர், மோரீஷஸ் பிரதமர் அனிருத் ஜகந்நாத்துடன் முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். மோரீஷஸின் தேசிய தின கொண்டாட்டத்திலும் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருக்கிறார்.

பின்னர், இலங்கையில் 13, 14 ஆகிய இரு தினங்களுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார். இலங்கைக்கு வரும் மோடிக்கு, அணிவகுப்பு மரியாதை, துப்பாக்கி குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

அதைத்தொடர்ந்து, இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனாவுடன், பிரதமர் மோடி இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இலங்கை நாடாளு மன்றத்தின் சிறப்பு அமர்விலும் மோடி உரையாற்றவுள்ளார். இலங்கை அதிபர் சிறீசேனா, அரசு சார்பில் சிறப்பு விருந்து அளிக்கவுள்ளார்.

இலங்கைக்கு அமைதிப் பணிக்காக வந்து உயிர் நீத்த இந்திய அமைதி காப்புப்படையினரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்துக்கு சென்று மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தவுள்ளார். கொழும்பு அருகே உள்ள மகா போதி சங்கத்துக்கும் அவர் செல்கிறார்.

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் நிதி யுதவியுடன் செயல்படுத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாசார மையத்துக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். யாழ்ப் பாணத்தில் இந்தியாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள வீடுகளை, பயனாளிகளுக்கு பிரதமர் அளிக்கவுள்ளார். அனுராத புரத்தில் உள்ள ஸ்ரீமகா போதி என அழைக்கப்படும் போதிமரத்தின் கிளையில் இருந்து உருவான மிக பழைமையான புனிதமரத்தையும் அவர் பார்வையிடுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply